Posted by Haja Mohideen
(Hajas) on 9/25/2012
|
|||
சகோ. தமீம் அன்சாரி கைது - உண்மை அறியும் குழுவின் அறிக்கைPosted by அதிரை எக்ஸ்பிரஸ் on 9/24/2012 09:24:00 PM in a-adirai, a-slider, அதிரை,தமீம் அன்சாரி | 3 கருத்துக்கள்
தஞ்சை முஸ்லிம் இளைஞர் இராணுவ இரகசியங்கள் கடத்தியதாகக் கைது உண்மை அறியும் குழு அறிக்கைசெப்டம்பர் 24, 2012, திருச்சி
சென்ற 18ந்தேதி முதல் தமிழக ஊடகங்களில் தஞ்சையைச் சேர்ந்த தமிம் அன்சாரி என்னும் இளைஞன் இலங்கை வழியாக இராணுவ இரகசியங்களைப் பாகிஸ்தானுக்குக் கடத்தியதாக ஒரு செய்தி மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. திருச்சி ‘கியூ’ பிரிவு போலீசார் அவரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர் (மு.த.அ எண் 1/2012. குற்றப் பிரிவுகள்; The Official Secret Act 3, 4 & 9 மற்றும் IPC 120(B)). இவருடன் சக குற்றவாளிகளாக இலங்கை கொழும்பு நகரைச் சேர்ந்த ஷாஜி மற்றும் லங்கா ஷாஜி ஆகியோரும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி அமீர் சுபைர் சித்திக் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாகிஸ்தான் நாட்டு உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐயின் தென் ஆசியப் பகுதியின் முக்கிய முகவர்கள் என்பதாகவும் கியூ பிரிவு போலீசார் ஊடகங்களுக்குச் செய்திகள் தந்துள்ளனர்.
“மத விரோதம் காரணமாகவும் சொந்த லாபத்திற்காகவும்” தமிம் அன்சாரி இதைச் செய்துள்ளார் எனவும், (1) இந்தியாவை இஸ்லாமிய நாடாக்கும் நோக்கத்துடனும், (2) வட இந்தியாவைப் போல தென்னிந்தியாவிலும் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி இந்திய அரசை அச்சுறுத்தும் நோக்கத்துடனும் இச்சதி வேலை தொடங்கப்பட்டுள்ளதாகவும் கியூ பிரிவு போலீசார் கொடுத்துள்ள செய்தி காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் பெரிய அளவு முக்கியத்துவத்துடன் தொடர்ந்து வெளிவருகிறது. குற்றச்சாட்டுகள் கடுமையானவை; கவலைக்குரியவை. தமிழகத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குக் காரணமாகிற சதி என்கிற வகையில் உடனடி நடவடிக்கையைக் கோருபவை என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. ஆனால் அதே நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ள தமீம் அன்சாரி குறித்து வேறு வகையான தகவல்களும் கிடைத்தன. அவர் மார்க்சிஸ்ட் கட்சியிலும் அது சார்ந்த வெகுமக்கள் அமைப்புகளிலும் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தவர் எனவும், வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு ஏற்றுமதி செய்வது என்கிற அளவிலேயே அவருக்கு இலங்கையுடன் தொடர்பிருந்தது எனவும், அவரும் அவரது குடும்பத்தாரும் கியூ பிரிவு போலீசின் குற்றச்சாட்டை மறுக்கின்றனர் எனவும் அறிந்தோம்.
எனவே இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது குறித்த உண்மைகளை அறிய கீழ்க்கண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. 1. பேரா.அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை, 2. கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி, 3. எஸ்.வி. ராஜதுரை, மூத்த மனித உரிமைப் போராளி, நீலகிரி, 4. பேரா. பிரபா. கல்விமணி, பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம், திண்டிவனம், 5. பேரா. சே.கோச்சடை, மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), காரைக்குடி, 6. வழக்குரைஞர் அ.கமருதீன், திருச்சி.
இக்குழு உறுப்பினர்கள் சென்ற 21, 22, 23 தேதிகளில் திருச்சி, தஞ்சை முதலான இடங்களுக்கு நேரில் சென்று சிறையிலிருந்த தமிம் அன்சாரியைச் சந்தித்து அவரது வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்டனர்.. அவரது வழக்குரைஞர் ஜே. கென்னடி என்கிற ஸ்டீபன் செல்வராஜ் மற்றும் அன்சாரியின் மனைவி நபீலா (23), தாயார் முத்து நாச்சியார் (50), மாமா லியாகத் அலி மற்றும் அவருடன் தொடர்பிலிருந்த மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் அதன் வெகு மக்கள் அமைப்பின் முக்கிய பொறுப்பாளர்கள் ஆகியோரைச் சந்தித்தனர். திருச்சி விமான நிலைய மேலாளரிடம் நேரிலும், இம்மிக்ரேஷன் அதிகாரி சிரீதரனிடம் தொலைபேசியிலும் பேசினர்.. அவர்கள் தமக்கு ஏதும் தெரியாது எனக் கூறி முடித்துக் கொண்டனர். கியூ பிரிவு போலீசாருடன் மும்முறை தொடர்பு கொண்டோம். இறுதியாகப் பேசிய ஆய்வாளர் ஒருவர் எதுவானாலும் சென்னை அலுவலகத்தில் விசாரித்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லித் தொடர்பைத் துண்டித்து விட்டார்..
நாங்கள் அறிந்த உண்மைகள்
அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி (35) தமிழில் முதுகலைப்பட்டம் பயின்றவர். அவரது தந்தை அப்துல் ரஹ்மான் மற்றும் மூன்று சகோதரர்கள் வெளிநாடுகளில் உள்ளனர். அன்சாரிக்கு மனைவியும் ஒரு ஆண் குழந்தையும் உண்டு. மாணவப் பருவம் தொட்டு மார்க்சிஸ்ட் கட்சியின் வெகு மக்கள் அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். இந்திய மாணவர் சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளராகவும் மாநிலத் துணைச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். முற்போக்கு ஏழுத்தாளர் சங்கத்திலும் செயல்பட்டுள்ளார். அறிவியல் மன்றத்திலும் (Science Forum) மாவட்டச் செயலாளராக இருமுறை இருந்துள்ளார். இவ் அமைப்பின் செயலாளர் பொறுப்பு கட்சி உறுப்பினர்களுக்கே கொடுக்கப்படும் என்பதால் இவர் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்தார் எனவும் யூகிக்கலாம். அன்சாரி எந்த நாளிலும் முஸ்லிம் அமைப்புகளில் இருந்ததில்லை. அவரது தொடர்புகள் யாவும் இடதுசாரி அமைப்புகளுடனேயே இருந்துள்ளன. இதற்கு முன் அவர் எந்த வழக்கிலுமோ, குற்றச்சாட்டுகளிலுமோ தொடர்புபடுத்தப்பட்டதுமில்லை. தங்கள் கட்சியில் உறுப்பினராக இருந்தவர் என்பதை மார்க்சிஸ்ட் கட்சியினர் இன்று சொல்லத் தயங்கியபோதும், அவர் கட்சியில் இருந்த காலத்தில் அவர்மீது இப்படியான தொடர்புகளுக்காகக் கட்சி நடவடிக்கை ஏதும் எடுக்ககப்பட்டதுமில்லை.
தஞ்சையிலிருந்து கொண்டு மருந்து ஏற்றுமதி முதலான பல தொழில்களை முயற்சி செய்து பெரிய வெற்றி அடையாத அவர், இறுதியில் இலங்கைத் தலைநகரம் கொழும்பில் உள்ள ஹாஜி என்கிற சித்திக் அலிக்கு வெங்காயம், உருளைக்கிழங்கு முதலியவற்றை ஏற்றுமதி செய்துள்ளார். நீலகிரி முதலான இடங்களுக்குச் சென்று இவற்றைக் கொள்முதல் செய்து கப்பலில் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அன்சாரி இதுவரை நான்கு முறை இலங்கை சென்று வந்துள்ளார். கிழக்குக் கடற்கரையோர முஸ்லிம்கள் இலங்கையுடன் பாரம்பரியமாகக் கடல் வணிகம் செய்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வணிக உறவில் ஹாஜிக்கும் அன்சாரிக்கும் இடையே ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. அன்சாரி அனுப்பிய ஒரு லோட் வெங்காயம் அழுகி விட்டதெனக் கூறி அதன் விலையான 10 லட்சம் ரூபாயை ஹாஜி தர மறுத்துள்ளார். இதைப் பெறுவதற்காக ஐந்தாம் முறையாக அன்சாரி கடந்த 16ம் தேதி காலை 7.30 மணி அளவில் திருச்சியிலிருந்து இலங்கைப் புறப்படும் விமானத்தில் டிக்கட் பதிவு செய்துள்ளார்.
16 காலை 5 மணிக்கு தஞ்சையிலுள்ள தன் வீட்டிலிருந்து புறப்பட்ட அவர் 5.30 வரை மனைவியிடம் செல் போனில் பேசியுள்ளார். அதற்குப் பின் 11 மணிவரை அவரை செல்போனில் தொடர்பு கொள்ள இயலவில்லை. திட்டமிட்டபடி அவர் பயணம் செய்திருந்தால் 10 மணி வாக்கில் அவர் கொழும்பு சென்றிருப்பார். கொழும்பு சிம் எண்ணுக்குத் தொடர்பு கொண்டபோது அதுவும் இயங்கவில்லை. 11 மணி வாக்கில் இங்குள்ள சிம் எண்ணில் தணிந்த குரலில் அன்சாரி மனைவியுடன் பேசியுள்ளார். தான் சில காரணங்களால் இலங்கை செல்லவில்லை எனவும், ரவி என ஒருவர் வருவார் அவரிடம் தனது லேப்டாப், மெமரி கார்ட் ரீடர்கள் முதலியவற்றைக் கொடுத்தனுப்புமாறும் கூறி போனைத் துண்டித்துள்ளார். சற்று நேரத்தில் ரவி எனச் சொல்லிக் கொண்டு ஒருவர் வந்து லேப்டாப்பைக் கேட்டுள்ளார். சந்தேகம் கொண்ட மனைவி அன்சாரியைத் தொடர்புக் கொண்டபோது வந்துள்ள நபரிடம் லேப்டாப் முதலியவற்றைக் கொடுக்கச் சொல்லி போனைத் துண்டித்துள்ளார். அடுத்த நாள் காலை வரை அன்சாரியுடன் தொடர்பு கொள்ள இயலவில்லை. காலை 10 மணி அளவில் அன்சாரியிடமிருந்து போன் வந்துள்ளது. தான் கோவை செல்வதாகவும். தனது போனில் சார்ஜ் குறைந்து வருவதால் இனி பேச இயலாது எனவும் கூறித் தொடர்பைத் துண்டித்துள்ளார். அன்று (17) மாலை தொலைக்காட்சிகளில் காட்டப்பட்ட செய்திகளிலிருந்தே குடும்பத்தினர் அன்சாரி கைது செய்யப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நடந்தது இதுதான். காலை 7.30 மணி அளவில் திருச்சி விமான நிலைய இம்மிக்ரேஷன் போலீசின் ஒத்துழைப்புடன் கியூ பிரிவு போலீசார் அன்சாரியைக் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர். போர்டிங் பாஸ் எல்லாம் வங்கியபின் இந்தக் கைது நடந்துள்ளது. அவரை என்கவுன்டர் செய்வது என்கிற அளவில் மிரட்டி செல்போனில் பேச வைத்து லேப்டாப் முதலியவற்றைப் பெற்றுள்ளனர். 17 மாலை திருச்சி நீதிமன்றத்தில் அன்சாரியை ஆஜர்படுத்தியுள்ளனர்.
கியூ பிரிவின் முதல் தகவல் அறிக்கையில் காணப்படும் முரண்கள்
1. பதினாறு காலை 7.30 மணி அளவில் திருச்சி விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட அவரை, அன்று இரவு 8 மணி அளவில் திருச்சி டோல்கேட் டி.வி.எஸ் அருகில் தஞ்சை செல்லும் பேருந்து நிறுத்தத்திற்குப் பக்கத்திலுள்ள டாஸ்மாக் கடை அருகில் கைது செய்ததாகச் சொல்கிறது முதல் தகவல் அறிக்கை. ஓடிப் பிடித்து அவரைக் கைது செய்தனராம். அந்தப் பக்கத்திலுள்ள கடைகள் அனைத்தையும் எங்கள் குழு விசாரித்தது, அப்படியான ஒரு சம்பவம் அன்று நடக்கவே இல்லை என்பதை எல்லோரும் உறுதிப்படுத்தினர், ஆக ஒரு பகற் பொழுது முழுவதும் சட்ட விரோதக் காவலில் வைத்திருந்தது என்பது தவிர, முதல் தகவல் அறிக்கையில் ஏன் இந்தப் பொய்?
2. அன்சாரி மூலமாக பாகிஸ்தான் உளவுத் துறை பெற விரும்பியதாகச் சொல்லப்படும் தகவல்கள் யாவும் மிக எளிதில் கூகுள் முதலான இணையத் தளங்களில் கிடைப்பவை. எடுத்துக்காட்டாக வெலிங்டன் பாரக்சை பாகிஸ்தான் தூதர் சுபைர் கொடுத்த ப்ளாக்பெர்ரி செல்போனின் மூலம் காருக்குள் அமர்ந்தவாறு அன்சாரி படம் எடுத்து அனுப்பினாராம். வெலிங்டன் பாரக்ஸ் படம் கூகுளில் மிகத் தெளிவாகக் கிடைக்கிறது. செல்போனில் எடுக்கப்படும் படத்தைக் காட்டிலும் அது கூடுதல் விவரங்களைக் கொண்டது. தவிரவும் வெலிங்டன் பாரக்ஸ் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. அதனுடைய வடிவமைப்பு உலகறிந்த இரகசியம். செல்போனில் வெளியிலிருந்து படமெடுத்து இலங்கை வழியாகக் கடத்தப்பட வேண்டிய அளவுக்கு அது யாருமறியா ஒன்றல்ல. இன்னொன்றும் சிந்தனைக்குரியது. இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு வெலிங்டன் பாரக்சிலும் மற்ற இராணுவத் தளங்களிலும் பயிற்சி அளிக்கிறது. அவர்களுக்குக் கிடைக்காத என்ன இரகசியத்தை இந்தச் செல்போன் படங்கள் தந்துவிட இயலும்? இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான இராணுவ உறவுகளை அறிவோம். Most Favoured Nation என்கிற நிலையில் அவை செயல்படுகின்றன என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.
3. தவிரவும் தான் பதிவு செய்த ‘இரகசியங்களை சி.டி யில் பதிவு செய்து நேரடியாகக் கொண்டு கொடுக்க அன்சாரி இலங்கை சென்றார் என்பதும் நம்பும்படியாக இல்லை. முன்னதாகப் பலமுறை விமானப் பயணம் செய்துள்ள அன்சாரி, 16ந்தேதி அன்று விமான நிலையத்தில் கைப்பை பரிசோதனை செய்யப்படுவதைக் கண்டு அதிர்ர்ச்சியடைந்து பயணத்தை ரத்து செய்து திரும்பினார் என்பதும் ஏற்றுக்கொள்ளுமாறு இல்லை.
4. தஞ்சைக்கருகில் உள்ள வல்லத்தைச் சேர்ந்த ராதா என்கிற ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியிடம் அன்சாரி நெருங்கிப் பழகி இராணுவ இரகசியங்கள் பலவற்றைப் பெற்றார் எனச் சொல்லப்படுகிறது. ஏன் அந்த ராதாவை இதுவரை விசாரிக்கவில்லை? ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களிடமெல்லாம் இராணுவ இரகசியங்கள் இருக்கும் என்பதும் நம்பத் தகுந்ததாக இல்லை.
5. தூதரக அதிகாரிகளுக்கே உரித்தான சிறப்பு உரிமைகளை உடையவர்களை எல்லாம் (Diplomatic immunity) வழக்கில் சேர்த்திருப்பதென்பது வழக்கை நீண்ட நாட்களுக்கு இழுத்தடிக்கும் நோக்குடன்,, செயப்பட்டதாகவே உள்ளது.
6. 21 மாலை அன்சாரியைப் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தபோது அவர் எங்கு வைத்து விசாரிக்கப்படுகிறார் என்பது அவரது வழக்குரைஞர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும், தேவையானால் அவர் தன் வழக்குரைஞர்களைக் கலந்தாலோசிக்கலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அன்சாரி போலீஸ் கஸ்டடியில் எடுக்கப்பட்டது தொடங்கி மீண்டும் நீதிமன்றக் காவலுக்குக் கொண்டு வரப்படும் வரை கியூ பிரிவு போலீசார் வழக்கறிஞருக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. 16ந்தேதி அன்று அன்சாரியின் மனைவியிடமிருந்து சட்ட விரோதமாகக் கைப்பற்றப்பட்ட லேப்டாப் முதலியவற்றை இந்த விசாரணையின்போது கைப்பற்றியதாகாக் காட்டுவதற்காகவே இப்படிச் செய்திருக்க வேண்டும்.
‘கியூ’ பிரிவு போலீஸ்
கியூ பிரிவு போலீஸ் என்பது 1970ல் வால்டர் தேவாரம் அதிகாரியாக இருந்தபோது நக்சலைட் கட்சியினர் குறித்த உளவுகளை அறிய உருவாக்கப்பட்ட ஒரு உளவு அமைப்பு. வெறும் உளவு அமைப்பாக இருந்த கியூ பிரிவிற்கு 1993ல் போலீஸ் அதிகாரம் கொடுக்கப்பட்டது. எனினும் அதில் பணியாற்றுபவர்களுக்குச் சீருடை கிடையாது. காவல் நிலையத்தில் பெயர்ப் பலைகைகள் கூட இருப்பதில்லை.
உளவுத் துறையும் காவல்துறையும் அவற்றின் நோக்கம், செயல்படும் விதம் உள்ளிட்ட எல்லா அம்சங்களிலும் வேறுபட்டவை. உளவுத் துறை என்பது ஒரு இரகசிய அமைப்பு. ஒரு வகையில் சட்ட நெறிகளுக்கு அப்பாற்பட்ட அமைப்பும்கூட (clandestine organization). இது சேகரிக்கிற உளவுத் தகவல்களுக்கு (intelligence) சாட்சிய மதிப்பு (evidential value) கிடையாது. அதாவது சேகரிக்கப்பட்ட உளவுகளை அப்படியே சாட்சியமாக ஏற்க முடியாது. அமெரிக்க கூட்டரசுப் புலனாய்வு மையத்தின் (FBI) தலைவராக 48 ஆண்டுகள் பணி செய்த ஜே. எட்கார் ஹூவர் ஒருமுறை ஒரு இரகசியக் குறிப்பில் எழுதியது போல உளவுத் துறை என்பது அரசுக்கு எதிரான செயற்பாடுகளையும் அமைப்புகளையும் சிதைத்து அழிக்கும் ஒரு நிறுவனம். இந்த அழிவுச் செயலை நியாயப்படுத்துவதற்காக அது முன்வைக்கும் “குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் ஆதாரபூர்வமான உண்மைகள் உள்ளனவா இல்லையா என்பது முக்கியமில்லை”. சட்டபூர்வமற்ற படைகளை உருவாக்குவது, போட்டி ஆயுத இயக்கங்களை உருவாக்கி அவைகட்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் அளிப்பது முதலான செயல்களை இந்திய உளவு நிறுவனங்கள் செய்து வருவதை நாமறிவோம்.
காவல்துறை என்பது உளவு உள்ளிட்ட தகவகல்களின் அடிப்படையில், கைது செய்யப்படக் கூடிய குற்றத்தைச் (cognizable offence) செய்தவர் என ஒருவரைக் கருதினால், முறையாக முதல் தகவல் அறிக்கை ஒன்றைப் (FIR) பதிவு செய்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்து கைதுசெய்தல், தேடுதல், பொருட்களைக் கைப்பற்றுதல் முதலானவற்றைச் செய்யும் ஒரு நிறுவனம். அத்துடன் அதன் பணி முடிந்து விடுவதில்லை. நீதிமன்றத்தில் அது சேகரித்த சாட்சியங்களின் உண்மைத் தன்மையையும் அது நிறுவியாக வேண்டும். இந்த இரு நிறுவனங்களையும் ஒன்றாய் இணைப்பது வழக்கமல்ல என்பது மட்டுமின்றி அது நீதியுமல்ல. இன்னும் அதிகமான அரசியல் பழிவாங்கல்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் அது வழிவகுக்கும்.
கியூ பிரிவு போலீசும் இன்று இதே வடிவில் அமைக்கப்பட்டுள்ள தேசியப் புலானாய்வு மையமும் (NIA) இத்தகைய ஆபத்தை உள்ளடக்கியுள்ளன. உளவுத்துறையும் காவல்துறையும் ஒன்றாக இணைந்துள்ள வகையில் அரசியல் நோக்குடன் அவை செயல்படுகின்றன. இன்று இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் அமெரிக்கத் திரைப்படத்திற்கெதிரான முஸ்லிம் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்தத் தருணத்தில் முஸ்லிம்களை தேசத்தைக் காட்டிக் கொடுப்பவர்களாகச் சித்திரிக்கும் நோக்குடன் கியூ பிரிவு அன்சாரி விஷயத்தில் செயல்பட்டிருக்கலாம் என எண்ணவும் இடமுண்டு, தவிரவும் கூடங்குளம் போராட்டம் வலுப்பெற்றுள்ள சூழலில் தமிழகத்தின்மீது பயங்கரவாதத் தாக்குதல் என்கிற அச்சத்தைக் கிளப்பி விடுவது தமிழகத்தின் மீதான காவல் கண்காணிப்பை மிகுதிப்படுத்துவதற்கான ஒரு உளவுத்துறை உத்தியாகவும் இருக்கலாம். கியூ பிரிவு போலீசார் அரசியல் நோக்கில் செயல்படுவதற்கு வேறு பல எடுத்துக்காட்டுகளும் உண்டு. கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்றபோது விழுப்புரம் அருகிலுள்ள சித்தணி என்னுமிடத்தில், திருச்சி செல்லும் ரயில் பாதை குண்டு வைத்துச் சேதப்படுத்தப்பட்டது. உடனடியாக கியூ பிரிவு போலீசார் அப்பகுதியைச் சேர்ந்த தமிழ்த் தேசிய அமைப்புகளில் உள்ள இளைஞர்கள் சிலரைக் கைது செய்து சட்ட விரோதக் காவலில் வைத்துத் துன்புறுத்தினர். எங்களுடைய ஆய்வில் அந்த இளைஞர்களுக்கும் குண்டு வெடிப்பிற்கும் எந்தத் தொடர்புமிலை என்பது தெரிய வந்தது. இன்றுவரை அது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. செம்மொழி மாநாட்டுச் சூழலில் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் குண்டு வெடிப்பை உளவுத் துறைகளேகூடச் செய்திருக்கலாம் என அப்போது பரவலாகப் பேசப்பட்டது. இரண்டாண்டுகளுக்குப் பின் இப்போது மீண்டும் டெசோ மாநாடு நடந்துள்ள சூழலில், அவ் வழக்கை முடிக்கும் நோக்கில் கியூ பிரிவு போலீசார் அந்த இளைஞர்களை மீண்டும் விசாரித்து மிரட்டத் தொடங்கியுள்ளனர். இப்படி நிறைய எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும்.
எமது கோரிக்கைகள்
-------------------------------------------------------------------------------------------------------- - தொடர்புக்கு: அ. மார்க்ஸ், 3/5, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை – 600 020. செல்:9444120582.v
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |