வடகிழக்கு பருவ மழை பொய்த்ததால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் அணைகள், குளங்கள் நிரம்பவில்லை. இதனால் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர். ஆற்றுப்பாசனம் மற்றும் கிணற்று பாசன பகுதிகளில் மிக குறைந்த அளவு நிலங்களிலே நெல் பயிரிடப்பட்டுள்ளது. அதற்கும் தண்ணீர் போதாததால் விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் வங்க கடலில் அடுத்தடுத்து குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவான போதிலும் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்யவில்லை. இதனால் பல இடங்களில் பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று காலை பரவலாக மழை பெய்தது. அதிகாலை 4 மணி அளவில் தொடங்கிய மழை 7 மணி வரை பெய்தது. வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன் அவ்வப்போது சாரல் பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் களக்காடு, சேர்மாதேவி, பாளை, நாங்குநேரி, ராதாபுரம், ஆலங்குளம், தென்காசி, குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. ராதாபுரத்தில் 3 மி.மீ. நாங்குநேரி 1 மி.மீ., களக்காட்டில் 1.4 மி.மீ. சேர்மாதேவியில் 2 மி.மீ. பாளையில் 2.8 மி.மீ. மழையும் பதிவானது.
நீர்பிடிப்பு பகுதியில் லேசான மழை தூறியது. இதன்காரணமாக அணைகளுக்கு நீர்வர தொடங்கியுள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் கடந்த ஆண்டு இதே நாளில் 128.35 அடியாக இருந்தது. இந்த ஆண்டு இன்று காலை நிலவரப்படி 78.75 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 496 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு 804 கன அடிதண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் கடந்த ஆண்டு இதே நாளில் 96 அடியாக இருந்தது. இன்று நீர்மட்டம் 81.25 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 220 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பெருங்காலில் 30 அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கடனா அணை 68.50 அடியாகவும், ராமநதி அணை 56.25 அடியாகவும், கருப்பாநதி அணை 45.90 அடியாகவும், குண்டாறு அணை 32.14 அடியாகவும், அடவி நயினார் அணை 56.25 அடியாகவும் உள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், திருச்செந்தூர், கோவில்பட்டி, உவரி, திசையன்விளை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்துள்ளது.
|