Posted by Haja Mohideen
(Hajas) on 4/2/2013
|
|||
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சோதனை ஓட்டம் தொடங்கியது இம்மாதம் மின் உற்பத்தி தொடங்குகிறது பதிவு செய்த நாள் : Apr 01 | 09:17 pm
ராதாபுரம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்திக்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்துக்குள் மின்சார உற்பத்தியும் தொடங்குகிறது. கூடங்குளத்தில் மின் உற்பத்தி நெல்லை மாவட்டம் கூடங்குளம் கடலோரத்தில், சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், அணு மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. ரஷிய நாட்டு தொழில் நுட்ப உதவியுடன், இந்திய–ரஷிய விஞ்ஞானிகள் கூட்டு முயற்சியில் அணு உலைகள் நிறுவப்பட்டு உள்ளன. கூடங்குளத்தில், தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அளவுக்கு 2 அணு உலைகள் முதல் கட்டமாக நிறுவப்பட்டு இருக்கின்றன. முதல் அணு உலையில் மின் உற்பத்தியை தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகள் கிட்டத்தட்ட 100 சதவீதம் நிறைவு பெற்று விட்டன. 2–வது அணு உலையிலும் ஏறத்தாழ 95 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. முதல் உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பப்பட்டு, பல்வேறு கட்டங்களாக பரிசோதனை நடைபெற்றது. பாதுகாப்பு அம்சங்கள், இயற்கை இடர்பாடுகளை தாங்கும் தன்மை, சுற்றுச்சூழல் உள்ளிட்டவை குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு, இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்துக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பிரதமர் அறிவிப்பு இதற்கிடையே சமீபத்தில் பிரதமர் மன்மோகன்சிங் ரஷிய நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, ‘‘ஏப்ரல் மாதத்தில் கூடங்குளத்தில் மின்சார உற்பத்தி தொடங்கும்’’ என்று ரஷிய அதிபர் புதினிடம் தெரிவித்தார். இதை உறுதி செய்வது போன்று, கூடங்குளத்தில் கடந்த 4 நாட்களாக சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. அப்போது இடையிடையே திடீர் என்று பலத்த சத்தமும் கேட்கிறது. அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இப்படி பலத்த சத்தம் கேட்பதாக, அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவினர் குற்றம் சாட்டினர். ஆனால், இந்த குற்றச்சாட்டை அணுமின் நிலைய நிர்வாகம் மறுத்ததுடன், கூடங்குளம் முதல் அணு உலையில் சோதனை ஓட்டம் நடந்து வருவதை உறுதி செய்தது. இது குறித்து கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் கூறியதாவது:– தயார் நிலை கூடங்குளம் அணுமின் நிலையத்தில், உயர்தர பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டு அணு உலைகள் நிறுவப்பட்டு உள்ளன. எனவே அணுமின் நிலையத்தால் யாருக்கும் எந்த அச்சுறுத்தலும் ஏற்படாது. கூடங்குளத்தில் மின்சார உற்பத்தியை தொடங்குவதற்கு முழு வீச்சில் ஏற்பாடுகளை செய்து உள்ளோம். இதற்காக அனைத்து பரிசோதனைகளும் நடத்தி முடிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளோம். மின் உற்பத்தியை தொடங்குவதற்கான அனுமதிச் சான்று கூடிய விரைவில் கிடைத்து விடும். பிரதமர் கூறியது போல், கூடங்குளத்தில் இம் மாதம் மின்சார உற்பத்தி தொடங்கி விடும் என்று நம்புகிறோம். முதற்கட்டமாக நீராவி சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. எரிபொருளை பயன்படுத்தாமல் நடத்தப்படும் சோதனை ஓட்டம் இது. வீட்டில் குக்கரில் சமைக்கும் போது திடீர் என்று விசில் சத்தம் வருவது போல், நீராவி சோதனை ஓட்டத்தின் போது அணு உலையில் இருந்து சத்தம் வரும். இதனால் யாரும் அச்சப்பட தேவை இல்லை. அந்த சத்தம் யாரையும் பயமுறுத்தும் வகையில் இருக்காது. உதயகுமாருக்கு கேள்வி இன்னும் ஓரிரு நாட்கள் இந்த சோதனை நடைபெறும். நாங்கள் எதிர்பார்த்தது போன்று அனைத்து தொழில்நுட்பங்களின் செயல்பாடுகளும் திருப்திகரமாக உள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து நச்சுவாயு வெளியேறுவதாகவும், அதனால் பொதுமக்களுக்கு பீதி ஏற்பட்டு உள்ளதாகவும் உதயகுமார் புகார் தெரிவித்துள்ளார். விஞ்ஞான ரீதியாக தனது குற்றச்சாட்டை நிரூபிக்க அவர் தயாரா? கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விஞ்ஞானிகள், அலுவலர்கள், ஊழியர்கள் என்று ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கிறார்கள். இது தவிர ஒப்பந்த தொழிலாளர்கள் 3 ஆயிரம் பேர் வேலை பார்த்து வருகிறார்கள். இது தவிர கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றிப்பார்க்க நாள்தோறும் பள்ளிக்கூட மாணவ, மாணவிகள், அக்கம்பக்கத்து கிராமங்களை சேர்ந்தவர்கள் என்று ஏராளமானவர்கள் வந்து செல்கிறார்கள். எனவே பாதுகாப்பு விஷயத்தில் நாங்கள் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டோம். இதை மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் கூறினார். தமிழகத்துக்கு 650 மெகாவாட் கூடங்குளம் முதல் அணு உலையில் மின்சார உற்பத்தி தொடங்கியதும், உடனடியாக ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தியை பெற முடியாது. முதலில் 50 சதவீத மின்சாரம் கிடைக்கும். சுமார் ஒரு மாதத்தில் 100 சதவீத மின் உற்பத்தியை பெற முடியும் என்று விஞ்ஞானி ஒருவர் கூறினார். கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு ஒப்பந்தப்படி பகிர்ந்தளிக்கப்படும் என்று தெரிகிறது. ஒப்பந்தப்படி தமிழகத்துக்கு சுமார் 650 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். ஆனால், தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறை இருப்பதால் கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே தர வேண்டும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. முற்றுகை போராட்டம் இதற்கிடையே கூடங்குளத்தில் சோதனை ஓட்டம் நடந்து வருவதற்கு அணு உலை எதிர்ப்பாளர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். அடுத்த கட்டமாக நாளை (3–ந்தேதி) முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பு அமைந்துள்ள செட்டிகுளம் அணுவிஜய் நகரில் இந்த போராட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு போலீசார் குவிக்கப்படுகிறார்கள். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |