Posted by Haja Mohideen
(Hajas) on 10/25/2012
|
|||
மதுரை- துபாய் இடையே விரைவில் நேரடி விமான போக்குவரத்து: மத்திய அமைச்சர் அஜீத் சிங்Published: வியாழக்கிழமை, அக்டோபர் 25, 2012, 10:51 [IST] துபாய்: மதுரையில் இருந்து துபாய், சார்ஜா, மஸ்கட் போன்ற வளைகுடா நகரங்களுக்கு நேரடி விமான சேவை துவங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜீத் சிங் தெரிவித்துள்ளார். மதுரையில் இருந்து துபாய், சார்ஜா, மஸ்கட் போன்ற நகரங்களுக்கு விமானம் இயக்கப்பட வேண்டும் என்பது வளைகுடாவில் பணியாற்றும் தென் தமிழக மக்களின் பல்லாண்டு கனவாகும். தற்போது மதுரை விமான நிலையத்தில் இருந்து கொழும்பு உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் செயல்பட ஆரம்பித்திருக்கும் நிலையில் கனவு நிறைவேறும் சூழ்நிலை உருவாகி உள்ளது. மதுரையில் இருந்து துபாய், சார்ஜா ஆகிய பகுதிகளுக்கு விமானம் இயக்குவது குறித்த கலந்து ஆலோசனை கூட்டத்திற்கு ஈடிஏ நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் துபாயில் உள்ள தமிழ் அமைப்புகள் மற்றும் ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஏர் இந்தியா உள்நாட்டு மேலாளர் மோகன் பாபு, விற்பனை மேலாளர் ஆஸ்லி ரெவ்லோ, ஷார்ஜா விமான நிலைய மேலாளர் கண்ணன், ஏர் இந்தியா துபாய் சர்வதேச மேலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஈடிஏ மனிதவள மேம்பாட்டு துறை நிர்வாக இயக்குனர் அக்பர்கான், ஈடிஏ வியாபாரம் மற்றும் கப்பல் துறை இயக்குநர் நூருல் ஹக், ஈடிஏ மத்திய கணக்கு துறை மேலாளர் ஹமீதுகான், ஈடிஏ தலைமை அலுவலக மேலாளர் மீரான், அமீரகத்தில் உள்ள தமிழக அமைப்புகள் சார்பில் ஜெகந்நாதன், அகமது முகைதீன், கீழைராஸா, ஹமீது ரஹ்மான், யஹ்யா முகைதீன், கீழையாசீன், முதுவை ஹிதாயத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கலந்துரையாடல் கூட்டத்தில், அமீரகத்தில் 2 லட்சம் தமிழ் பேசும் மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் தென் தமிழகத்தில் உள்ளவர்கள் நீண்டதூரத்தில் உள்ள விமான நிலையங்களில் இருந்து தங்களின் ஊர்களுக்கு செல்ல அவதிப்படுவது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் மதுரையில் இருந்து துபாய், சார்ஜா போன்ற நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டால், ஏர் இந்தியாவுக்கு லாபகரமான வான் வழியாக அமையும் என்றும், கேரளாவிற்கு அதிக விமானங்கள் இயக்கப்படுவது போல் தமிழகத்திற்கும் இயக்க வேண்டும் என்றும், அதற்கான அனைத்து ஒத்துழைப்பும் ஈடிஏ மற்றும் தமிழ் சங்கங்கள் சார்பில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ஏர் இந்தியா அதிகாரிகள் கூறுகையில், விமான சேவை வழங்குவது தொடர்பாக விமான நிலைய நிர்வாகத்திடம் எடுத்து கூறி வேண்டிய ஏற்பாடுகளை செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அமீரகத்தில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கடந்த 19ம் தேதி துபாய்க்கு வருகை தந்த மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜீத் சிங்கை நேரில் சந்தித்து பேசினார். அப்போது மதுரையில் இருந்து துபாய், சார்ஜா போன்ற வளைகுடா பகுதிகளுக்கு விமான சேவையை துவங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று கொண்ட மத்திய அமைச்சர் அஜீத்சிங் விரைவில் இந்த கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அப்போது அவருடன் அமீரகத்துக்கான இந்திய தூதர் எல்.கே.லோகேஷ் வந்திருந்தார். முன்னதாக மத்திய அமைச்சர் அஜீத் சிங்கிற்கு பூங்கொத்து வழங்கி மாலை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இடிஏ அஸ்கான் தலைமை அலுவலக மேலாளர் எஸ்.எஸ்.மீரான், இடிஏ ஸ்டார் பிராபர்டீஸ் நிதித்துறை பொது மேலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அமீரக தமிழர்கள் அமைப்பின் தலைவர் அமுதரசன் சார்பில் பொருளாளர் நயீம், ஈமான் விழாக்குழு செயலாளர் ஹமீது யாசின், துபாய் தமிழ் சங்கத்தின் பொது செயலாளர் ஜெகந்தாதன், வானலை வளர்தமிழ் மன்றம் மற்றும் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழக இணை செயலாளர் கீழைராஸா, காயிதே மில்லத் பேரவை பொருளாளர் ஹமீது ரஹ்மான், அமீரக தமிழர் மன்றத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். http://tamil.oneindia.in/news/2012/10/25/world-madurai-dubai-air-service-will-start-soon-163628.html |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |