குமரி மாவட்டத்தில் கள்ள நோட்டுகள் புழக்கம்
நவம்பர் 16,2012,06:39 IST
நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள், மற்றும் வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர். வெளிமாநில கும்பல் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டதா என்ற குழப்பத்தில் போலீசார் உள்ளனர். பள்ளம் பகுதியை சேர்ந்த ஒருவர் நாகர்கோவில் மணிமேடையில் உள்ள கடை ஒன்றில் பொருட்கள் வாங்குவதற்காக கொடுத்த ரூபாய்களில், இரண்டு ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக கோட்டார் போலீசார் நடத்திய விசாரணையில் சங்கிலி தொடர்போல் அந்த பணபரிமாற்றம் நடந்ததில் ஆயிரம் ரூபாயில் 7 கள்ள நோட்டுக்கள் சிக்கியுள்ளது.
கள்ளநோட்டு புழக்கத்தில் விடும் கும்பல் குமரி மாவட்டத்தில் ஊடுருவி உள்ளதா என்பதை கண்டறிய எஸ்.பி., பரவேஷ்குமார் உத்தரவின் பேரில் கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை உள்ள ஓட்டல், மற்றும் லாட்ஜ்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சந்தேகப்படும் படியாக காணப்படும் நபர்கள் குறித்தும், வெளிமாநிலத்தவரின் வருகை குறித்த விவரங்களையும் ஓட்டல் நிர்வாகிகள் உடனடியாக போலீசாருக்கு தெரியப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.நாகர்கோவிலில் கள்ள ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருப்பதை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து தேசிய, மற்றும் தனியார் வங்கிகள் அனைத்தும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. வழக்கத்தைவிட வங்கியில் பணம் டிபாசிட் செய்வது, மற்றும் பண பரிமாற்றங்களை துல்லியமாக கவனித்து வருகின்றனர். புதிய நோட்டுக்கள் மட்டுமின்றி, பழைய ரூபாய் நோட்டுக்களையும் தீர ஆய்வுசெய்கின்றனர். மேலும் சந்தேகப்படும்படியான ரூபாய் நோட்டுக்கள் கொடுப்பவர்கள் குறித்து அந்தந்த பகுதி போலீஸ் ஸ்டேசனுக்கு வங்கியாளர்கள் புகார் தெரிவிக்க உத்தரவு பிறப்பக்கப்பட்டுள்ளது. இதேப்போல் சிறு வியாபாரிகள் முதல் பல்வேறு வர்த்தகர்கள் வரை கள்ள ரூபாய் நோட்டுக்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
http://www.dinamalar.com/district_detail.asp?id=586819
|