Posted by Haja Mohideen
(Hajas) on 1/23/2013
|
|||
மதுரை டூ துபாய்க்கு நேரடி விமானம்.. ஏர் இந்தியா நிறுவனத்துடன் முக்கிய ஆலோசனை Wednesday, January 23, 2013, 17:19 [IST] துபாய்: மதுரையிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு, ஏர் இந்தியா விமான சேவையை துவக்க வலியுறுத்தி, துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் செய்யது எம் சலாஹுதீன் தலைமை வகித்தார். மதுரை முன்னாள் எம்.பி., ராம்பாபு, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், முதுநிலை தலைவர் ரத்தினவேல், சவுராஷ்டிரா தொழில் வர்த்தக சங்க துணைத் தலைவர் பிரபாகரன், டிராவல்ஸ் கிளப் தலைவர் முஸ்தபா மற்றும் அமீரக ஏர் இந்தியா அமீரக மேலாளர் ராம்பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். ஈடிஏ மெல்கோ செயல் இயக்குநர் அஹமது மீரான் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் செய்யது சலாஹுதீன் பேசுகையில், மதுரையிலிருந்து வளைகுடாவிற்கு குறிப்பாக அமீரகத்திற்கு நேரடி விமான சேவையை தொடங்குவதன் மூலம் தென் மாவட்டங்களின் தொழில் வளம் பெருகும். மேலும் வளைகுடாவிலிருந்து சுற்றுலா மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு அதிகளவில் வருகிறார்கள். இவர்கள் மதுரைக்கு வருவது அதிகரிக்கும். மதுரை விமான நிலையத்திலிருந்து வெளியே வாகனங்களில் எவ்வித நெரிசலும் இல்லாமல் செல்லும் அளவுக்கு சாலை வசதிகள் உள்ளன. இது மற்ற விமான நிலையங்களில் இல்லாத வசதியாகும். இதற்காக எங்கள் நிறுவனத்தின் சார்பாக அனைத்து ஆதரவையும் தர தயார் என்றார்.
முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ். ராம்பாபு பேசுகையில், நேரடி விமானப் போக்குவரத்திற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இக்கோரிக்கைகள் குறித்து மத்திய விமான போக்குவரத்துதுறை அமைச்சரிடம் வலியுறுத்தி விரைவில் துவங்க ஏற்பாடு செய்வோம் என்றார் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் கூறுகையில், மதுரை துபாய் விமான சேவைக்கு ஈடிஏ குழும நிர்வாக இயக்குநர் ஸலாஹுத்தீன் அவர்கள் எடுத்து வரும் முயற்சிகளுக்காகவும், நேரடி விமானத்திற்கு இங்கே (துபாய்) தமிழர்களிடத்திலே கிடைக்கும் ஆதரவை கண்டும் மிகவும் மகழ்ச்சியடைந்தோம். வர்த்தக ரீதியாக மதுரை- துபாய் விமான சேவை வெற்றிகரமாக நடைபெறும் மேலும் மத்திய அரசாங்கம் இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும். கோடை கால சீசனான மார்ச் 29க்குள் இதற்கான அறிவிப்பு வெளிவர வேண்டும் என்றார். இறுதியாக அமீரக ஏர் இந்தியா நிறுவன மேலாளர் ராம்பாபு பேசுகையில், இந்த ஆலோசனைக் கூட்டம் மிகவும் பயனுள்ளது. இக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்ட புள்ளி விபரங்களின்படி நிச்சயம் இவ் வழித்தடம் லாபகரமாக இயங்கும் என்பதில் சந்தேகமில்லை. இதற்கு மேல் எந்த ஒரு புள்ளி விபரமும் தேவைப்படாது. இங்கு விவாதிக்கப்பட்ட விஷயங்களை ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமையகத்திற்கு எடுத்து செல்வேன். வெகு விரைவில் இதற்கான நல்ல அறிவிப்பை ஏர் இந்தியா நிறுவனம் வெளியிடும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மதுரை பாண்டியன் ஹோட்டல் இயக்குநர் முனைவர் வாசுதேவன், மதுரையிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு விமான சேவை சம்பந்தமான சந்தை ஆய்வை ஒளி-ஒலிக்காட்சி மூலம் விளக்கினார். மதுரையிலிருந்து தொழில் வர்த்தக சங்கம், சவுராஷ்டிரா தொழில் வர்த்தக சங்கம், டிராவல்ஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும் துபாய் அமீரக தமிழ் மன்றம் சார்பில் அமுதரசன், அமீரக தமிழ் அமைப்பு சார்பில் அஹமது மைதீன், காயிதேமில்லத் பேரவை ஹபீபுல்லா, வாணலை வளர் தமிழ் மன்றம் கீழை ராஸா, ஈமான் சார்பில் ஹமீது யாசின், துபை தமிழ்ச் சங்கம் ஜெகந்நாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இரவண சமுத்திரம் முகைதீன் பிச்சை நன்றியுரையாற்றினார். கீழக்கரை ஹமீது ரஹ்மான் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இடிஏ நிறுவனத்தின் சார்பில் தலைமை அலுவலக மேலாளர் அரிகேசவநல்லூர் எஸ்.எஸ். மீரான் செய்திருந்தார். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |