களக்காடு மலையில் மீண்டும் தீ
First Published : 26 Sep 2012 11:11:10 AM IST
களக்காடு, செப். 25: களக்காடு மலைப்பகுதியில் செவ்வாய்க்கிழமை மீண்டும் தீ பரவியதால் பல ஏக்கரில் உள்ள மரம்,செடிகள் தீக்கிரையாகின.
களக்காடு புலிகள் காப்பகத்துக்குள்பட்ட திருக்குறுங்குடி வனச்சரகத்தில் உள்ள நம்பிகோவில் பீட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீ பரவியது. காற்றின் வேகத்தால் பல ஏக்கர் காடுகள் தீக்கிரையாகின. ஞாயிற்றுக்கிழமை வனப்பகுதியில் பெய்த திடீர் மழையால் தீ கட்டுக்குள் வந்தது.
இந்நிலையில், பிற்பகல் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் தீ மேலும் பரவியது. இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் உள்ள மரம், செடிகள் எரிந்து சாம்பலாகின. தீ பரவிய பகுதியில் உள்ள சுக்குநாறிப் புல், மரங்கள், வனஉயிரினங்கள் தீக்கிரையாகின. தீ பரவிய பகுதி மிக உயரமான அடர்ந்த வனப்பகுதி என்பதால் வனத் துறையினரால் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், திங்கள்கிழமை தீ கட்டுக்குள் வந்து விட்டதாக வனத் துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை மீண்டும் தீ பரவியது. தீ கட்டுக்குள் வந்து விட்டாலும், காற்றின் வேகம் காரணமாகவும், அனல் காற்று வீசுவதாலும், மேலும், தீ பரவியதாகக் கூறப்படுகிறது. தீ எரியும் பகுதிக்கு அருகே வனத் துறையினர் முகாமிட்டுள்ளனர். அவர்களால் தீயை அணைக்க முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து வனத் துறையினர் கூறுகையில், அடர்ந்த காட்டுப்பகுதியில் தண்ணீர் இல்லாததால் தீயை அணைக்க முடியாமல் திணறி வருகிறோம். எதிர் தீ வைத்து தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து 2-வது முறை தீ பரவியதால் திருக்குறுங்குடி வனப்பகுதி, நம்பிகோவில் பீட்டில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கரில் உள்ள மரங்கள் தீக்கிரையாகின. வனத் துறையினர் நவீன தொழில் நுட்ப வசதியைக் கொண்டு மேலும் தீ பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source: http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Edition-Thirunelveli&artid=667289&SectionID=139&MainSectionID=139
|