இறுதி தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் வாழ்வினை அறிமுகப்படுத்தும் ஒரு துளிக்கடல் குறும்படத்தின் வெளியீடு 20.10.2012 அன்று மாலை 7 மணிக்கு கிரியேடிவ் கமியூனிகேஷன் சென்னை அரங்கில் நடைபெற்றது. சகோதரர் அப்துல் காதர் அவர்கள் இறைவசனம் ஓத நிகழ்ச்சி ஆரம்பமானது.
True Vision சார்பில் வெளியிடப்பட்டுள்ள குறும்படத்தின் நோக்கத்தையும், குறும்படம் சார்பான ஒரு சில தகவல்களை ஜலாலுதீன் பகிர்ந்து கொண்டார். Innocence of Muslims என்ற திரைப்படத்திற்கு திரைப்படத்தின் மூலம் பதில் சொல்ல வேண்டும் என்ற அடிப்படையில் இக்குறும்படம் இயக்கப்பட்டது. நன்மையை கொண்டு தீமையை தடுக்க வேண்டும் என்ற நபி(ஸல்) அவர்களின் வழிக்காட்டுதலின் அடிப்படையில் முஹம்மத்(ஸல்) அவர்களை அறிமுகம் செய்யும் சிறிய முயற்சியாக இக்குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை தனது துவக்கவுரையில் பகிர்ந்து கொண்டார்.
துவக்கவுரைக்கு பிறகு குறும்படம் வெளியீடு நிகழ்வு
திரைப்பட இயக்குனர் அமீர் அவர்கள் குறும்படத்தின் முதல் பிரதியை வெளியிட கிரியேடிவ் கம்யூனிகேஷன் சென்னையின் துணைத்தலைவர் ஜி.அப்துர் ரஹீம் அவர்கள் பெற்று கொண்டார். இரண்டாம் பிரதியை திரைப்படத்தில் நடித்துள்ள வழக்கு எண் படத்தில் நடித்த ஜெயபால் அவர்கள் பெற்றுக் கொண்டார். மூன்றாம் பிரதியினை அனைத்து முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மத் ஹனிஃபா அவர்கள் பெற்றுக் கொண்டார்.
அதன் பிறகு இயக்குனர் அமீர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். முஹம்மத் நபி(ஸல்) அவர்களை தவறாக சித்தரித்த திரைப்படத்திற்கு திரைப்படத்தின் மூலம் பதில் சொல்லியுள்ள இக்குறும்படத்தின் இயக்குனர் வி.எஸ்.முஹம்மத் அமீன் அவர்களை நான் பாராட்டுகின்றேன். வருகின்ற காலங்களில் இதை விட தரமான குறும்படங்கள் அதிகமதிகம் இயக்கப்பட வேண்டும் அதற்கு நான் எப்போதும் துணை நிற்பேன் என்று இயக்குனர் அமீர் அவர்கள் தனது உரையில் தெரிவித்தார். இஸ்லாமிய பற்றுள்ள இளைஞர்கள் நவீன தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டு அதன் வாயிலாக இஸ்லாத்தின் நல்ல கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்றார். அதன் பிறகு இஸ்லாமிக் ஃபவுண்டேஷன் ட்ரஸ்டின் துணைத்தலைவர் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இயக்குனர் அமீர் அவர்களை வரவேற்று, ஒரு துளிக்கடல் குறும்படத்தின் இயக்குனர் வி.எஸ்.முஹம்மத் அமீன் அவர்கள் சிறப்பாகவும், குறுகிய காலத்திலும் இக்குறும்படத்தை இயக்கியுள்ளார் அவருக்கு இறைவன் அதிகமதிக கூலியை கொடுக்க வேண்டும் என்றார். இன்றைய காலத்தில் இஸ்லாத்திற்கு எதிராக வரக்கூடிய எதிர்ப்புகளை அமைதியாகவும், நிதானமாகவும் கையாள வேண்டும். ஒரு வன்முறைக்கு இன்னொரு வன்முறை தீர்வாகாது. எந்த காலத்திலும் இஸ்லாத்தின் மகத்துவத்தையும், வளர்ச்சியையும் தடுக்க முடியாது. இது போன்ற தவறான திரைப்படங்கள் மூலமாக ஒரு காலத்திலும் முஹம்மத்(ஸல்) அவர்களின் மகத்துவத்தை யாராலும் தடுக்க முடியாது. தீமையை நன்மையை கொண்டே தடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள குறும்படத்திற்கு எனது வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
இறுதியாக ஒரு துளிக்கடல் குறும்படத்தின் இயக்குனர் வி.எஸ்.முஹம்மத் அமீன் அவர்கள் ஏற்புரை வழங்கினார். இவர்தான் முஹம்மத்(ஸல்) பரப்புரை இயக்கத்தின் மூலமாக இக்குறும்படம் தயாரிக்க உதவியை அனைவருக்கு நன்றியினை தெரிவித்தார். குறும்படத்தின் தயாரிப்பிற்கு உதவியை ரியாஸ், அஹமத் கபீர், தன்பால் மற்றும் அனைவரின் பங்களிப்பு மிக முக்கியமானது என்பதை தெரிவித்தார். குறுகிய காலத்தில் மிக குறைவான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட குறும்படம் முதல் முயற்சியாகும் என்றார். இயக்குனர் அமீர் அவர்கள் மிக அதிக வேலைகள் இருந்த போதிலும் இந்நிகழ்விற்கு வந்தமைக்கு நன்றியினை தெரிவித்தார்.
நிறைவாக சமரசத்தின் துணை ஆசிரியர் சையத் சுல்தான் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.