Posted by Haja Mohideen
(Hajas) on 11/30/2012
|
|||
பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2012,23:34 IST கடும் மின்வெட்டில் தவிக்கும் தமிழக மக்களுக்கு, வரப்பிரசாதம் போல், மிகக் குறைந்த விலையில், சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்திக்கு, தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.சோலார் மற்றும் காற்றாலை மின்சாரத்தை இணைத்து, வீடுகளில் அமைக்க அதிகபட்சமாக, 2.75 லட்சம் ரூபாய் செலவாகும் என, தனியார் நிறுவனங்கள் கூறுகின்றன. தேவை அதிகரிக்கும் போது, இத்தொகை மேலும் குறையும் என்றும் தெரிவிக்கின்றனர்.
"காற்றாலை மின் உற்பத்தி-2012' மாநாடு, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், நேற்று முன்தினம் துவங்கி, மூன்று நாள்கள் நடக்கிறது. இதில், ஜெர்மனி, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த காற்றாலை கட்டுமானப் பொருள்கள் உற்பத்தியாளர்கள் அரங்குகளை அமைத்துள்ளனர்.கண்காட்சியில் வர்த்தக மற்றும் வீட்டு உபயோகத்துக்கான காற்றாலைகள் மற்றும் சோலார் மின் உற்பத்தி பற்றிய கருத்தரங்குகள் நடந்தன. வர்த்தக அடிப்படையிலான, காற்றாலை மின் உற்பத்திக்கு, முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும், வீட்டு உபயோகத்துக்கான மின் உற்பத்திக்கும் பங்களிக்கப்பட்டது. பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தற்போது நிலவும், கடும் மின்வெட்டை சமாளிக்கும் வகையில், வீடுகள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், ஓட்டல்கள் போன்றவற்றில், காற்றாலை மற்றும் சோலார் மின் உற்பத்தி குறித்து விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டன.வர்த்தக பயன்பாட்டுக்கு காற்றாலைகளை நிறுவி தரும் பன்னாட்டு நிறுவனங்களான, கமேசா, ஜெக்டோ எனர்ஜி போன்ற நிறுவனங்கள், வீட்டு உபயோகத்துக்கான, காற்றாலைகளை நிறுவ முன்வந்துள்ளன.கமேசா நிறுவனம், 2.75 லட்சம் ரூபாயில், சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தியை வீடுகளில் நிறுவ முடியும் என அறிவித்துள்ளது. உள்ளூர் நிறுவனம் திருப்பூர் மாவட்டம், கேத்தனூரில் காற்றாலை உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான, கே.எஸ்.டி., நிறுவனம், 1.75 லட்சம் ரூபாயில் வீடுகளுக்கான சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கலாம் எனக் கூறுகிறது.இந்நிறுவனத்தின் ஆலோசகர் ராஜு கூறியதாவது:வீடுகளுக்கு மரபுசாரா மின் உற்பத்தியை அமைக்கும் போது, சோலார் மற்றும் காற்றாலை ஆகியஇரண்டையும் சேர்த்து அமைப்பதே சிறந்தது. ஒரு கே.வி., மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் போது, 500 வாட்ஸ் சோலார் நிலையத்தையும், 500 வாட்ஸ் காற்றாலை நிலையத்தையும் அமைக்க வேண்டும்.ஒரு கே.வி., மின் உற்பத்தி நிலையம் அமைத்தால், இரண்டு மின் விசிறி, நான்கு டியூப்லைட்டுகளை பயன்படுத்தலாம். மிக்சி, கிரைண்டர், டிவி, ஏ.சி., போன்றவற்றை பயன்படுத்த, மூன்று கே.வி., வரை மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க வேண்டும். இதற்கு, கூடுதல் செலவாகும். சீதோஷ்ண நிலைகேற்ப... இந்த அமைப்பின் மூலம், பகல் நேரங்களில் சோலார் மின்சாரத்தையும், இரவு நேரங்களில் காற்றாலை மின்சாரத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம். சீதோஷண நிலை மாற்றங்களுக்கு ஏற்ப, இரண்டில் ஒன்றின் மின்சாரத்தை, 24 மணி நேரமும் பெறலாம்.குறைவான, மிதமான, அதிக காற்று வீசும் பகுதிகளுக்கு ஏற்ப, காற்றாலை மின் உற்பத்தியை நிறுவ, ஏதுவான வடிவங்களில், காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களை அமைக்கலாம். நீண்ட கால பயன்பாடு என்ற முறையில், சோலார் மற்றும் காற்றாலைகளில்முதலீடு செய்ய வேண்டும்.
நீண்ட கால முதலீடு தற்போது செய்யும் முதலீடு, அடுத்த 25 ஆண்டுகள் வரை, பயன் தரும். முதல், 10 ஆண்டுகளில், முதலீடு செய்த தொகைக்கு மின்சாரத்தை பயன்படுத்தி கொள்ளலாம். அடுத்த, 15 ஆண்டுகள் லாப பருவமாக இருக்கும்.அடுத்த, 25 ஆண்டுகளில், மின்வாரியத்தின் கட்டணம் பல மடங்கு உயரும். டீசல் மின் உற்பத்தி, யூனிட்டுக்கு, 50 ரூபாய் வரை இருக்கும். ஆனால், காற்றாலை மற்றும் சோலார் மூலம்உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ஐந்து ரூபாயை தாண்டாது.எனவே, நீண்ட கால முதலீடாக இவற்றில் முதலீடு செய்ய வேண்டும். மேலும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத மின் உற்பத்தி என்பதும் முக்கியமான ஒன்று. இவ்வாறு ராஜு கூறினார். அரசு மானியம் கிடைக்குமா? சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்திக்காக, மொத்த செலவில் 30 சதவீத தொகையை, மத்திய அரசு அளிக்கிறது. தமிழக அரசும் மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.அரசின் மானியம் பெறுவதற்கு, காற்றாலை மற்றும் சோலார் மின் உற்பத்திக்கான உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனம், பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.உபகரணங்களுக்கு, அரசின் பயன்பாட்டுச் சான்றும் பெற்றிக்க வேண்டும். பதிவு செய்யாத, சான்றிதழ் பெறாத நிறுவனங்கள் அமைக்கும் நிலையங்களுக்கு அரசு மானியம் பெற முடியாது.பதிவு பெற்று, சான்றிதழ் பெற்ற நிறுவனங்களின் உபகரணங்களை பயன்படுத்தினால் மட்டுமே, அரசின் மானியம் கிடைக்கும். - நமது சிறப்பு நிருபர் - |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |