Posted by S Peer Mohamed
(peer) on 3/19/2013
|
|||
(தோற்றம் 03. 08. 1931, மறைவு: 03. 03. 2013) கழகத் தலைவர் கலைஞர் அவர்களாலும் பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்களாலும் 'மன்சூர்' என்று அன்புடன் அழைக்கப்பட்டு அவர்களின் நெஞ்சுக்கு நெருக்கமாக இருந்த நெல்லைமாவட்டக் கழக மூத்த முன்னோடி அலிசேக் மன்சூர் மறைந்து விட்டார் என்ற செய்தி தி. மு. கழகத்திற்கு, குறிப்பாக நெல்லை மாவட்டக் கழகத்திற்குப் பேரதிர்ச்சியைத் தந்தது. இயக்கப் பற்றுக்கு இலக்கணமாக இருந்த அலிசேக் மன்சூர் மாணவப் பருவத்திலேயே கருஞ்சட்டை வீரராக பகுத்தறிவுப் பணியாற்றியவர். துடிப்பும் துணிச்சலும் இளமைக் காலத்திலிருந்தே அவரின் அடையாளம். 1948 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் அண்ணா அவர்கள் வராத நிலையில், 'அண்ணா ஏன் வரவில்லை என்று துண்டுச் சீட்டுக் கொடுத்து பெரியாரிடம் கேள்வி கேட்ட நிகழ்வு முதல் தலைமுறை திமுகவினரால் மறக்க முடியாததாகும். இந்தி எதிர்ப்பு, இட ஒதுக்கீடு, விலைவாசி உயர்வு தொடர்பாக நடைபெற்றப் பல போராட்டங்களிலும் பங்கேற்றவர். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே இந்தி எழுத்து அழிப்புப் போராட்டம் உள்ளிட்ட இயக்கப் போராட்டங்களில் கலந்து கொண்டதால் அன்றைய ஆட்சியாளர்களால் பலமுறை கைது செய்யப்பட்டார். திமுக மாணவர் அமைப்பைத் தொடக்கி, இளைஞர்களிடம் கழகத்தை மிகப் பெரிய அளவில் வளர்த்தெடுத்தவர்களில் முக்கியமானவர் அலிசேக் மன்சூர் அவர்கள். ஒருமுறை அண்ணாவிடம் 'கழக மாநாட்டில் யார் யாரெல்லாம் பேசுகிறார்கள்?" என்று கேட்டபோது, 'அண்ணாதுரை முதல் அலிசேக் மன்சூர் வரை" என்று அண்ணாவால் குறிப்பிடப் பட்டது மறக்கமுடியாத வரலாற்றுப் பதிவாகும். திமுகழகத்த்தின் நெல்லை மாவட்ட முதல் மாநாட்டுச் செயலாளராக இருந்த பெருமைக்குச் சொந்தக்காரர் இவர். அலிசேக் மன்சூர் எத்தகைய உறுதியான கட்சிக்காரராக இருந்தார் என்பதை உணர்ந்துகொள்ள அவரது மறைவை ஒட்டி தி. மு. கழகப் பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்கள் வெளியிட்டிருந்த இரங்கல் அறிக்கை ஒன்று போதும். 'திமுகழகத்தின் தொடக்க காலம் முதலே கட்சிப் பணியாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் பேரன்பைப் பெற்றவர். கழகத்தை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்ற சிறந்த பேச்சாளர். எந்த நிலையிலும் தடம் மாறாதவர்" என்று இனமானப் பேராசிரியர் அவர்கள் அலிசேக் மன்சூர் அவர்களுக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார். சிறந்த பேச்சாளராக மட்டுமல்லாமல் இயக்கப் பணிகளில் ஒன்றான இலக்கியப் பணியிலும் முத்திரைப் பதித்தவர். கிளர்ச்சி, நம்நாடு, தென்றல், தனியரசு, முரசொலி உள்ளிட்ட இதழ்களில் அரசியல் கட்டுரைகளும் இலக்கியக் கட்டுரைகளும் தொடர்ந்து எழுதி வந்த அருமை மிகு எழுத்தாளர். இவருடைய மூத்தத் தலைமுறை முதல் மூன்றாம் தலைமுறை வரை திராவிட இயக்க உணர்வு கொண்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கதாகும். பெரியாரிடமும் சுயமரியாதை இயக்கத் தலைவர்களிடமும் மிகுந்த மதிப்பு வைத்திருந்தவர் இவருடைய தந்தையார் . அலிசேக் மன்சூர் அவர்களின் திருமணம் ஏராளமான கழகத் தலைவர்களின் முன்னிலையில் 1954ல் நடைபற்றது. மும்பை புறநகர் திமுகவின் இன்றைய செயலாளராக உள்ள இவருடைய மகன் அலிசேக் மீரானின் திருமணம் தலைவர் கலைஞர் தலைமையில் 1981ல் நடைபெற்றது. இவருடைய பேரன் (அலிசேக் மீரானின் மகன்) மன்சூர் இம்ரானின் திருமணம் தளபதி மு. க. ஸ்டாலின் தலைமையில் 2010ல் நடைபெற்றது. திமுகழகத்தின் தலைமைப் பொதுக்குழு உறுப்பினராகவும் நெல்லை மாவட்டக் கழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் இருந்தும் சிறப்பாகப் பணியாற்றியவர். அலிசேக் மன்சூர் அவர்களின் இல்லத்திற்கு வராத திராவிட இயக்கத் தலைவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இயக்கத்தின் மூத்த தலைவர்கள் பலரும் மிகவும் நெருக்கமாக இவருடன் பழகி இருக்கிறார்கள். 1950 ல் கலைஞரை அழைத்து பொதுக்கூட்டம் நடத்தியவர் இவர், 1955 ஆம் ஆண்டு நெல்லை மாவட்ட சுற்றுப்பயணம் சென்ற கலைஞர் இவருடைய இல்லத்தில்தான் தங்கியிருந்தார். பேரறிஞர் அண்ணாவின் நன்மதிப்பைப் பெற்ற அன்புத் தம்பியாகவும் , கலைஞர், பேராசிரியர், நாவலர், மதுரை முத்து, சி. பி. சிற்றரசு, கே. வி. கே. சாமி, என். வி. என்., எஸ். எஸ். தென்னரசு, எம். எஸ். சிவசாமி, நாகூர் அனிபா, கா. மு. கதிரவன் , இரத்தினவேல் பாண்டியன், உள்ளிட்ட கழக முன்னணித் தலைவர்கள் பலரின் மிகச் சிறந்த நண்பராகவும் விளங்கியவர். வாழ்ந்தால் இவரைப்போல இயக்கத்திற்கு உண்மையாக இருந்து வாழவேண்டும் என்று பலராலும் போற்றப்படும் அலிசேக் மன்சூர் அவர்களின் மறைவு கழகத்திற்கு மிகப் பெரிய இழப்பு என்பதில் எவ்வித ஐயமும் இருக்கமுடியாது. . .........................நன்றி அ .மீரான்
அலிசேக் மன்சூர் அவர்களின் மறைவு திராவிட முன்னேற்றக் கழகத்தின்
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |