உலகில் தலைசிறந்த உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனமான, "நெஸ்ட்லே' தயாரிப்புகளில், குதிரை மாமிசம் கலக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. பிரபல, "நெஸ்ட்லே' நிறுவனம், பல வகை உணவுப் பொருட்களை தயாரித்து, உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்த நிறுவனம் தயாரித்த, மாட்டிறைச்சி கலந்த உணவுப் பொருளில், குதிரையின் மாமிசம் கலப்படம் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த கலப்பட புகார் காரணமாக, நெஸ்ட்லே நிறுவனம், இத்தாலி மற்றும் ஸ்பெயினில் உள்ள, ஒப்பந்த கம்பெனிகளிடமிருந்து பொருட்கள் வாங்குவதை நிறுத்தியுள்ளது.
முதலில், இந்த குதிரை மாமிச கலப்பு புகாரை மறுத்த, நெஸ்ட்லே நிர்வாகம், தற்போது தவறை ஒப்புக் கொண்டுள்ளது. பொதுவாக, ஐரோப்பிய நாடுகளில், மாட்டிறைச்சியில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களுக்கு, நல்ல வரவேற்பு உள்ளது. இதில் உலகின் தலைசிறந்த உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனமான, நெஸ்ட்லேவின் தயாரிப்புகளை, பொது மக்கள் விரும்பி வாங்குவது வழக்கம். இதற்கு, அந்நிறுவனத்தின் சுவையும், தரமும் காரணம். ஆனால், தற்போது இந்நிறுவனப் பொருட்களில், கலப்படம் செய்யப்பட்ட செய்தி வெளியாகி உள்ளதால், இதன் வியாபாரம் பாதிக்கும் அபாயம் ஏற்றபட்டுள்ளது.
இது குறித்து, நெஸ்ட்லே நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: எங்கள் நிறுவனம், தரத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கும். வாடிக்கையாளரின் நலனே எங்களுக்கு முக்கியம். எங்கள் நிறுவனத்திற்கு, பொருட்கள் சப்ளை செய்யும் இரண்டு கம்பெனிகளின் பொருட்களில், கலப்படம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த, இரண்டு நிறுவனத்திடமிருந்தும், பொருட்கள் வாங்குவதை நிறுத்திவிட்டோம். இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த இந்த கம்பெனிகளின் தயாரிப்புகளில், 1 சதவிகிதத்துக்கும் மேலாக, மாட்டிறைச்சியில், குதிரையின் மாமிசம் கலப்படம் செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க, தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு நெஸ்ட்லே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
|