ஏர்வாடியில் முகரம் பண்டிகைபோலீஸ் பாதுகாப்புடன் "பஞ்சா ஊர்வலம்'
டிசம்பர் 09,2012,02:21 IST
ஏர்வாடி:கோர்ட் அனுமதியுடன் முகரம் பண்டிகைக்கான பஞ்சா ஊர்வலம் ஏர்வாடியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.இன்று 9ம் தேதி சந்தனக்கூடு சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. ஏர்வாடியில் முஸ்லிம்கள் அசன் உசேன் நினைவாக முகரம் மாதத்தில் முகரம் பண்டிகை கொண்டாடி வருகின்றனர். முதல் நாள் நிகழ்ச்சியாக கொடியேற்றம் மற்றும் பஞ்சா ஊர்வலம், மற்றும் சந்தனக்கூடு நிகழ்ச்சி என 10 நாட்கள் வெகு விமரிசையாக ஆண்டாண்டு காலமாக கொண்டாடி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த பண்டிகை நிகழ்ச்சிகளுக்கு முஸ்லிம்களில் ஒருபிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
காரணம் கொடியேற்றம், பஞ்சா ஊர்வலம், சந்தனக்கூடு சந்திப்பு, தீ மிதித்தல் போன்றவை இஸ்லாத்திற்கு எதிரானவை என்று தெரிவித்து வந்தனர். இதனால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த ஆண்டு முகரம் பண்டிகை நடப்பதில் பிரச்னை ஏற்பட்டு தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.
அந்த கூட்டத்தில் வரும் காலங்களில் அமைதியான முறையில் முகரம் பண்டிகை கொண்டாட வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது.அதன்படி இந்த ஆண்டு முகரம் பண்டிகை கடந்த மாதம் 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதற்கு முஸ்லிகளில் ஒருபிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து மதுரை ஐகோர்ட்டில் பண்டிகை நடத்த தடைவிதிக்க கோரினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முகரம் பண்டிகை குழுவினர் கோர்ட்டில் ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் முகரம் பண்டிகையை வழக்கப்பட நடத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர்.அதனை விசாரித்த நீதிபதி வழக்கப்படி முகரம் பண்டிகை கொண்டாடலாம் என்று உத்தரவிட்டது. அதன்படி நேற்று முன்தினம் முகரம் பண்டிகைக்கான பஞ்சா ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் ஏர்வாடி லெப்பை வளைவு தெருவில் இருந்தும், 6வது தெருவில் இருந்தும் குதிரையில் ஊர்வலமாக வந்தனர். நிகழ்ச்சியில் ஏதும் பிரச்சனை ஏற்படாத வகையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
நேற்று நள்ளிரவு இரு தெருக்களிலும் சந்தனக்கூடு எடுத்து தெருவை சுற்றி வந்தனர். இன்று (9ம் தேதி) மாலை 7 மணிக்கு இரு சந்தனக்கூடுகளும் 6வது தெருவில் சந்திக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சியை காண ஏர்வாடி மற்றும் சுற்றுக்கிராம பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் ஜாதி, மத, இன பாகுபாடின்றி கலந்து கொள்வர். சந்தனக்கூடு சந்திப்பின் போது அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க ஏர்வாடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
http://www.dinamalar.com/district_detail.asp?id=602215
|