நாங்குநேரி,
நாங்குநேரி தொழில்நுட்ப பூங்காவில் ரூ.5 கோடி மதிப்பில் புதிய துணை மின்நிலையம் அமைக்கும் பணி நேற்று பூமி பூஜையுடன் தொடங்கியது.
தொழில்நுட்ப பூங்கா
நெல்லை மாவட்டம் நாங்குநேரி–வள்ளியூர் இடையே வாகைகுளத்தில் நான்கு வழி சாலையையொட்டி தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த பூங்காவில் புதிய தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்க தேவையான அடிப்படை பணிகளை ஏ.எம்.ஆர்.எல். நிறுவனம் செய்து கொடுக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. தற்போது இங்கு மிகக்குறைந்த எண்ணிக்கையில் தான் தொழில் நிறுவனங்கள் உள்ளன. அதிலும் பை செய்து விற்பனை செய்யும் தொழில் நிறுவனம் மட்டும் தான் முன்னிலையில் செயல்பட்டு வருகிறது. இதற்கு தேவையான மின்இணைப்பு இல்லாமல் ஜெனரேட்டரில் தான் இயங்கி வருகிறது.
ரூ.5 கோடியில் துணை மின்நிலையம்
நாங்குநேரி தொழில் நுட்ப பூங்காவில் மின்சாரம் பெறமுடியாத நிலையில் பல தொழில் நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்க தயங்கி வருகிறது. எனவே இங்கு ஒரு துணை மின்நிலையம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து நாங்குநேரி தொழில் நுட்ப பூங்காவில் துணை மின்நிலையம் அமைக் கும் பணிக்கான பூமி பூஜையை மின்சார துறை அதிகாரிகள் நேற்று தொடங்கி வைத்தனர். சுமார் ரூ.5 கோடி மதிப்பில் அமைக்கப்படும் இந்த துணை மின்நிலையம் வருகிற மார்ச் மாத இறுதிக்குள் முடிக்கப்படும். இதன் மூலம் அருகே உள்ள தளபதிசமுத்திரம் கிராம பகுதிகளுக்கும் மின்வினியோகம் வழங்கப்படும் என்று முதன்மை என்ஜினீயர் நடராஜன் தெரிவித்தார்.
இதில் மேற்பார்வை என்ஜினீயர் சுப்பிரமணியன், என்ஜினீயர்கள் சொக்கலிங்கம், வெள்ளச்சாமி, கிருஷ்ணன், சிவலிங்கம், உதவி செயற்பொறியாளர்கள் கணேசன், நிர்மலா, வளன் அரசு, ஏ.எம்.ஆர்.எல். மேலாளர் ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.