டெங்கு கொசுவை ஒழிக்கும் கம்பூசியா மீன்: ஏர்வாடி பேரூராட்சி முயற்சி எடுக்குமா?
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்.
நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, பொருந்தும் படியாகச், செய்ய வேண்டும்.
டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற கொடிய நோய்களை பரப்பி மனித குலத்தை நாசப்படுத்துவதில் கொசுக்கள் முன்னணி இடத்தில் உள்ளன. இந்த கொசுக்கள் நமது கண்ணுக்கு ஒரே மாதிரியாகத்தான் தோன்றுகின்றன. ஆனால் அவற்றில் 3500க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.
இவற்றில் “ஏடிஸ்” என்ற கொசு டெங்குவை பரப்புவதில் கில்லாடியாக உள்ளது. இதே போல் ஒவ்வொரு வகை கொசுவும் ஏதாவது ஒரு விஷ கிருமியை நமது உடலில் நைசாக செலுத்தி விட்டு வெடுக்கென பறந்து விடுகின்றன. அதன் பிறகு நாம் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்றவற்றின் பிடியில் சிக்கி சீரழிகிறோம்.
நோய்களை பரப்பும் கொசுக்கள் தமிழகம் முழுவதும் அதிக அளவில் உள்ளன. இந்த கொசுக்கள் நீர் நிலைகளில் இருந்துதான் அதிகம் உருவாகின்றன. அவற்றை ஒழிக்க எவ்வளவு தான் மருந்து அடித்தாலும் பயன் இல்லை. இதற்கு மாற்றாக கொசுக்களை விரும்பி உண்ணும் (கம்பூசியா) கப்பீஸ் மீன்களை பயன் படுத்தலாம்.
இந்த வகை மீன்களை கொசுக்கள் அதிகமுள்ள நீர் நிலைகளில் விட்டால் போதும். அவை கொசு முட்டை, லார்வா போன்றவற்றை “லபக்”கென பிடித்து நொடியில் தின்று விடும். இதனால் கொசுக்கள் பெருகுவது முற்றிலும் தடுக்கப்படும். கொசுக்களை உணவாக சாப்பிடும் இந்த (கம்பூசியா) கப்பீஸ் வகை மீன் சென்னையில் உள்ள தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தில் வளர்க்கப்படுகின்றன.
அங்கு ரூ.50-க்கு ஆயிரம் கப்பீஸ் மீன்கள் விற்கப்படுகின்றன. 2011-12-ம் ஆண்டில் மட்டும் 10 ஆயிரத்து 500-க்கு கம்பூசிய மீன்களை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் விற்பனை செய்துள்ளது. இதுபற்றி மீன் வளர்ச்சி கழக அதிகாரி ஒருவர் கூறும் போது, சென்னை நகரில் உள்ள கொசுக்கள் முழுவதையும் ஒழிக்க 30 லட்சம் கப்பீஸ் மீன்கள் தேவை.
எங்களிடம் போதுமான அளவுக்கு கப்பீஸ் மீன்கள் உள்ளன. இவற்றை வாங்குவதற்கு 044-28361296 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார். வீட்டில் கொசுக்கள் வராமல் விரட்டுவதற்கு கொசுவர்த்தி சுருள், மேட், லுகியுடு போன்றவற்றுக்கு செலவு செய்வதை விட நாம் அனைவரும் அந்த கொசுக்களை கூண்டோடு ஒழிக்கும் அபார ஆற்றல் உடைய கப்பீஸ் மீன்களை வாங்கி அக்கம் பக்கத்தில் தேங்கி கிடக்கும் நீர் நிலைகளில் வீடுவோம்.
இதன் மூலம் ஏர்வாடி நகரையும் கொசுக்கள் இல்லாத நகரமாக மாற்றலாம்..
_____________
|