கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாந்து போனோம்: முதலீட்டாளர்கள் கண்ணீர்
Published: புதன்கிழமை, ஆகஸ்ட் 8, 2012, 12:09 [IST]
பெருந்துறை : ஈமு கோழி நிறுவனங்கள் பேப்பரிலும், தொலைக்காட்சிகளிலும் அளித்த கவர்ச்சிகரமான விளம்பரங்களை உண்மை என்று நம்பி ஏமாந்து போனதாக பலகோடி ரூபாய்களை முதலீடு செய்துள்ள விவசாயிகள் வேதனையுடன் கூறியுள்ளனர்.
"சில லட்சங்களை முதலீடு செய்யுங்கள், சில மாதங்களில் கோடீஸ்வரர் ஆகிவிடலாம்'' தினசரி பேப்பரை திறந்தாலே இந்த வாசகம் கண்ணில் படுகிறது. மிகப்பெரிய கோழிகள் பின்னணியில் நிற்க அதன் முன்னால் சத்தியராஜ், பாக்கியராஜ், மதன்பாப், பார்த்திபன் உள்ளிட்ட நடிகர்களில் யாராவது ஒருவர் சிரித்துக் கொண்டு நின்றிருப்பார்கள்.
நடிகர்களுக்கு கோடிகளை கொட்டிக்கொடுத்து விளம்பரம் செய்யும் போதே அப்பாவி விவசாயிகள் புரிந்து கொள்ளவேண்டும். அதை விடுத்து அவர்கள் கூறுவதை வேதவாக்காக நம்பிக் கொண்டு விவசாயம் செய்ய வைத்திருந்த லட்சக்கணக்கான ரூபாய்களை ஈமு கோழி வளர்ப்பில் கொண்டுபோய் கொட்டுகின்றனர்.
தமிழ்நாட்டில் ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் 250க்கும் மேற்பட்ட ஈமு பண்ணைகள் இருக்கின்றன. இவற்றில் சுசிஈமு தொடங்கி அம்மன், மாயா, க்யின், உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளூர் தொலைக்காட்சி தொடங்கி உலகத் தொலைக்காட்சி வரை விளம்பரங்களை செய்கின்றன.
ஈமு கோழி இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் என்று கூறும் நடிகர்கள் அவர்கள் நடித்த சில நிமிட விளம்பரப்படங்களுக்கு பல லட்சங்களை வாங்கிக்கொண்டு போய்விடுகின்றனர். இந்த விளம்பரத்தை ஒளிபரப்பும் நிறுவனங்களோ நிமிடத்திற்கு பல ஆயிரம் ரூபாய்களை வாங்கிக்கொள்கின்றன. ஆனால் இதை பார்க்கும் மக்கள் உண்மை என்று நம்பி பணத்தை முதலீட்டு செய்து விட்டு ஏமாந்து நிற்கின்றனர்.
இரண்டு லட்சம் தொடங்கி 15 லட்சம் வரை முதலீடு செய்து விட்டு கோழிப்பண்ணை நிறுவனங்கள் தரும் சொற்ப ஊக்கத்தோகைக்காக முதல் மொத்தத்தையும் இழந்து தவிப்பதாக இன்றைக்கு கண்ணீர் மல்க கூறுகின்றனர் முதலீட்டாளர்கள். ஈமு கோழி வளர்ப்பில் நம்பி முதலீடு செய்யவேண்டாம் என்று அவ்வப்போது மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி மோசம் போனதாக கூறுகின்றனர் முதலீட்டாளர்கள்.
சிட் பண்ட் தொடங்கி, தேக்குமர வளர்ப்பு, இரட்டிப்பு பணம் கையில் உள்ள பணத்தை முதலீடு செய்துவிட்டு பலமுறை ஏமாந்தாலும் இன்றைக்கு ஈமு கோழி வளர்ப்பில் முதலீடு செய்து விட்டு ஏமாந்து நிற்கின்றனர். இதுபோன்ற மோசடி விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்கள் மீதும், அவற்றை ஒளிபரப்பும், பிரசுரிக்கும் பத்திரிக்கை, தொலைக்காட்சி நிறுவனங்களின் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையாகும்.
http://tamil.oneindia.in/news/2012/08/08/tamilnadu-attractive-advertisement-emu-forms-investors-159240.html