Posted by Haja Mohideen
(Hajas) on 7/12/2012
|
|||
மாணவர்கள் பரவாயில்லே போல.. தேர்வு பயத்தால் டென்ஷனில் மூழ்கிப் போன 'மிஸ்'களும், 'சார்'களும்!!Published: வியாழக்கிழமை, ஜூலை 12, 2012, 16:01 [IST]
சென்னை: இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி முடிப்பதற்குள் ஆசிரியர்களுக்கும், ஆசிரியைகளுக்கும் போதும் போதுமென்றாகி விட்டது. மாணவர்கள் எப்படி பரீட்சையின்போது பரிதவித்துப் போவார்களோ அதை விட இரண்டு மடங்கு டென்ஷனில் டீச்சர்கள் மூழ்கிப் போய் வி்ட்டனர். மத்திய அரசின் உத்தரவின் பேரில் தமிழக அரசு இன்று ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தியது. தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட ஆறரை லட்சம் பேர் இத்தேர்வை இன்று எழுதினர். இடை நிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இத்தேர்வு இன்று நடந்தது. தேர்வு நேரம் ஒன்றரை மணி நேரம்தான். தேர்வு பொதுவாக எளிதாக இருந்ததாக ஆசிரியர்கள் கூறினார்கள். ஆனால் கணிதப் பாடம் மட்டும்தான் சற்று கடினமாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் ஒன்றரை மணி நேரம் என்பது மிகவும் குறைவானது என்றும் பலர் சோகமாக தெரிவித்தனர். தேர்வு மையங்களில் பல சுவாரஸ்யமான காட்சிகளைக் காண முடிந்தது.. - பெரும்பாலான ஆசிரியர்கள் இளம் வயதினராக இருந்தனர். அவர்களில் பலருக்கு கைக்குழந்தைகள் இருந்தன. அவற்றைக் கவனித்துக் கொள்வதற்காக கணவர்மார்கள், அப்பா, அம்மாக்கள், மாமியார், மாமனார்கள் என சகலரும் வந்திருந்தனர். - பால் புட்டிகள், மரத்தில் தொட்டில் கட்ட சேலை, குழந்தைகளை சிரிக்க வைக்க கிளுகிளுப்பை உள்பட சகல முன்னேற்பாடுகளுடன் அவர்கள் வந்திருந்தனர். - ஆண்களை விட பெண்களே அதிகம் தேர்வு எழுதினர். அவர்களுக்குத் துணையாக வந்திருந்தவர்கள் பிளாஸ்க்கில் டீ கொண்டு வந்து அவ்வப்போது கொடுத்து டென்ஷனைக் குறைத்தபடி இருந்தனர். - மாணவர்கள்தான் வழக்கமாக பரீட்சையின்போது செம டென்ஷனாக இருப்பார்கள். ஆனால் அதற்கு நேர் மாறாக இன்று பெரும்பாலான ஆசிரியர்கள், ஆசிரியைகள் ஏக பதட்டத்துடன் காணப்பட்டனர். குறிப்பாக ஆசிரியைகள்தான் செம டென்ஷனாக காணப்பட்டனர். வெட வெடத்தபடியும், படபடத்தபடியும், காணப்பட்ட அவர்களை உடன் வந்தவர்கள் பதட்டப்படாம போய் எழுதிட்டு வாம்மா என்று தட்டி்க் கொடுத்து அனுப்பியதைக் காண முடிந்தது. - தேர்வு மையங்களுக்குள் பரீட்சை எழுத உட்கார்ந்திருந்த ஆசிரியர்களுக்கான தேர்வு கண்காணிப்பாளர்களும் கூட ஆசிரியர்கள்தான். இந்தக் காட்சி பார்க்கவே படு வித்தியாசமாக இருந்தது. - சில மாணவர்கள் தேர்வு தொடங்கியதும் தாமதமாக வருவதைப் போல பல ஆசிரியர்கள் தேர்வு தொடங்கிய பிறகு அரக்கப் பறக்க ஓடி வந்தனர். அவர்களை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் சோகமாக வெளியேறினர்...இப்போது புரிந்ததா மாணவர்களை நீங்கள் வெளியேற்றும்போது அவர்கள் படும் பாட்டை... - தேர்வு எழுதும் ஆசிரியர்கள் கையில் கால்குலேட்டேர், பென்சில், செல்போன் உள்பட எதையும் கொண்டு வரக் கூடாது என்று கூறப்பட்டதால் அவை எதுவும் இல்லாமல் தேர்வை எழுதினர். - வெகு தூரத்திலிருந்து வந்திருந்த ஆசிரியர்கள், தங்களுக்கான மையங்களுக்கு காலையிலேயே வந்து விட்டனர். ஆங்காங்கே மரத்தடியிலும், பெஞ்சுகளிலும் அமர்ந்து விழுந்து விழுந்து அவர்கள் படித்துக் கொண்டிருந்தது காணக் கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. - தேர்வில் யாராவது பிடி அடித்தாலோ அல்லது இன்ன பிற முறைகேடுகளில் ஈடுபட்டாலோ, 3 ஆண்டு தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக யாரும் அப்படி எதையும் செய்யவில்லை என்று தெரிகிறது. மொத்தத்தில் இத்தனை நாட்களாக மாணவர்களை தேர்வுகளின்போது கண்காணித்த மிஸ்களும், சார்களும் இன்று படபடப்போடு தேர்வு எழுதிய காட்சி ரொம்பவே வித்தியாசமாக இருந்தது. தேர்வு எழுதிய ஆசிரியர்களும் நல்லதொரு அனுபவத்தை சந்தித்த திருப்தியோடு தேர்வு மையங்களிலிருந்து வெளியே வந்ததப் பார்க்க முடிந்தது. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |