நெல்லை
மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் பரிதாபமாக இறந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு:–
மோட்டார் சைக்கிள்கள் மோதல்
களக்காடு கட்டளை தெருவைச் சேர்ந்தவர், முகம்மது அலி ஜின்னா (வயது 32). இவர் மஸ்கட் நாட்டில் வேலை செய்து வந்தார். சமீபத்தில் விடுமுறையில் ஊருக்கு வந்து இருந்தார். இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் மஸ்கட் திரும்ப திட்டமிட்டு இருந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் களக்காட்டில் இருந்து முகம்மது அலி ஜின்னாவும், அவருடைய மைத்துனர் சுல்தானும் (30) ஒரு மோட்டார் சைக்கிளில் சேரன்மாதேவி சாலையில் சென்று கொண்டிருந்தனர். இடையன்குளம் அருகே சென்றபோது எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. திடீர் என்று 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதிக் கொண்டன.
ஒருவர் பலி
இதில் சம்பவ இடத்திலேயே முகம்மது அலி ஜின்னா பரிதாபமாக இறந்தார். அவருடைய மைத்துனர் சுல்தான் படுகாயம் அடைந்தார். மோதிய மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த வேலவன் குடியிருப்பைச் சேர்ந்த சுவாமிக்கண் (39) என்பவரும் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து களக்காடு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். படுகாயம் அடைந்த சுல்தான், சுவாமிக்கண் ஆகியோர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
முகம்மது அலி ஜின்னாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விபத்தில் பலியான ஜின்னாவுக்கு முத்து ஜாஸ்மின் (28) என்ற மனைவியும், முகம்மது நசீர் (5) என்ற மகனும் உள்ளனர்.