ஏர்வாடி:ஏர்வாடியில் இலங்கை அதிபர் ராஜபக்சேயை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய எஸ்.டி.பி.ஐ., அமைப்பினர் 26 பேரை போலீசார் கைது செய்தனர்.
இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரி ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏர்வாடியில் எஸ்.டி.பி.ஐ. அமைப்பு சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்த சில காரணங்களை முன்னிறுத்தி அனுமதி மறுத்துள்ளனர்.
ஆனால் தடையை மீறி திட்டமிட்டபடி எஸ்.டி.பி.ஐ. அமைப்பினர் ஏர்வாடியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நான்குநேரி தொகுதி தலைவர் ஜாகீர்உசேன் தலைமையில் நகர தலைவர் ஆஷிக், துணை தலைவர் அயூப், செயலாளர் பீர்முகமது உட்பட 26பேர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 26பேரையும் வள்ளியூர் டிஎஸ்பி ஸ்டேன்லி ஜோன்ஸ் தலைமையில் போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திடீரென்று எஸ்.டி.பி.ஐ. அமைப்பை சேர்ந்தவர்கள் இலங்கை அதிபர் ராஜபக்சே உருவ பொம்மையை கொண்டு வந்து எரித்தனர். உடனே போலீசார் தீயை அணைத்து உருவ பொம்மையை கைப்பற்றி எடுத்து சென்றனர்.
|