இந்தத் தீபாவளிக்கு வெளியான துப்பாக்கி திரைப்படம் , இஸ்லாமிய சமூகத்தைத் தீவிரவாதிகளாகச் சித்திரித்துக் காட்சிகள் அமைத்து உள்ளதால் கடும் எதிர்ப்பைச் சந்தித்து உள்ளது .
வழக்கமாக விஜயகாந்த், அர்ஜுன் போன்ற தேச பக்த (? ) ஹீரோக்கள் நடிக்கும் இது போன்ற கதையைத் தேர்ந்தெடுத்து , கடந்த படங்களில் தாம் கண்டுள்ள தோல்வியைத் தடுத்து நிறுத்தும் விதமாகத் தமக்காகவும் நடிகர் விஜய்க்காகவும் தயார் செய்துள்ளார் இயக்குனர் முருகதாஸ்.
தீவிரவாதிகளைத் தேடிப் பிடித்து ஒரே ஆளாகப் பந்தாடும் ஹீரோவின் கதை தான் துப்பாக்கி.
வழக்கம் போலவே தற்காலத் தமிழ் சினிமாவில் காட்டப் படும் யதார்த்தத்தை மீறாமல் இந்தியாவில் தீவிரவாதத்தை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்தது போன்று கதையையும், காட்சிகளையும் அமைத்துள்ளார் என்பது முஸ்லிம் அமைப்புகளின் குற்றச்சாட்டு. உலகமே கொண்டாடும் போதி தர்மர் ஒரு தமிழர் எனக் கதை சொன்ன இயக்குனருக்கு இந்தியாவில் நடைபெறும் காவித் தீவிரவாதம், ஒரு சமூகத்துக்கு எதிரான குஜராத் அரசின் தீவிரவாதம் போன்ற செய்திகள் எல்லாம் தெரிய வில்லையா? ; தெரிந்தும் அதைப் படமாக்கும் துணிவு இல்லையா? என்ற கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு இயக்குனருக்கு உள்ளது.
இந்தியாவில் நடைபெறும் ஒட்டு மொத்த தீவிரவாதம் குறித்த காட்சிகள் படத்தில் இருந்திருந்தால் நாமும் அதை வரவேற்போம். ஆனால் உண்மையை மறைத்து ஒரு சமூகத்தை மட்டும் தீவிரவாதிகளாக மக்களுக்குக் காண்பிப்பது திரைத் தீவிரவாதம் அன்றி வேறில்லை.
வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல இஸ்லாமியர்கள் அனைவருமே தீவிரவாதிகள் என்று நிறுவும் இது போன்ற நச்சுக் கருத்துக்கள் மக்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பேருந்தில் அருகில் அமர்ந்து வரும் சக பயணியான முஸ்லிம் பெரியவரையும் பள்ளியில் படிக்கும் சக முஸ்லீம் மாணவனையும் அலுவலகத்தில் பணி புரியும் சக ஊழியரையும் ஏன் நாளை நம் தொகுதியில் போட்டியிடும் ஒரு இஸ்லாமிய வேட்பாளர்களையும் கூடத் தீவிரவாதி என்றக் கண்ணோட்டத்திலேயே பார்க்கும் நிலை ஏற்படும்.
முன்னர் தமிழ் சினிமாக்களில் முஸ்லிம்களை நல்ல தமிழ் பேசுபவர்களாகவும் நல்லவர்களாகவும் காட்டினர்.
பிறகு முஸ்லிம்கள் வேற்றுக்கிரகத்திலிருந்து வந்தவர்களபோல் "நம்பள் வரான்...நிம்பள் தரான்" என்று பேசுவதாகக் காட்சிகள் அமைக்கத் துவங்கினர்.பிறகு கடத்தல் காரர்களுள் ஒருவராக அரபி வேடத்தில் ஒரு முஸ்லிம் இருப்பதாகக் காட்டத் துவங்கினர். அதன் பிறகு பாகிஸ்தானி தீவிரவாதிகள் இந்தியாவில் வன்முறை செய்வதை முறியடிப்பதுபோல் கதை சொல்லி , இப்போது நேரடியாக இந்திய முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் .."ஸ்லீப்பர் ஸெல்" எனச் சொல்லியிருப்பது வெறுப்பு விதைத்தலின் உச்சம்.
இது போன்ற நச்சுக் கருத்துக்கள் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இஸ்லாமியர்களைத் தமிழ்ச்சமூகத்திலிருந்து அந்நியப் படுத்தும் வகையிலான காட்சிகளை நீக்கக் கோருவதற்குப் பதிலாக துப்பாக்கிப் படத்துக்கே தடை கோருவது தமிழ் சினிமா திருந்த வழி வகுக்கும்.
தமிழ் சினிமா இயக்குனர்களும், கதாநாயகர்களும் குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் பழிப்பதை விட்டு இனியாவது உள்ளதை உள்ள படி சொல்ல முன்வர வேண்டும். இல்லையேல் காந்தியைக் கொன்று அந்தப் பழியை வேறொரு சமூகத்தின் மீது போட முயன்ற நாதுராம் கோட்சேவின் வழி வந்தவர்களாகவே தமிழ் சினிமா படைப்பாளிகள் கருதப் படுவார்கள்..
பல கோடிகளில் சம்பளம் வாங்கும் ஹீரோக்கள் பலருள் தங்கள் உண்மையான வருமானத்தைக் காட்டி அதற்கு வரி செலுத்தியவர்கள் எத்தனை பேர் என்பது ஹீரோக்களின் மனசாட்சிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.தேச பக்த ஹீரோவாகக் காட்டிக் கொள்ளும் விஜய் உட்பட அனைத்து ஹீரோக்களும் தாங்கள் இத்தனை வருடமாகச் சம்பாதித்த வருமானம், வருமான வரித் துறைக்குத் தாக்கல் செய்த கணக்கு விவரங்களை வெளியிட்டு நிஜ தேச பக்தியைக் காட்ட தயாரா?
தமிழகத்தில் சுனாமி ஏற்பட்ட பொழுதில் வட இந்திய நடிகர் விவேக் ஓபராய் ஓடி வந்து ஆறுதல் கூறினார். சிவகாசியில் பட்டாசு விபத்து ஏற்பட்ட போது மலையாள நடிகர் மம்முட்டி தம்முடைய மருந்துக் கம்பெனியில் இருந்து தீக்காயத்துக்கு போடும் மருந்துகளை இலவசமாக வழங்கி உதவினார். கோடி கோடியாகச் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்கள் தங்களுக்கு வாழ்வளித்த தயாரிப்பாளர்கள் தூக்கில் தொங்கும் நிலை ஏற்பட்டால் கூட உதவ தயாராக இல்லை என்பதே ஜி.வி மரணம் நமக்கு உணர்த்திய உண்மை.
திரைப் படங்களால் சமூகத்தைத் திருத்த முடியும் என்ற ஒரு நிலை இருந்ததையும் மறுப்பதற்கில்லை. இன்றுள்ள நிலை வேறு. பெருகி வரும் கள்ளக் காதல், கள்ளக் காதலுக்காகக் கணவனை மனைவி கொலை செய்வது, மனைவியைக் கணவன் கொலை செய்வது போன்ற கலாச்சாரச் சீரழிவுகள் பெருக திரைத் துறையும் அதில் காட்டப் படும் காட்சிகளுமே காரணம் என்றக் கருத்தையும் உதறித் தள்ள முடியாது.
கன்னியாகுமரி மாவட்ட நாடார்கள் அம்மாவட்டத்தின் பூர்வ குடிகள் இல்லை; வந்தேறிகள் என சி பி எஸ் சி பாடத்தில் சொல்லப்பட்டதற்குப் பெரும் எதிர்ப்புத் தெரிவித்து தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர்கள் , மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் ஒரு சமூகத்தையே தீவிரவாதிகள் எனக்காட்டும் சினிமாவைத் தடை செய்யக் கோருவதும் நியாயமே!
சினிமாவில் பரப்பப் படும் இது போன்ற நச்சுக் கருத்துக்களைத் தடை செய்யும் முழுப் பொறுப்பும் திரைப் படத் தணிக்கை துறைக்கு உள்ளது என்பதையும் தணிக்கைக் குழுவினர் மறந்து விடக் கூடாது. நச்சுக் கருத்துக்களை மக்களிடையே விதைத்து சாதி இன மோதல்களை உருவாக்கிச் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் துப்பாக்கி போன்ற படங்கள் ஓடும் தியேட்டர்களுக்கும், அந்தப் படங்களில் நடித்துள்ள நடிகர்களின் வீடுகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளித்து அரசின் வரிப் பணத்தை வீணாக்குவதை விடுத்து இது போன்ற படங்களை அரசு உடனே தடை செய்ய முன்வர வேண்டும். இனியாவது சினிமாத் துறையும், தணிக்கைக் குழுவினரும், அரசும் தங்களுக்கு உள்ள சமூகப் பொறுப்புகளை உணர்ந்து செயலாற்றிட வேண்டும் என்பதே நமது விருப்பம்.
|