Posted by Haja Mohideen
(Hajas) on 1/5/2013
|
|||
விபத்து எதிரொலி: ஜுன் முதல் பள்ளி, கல்லூரி நேரம் மாற்றம்… தமிழக அரசு அறிவிப்பு Saturday, January 5, 2013, 19:31 [IST] சென்னை: வரும் கல்வியாண்டு தொடக்கமான ஜூன் மாதம் முதல் பள்ளி துவங்கும் நேரம் காலை 7.30 மணிக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை பெருங்குடி அருகே கந்தன்சாவடியில் அரசு பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர். இதை பொதுநல வழக்காக எடுத்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விசாரணை நடத்தினார். வழக்கில் அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார். அப்போது அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் ஆஜராகி, போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனர் கருணாசாகர் விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் என்றார். நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு, படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவன் பற்றி பெற்றோரிடம் கூறினால் போதாது, பள்ளி முதல்வரிடம் புகார் கூறி அந்த மாணவனை பள்ளியை விட்டு நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதிகள் எலிப்பி தர்மராவ், அருணாஜெகதீசன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு பிளீடர் வெங்கடேஷ் ஆஜராகி கூறுகையில், ''உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அரசு பல்வேறு கட்டத்தில் அதிகாரிகள் கூட்டத்தை நடத்தியது. சென்னையில் கடந்த மாதம் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த 4415 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மொத்தம் 4 லட்சத்து 41 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. கூட்ட நெரிசல் தவிர்க்க 75 இடங்களில் பஸ்சை நிறுத்தி பயணிகளை கூட்டம் இல்லாத பஸ்சில் பயணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். டிரைவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கடந்த மாதம் 46 விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. பத்திரிகைகள், டிவியில் இதுபற்றி விழிப்புணர்வு விளம்பரம் செய்யப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் நேரங்களை மாற்றவும் பள்ளிகளுக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது என்றார். இதை கேட்ட நீதிபதிகள் அடுத்த கட்ட விசாரணை அறிக்கையை வரும் 17 ஆம் தேதிக்கு அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். பின்னர்,செய்தியாளர்களிடம் பேசிய அரசு வழக்கறிஞர் வெங்கடேஷ்," பள்ளி துவங்கும் நேரத்தை காலை 7.30 மணிக்கும் கல்லூரி நேரத்தை காலை 8 மணிக்கும் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இது அடுத்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும். இதற்காக அதிகாரிகள் பள்ளி, கல்லூரி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்" என்றார். பேருந்து படிக்கட்டு பயணம் செய்தவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து பஸ் நிலையங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். டிரைவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயணிகளுக்கு துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார். http://tamil.oneindia.in/news/2013/01/05/tamilnadu-change-school-college-timings-hc-167408.html |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |