Posted by Haja Mohideen
(Hajas) on 4/16/2013
|
|||
Published: Tuesday, April 16, 2013, 8:33 [IST] சென்னை: தங்கத்தின் விலை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. மூன்றே நாட்கள் சவரனுக்கு ரூ 2008 குறைந்து, ரூ 20075-க்கு விற்பனையாகிறது. சர்வதேச நிலவரப்படி வரும் நாட்களில் மேலும் விலை குறையும் என்று கூறப்பட்டுள்ளதால், முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பொதுமக்களோ மகிழ்ச்சியுடன் நகைக்கடைகளில் குவிய ஆரம்பித்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை, தங்கம் முக முக்கியமான பொருளாகிவிட்டது. கடந்த 1982-ம் ஆண்டு இந்தியாவில் தங்கத்தின் தேவை 65 டன்னாக இருந்தது. காலப்போக்கில் தங்கத்தின் மீதான மோகம் மக்களிடம் அதிகரித்ததை தொடர்ந்து தற்போது இந்தியாவில் தங்கத்தின் தேவை 500 டன்னுக்கும் மேலாக இருந்து வருகிறது. இந்தியாவில் தங்கத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள். இந்தநிலையில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி, 4 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக மத்திய அரசு திடீரென்று உயர்த்தி அறிவித்தது. இதன் காரணமாக தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்தது. அப்போது தங்கத்தின் விலை குறைவதற்கு சாத்தியமில்லை என்று நகை வியாபாரிகள் கருத்து தெரிவித்திருந்தனர். அமெரிக்க பொருளாதாரம் அமெரிக்க பொருளாதார சந்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதன் விளைவாக, ஏறுமுகத்தில் சென்று கொண்டிருந்த தங்கத்தின் விலையில் இறங்குமுகம் காணப்பட்டது. அமெரிக்க பொருளாதாரத்தில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நல்ல வளர்ச்சி ஏற்பட்டதன் விளைவாக தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் தங்கத்தினை விற்பனை செய்து, அதற்கு பதிலாக பங்குச் சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாக தங்கத்தின் விலையில் அதிரடி சரிவு ஏற்பட்டு உள்ளது. சென்னையில் கடந்த 11-ந்தேதி தங்கம் ஒரு சவரன் ரூ.22 ஆயிரத்து 80-க்கு விற்பனையானது. 12-ந்தேதி சவரனுக்கு ரூ.352 விலை குறைந்து, ஒரு சவரன் ரூ.21 ஆயிரத்து 728-க்கு விற்பனையானது. 13-ந்தேதி பவுனுக்கு மேலும் ரூ.672 விலை குறைந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.21 ஆயிரத்து 56-க்கு விற்பனையானது. 14-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை பங்குச்சந்தைக்கு விடுமுறை என்பதால், தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படாமல் 13-ந்தேதி விற்பனையான விலையிலேயே தங்கம் விற்பனையானது. இந்தநிலையில் நேற்று தங்கம் அதிரடியாக ஒரே நாளில் ரூ.984 விலை குறைந்து, ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 72-க்கு விற்பனையானது. கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் அதிரடியாக பவுனுக்கு ரூ.2 ஆயிரத்து 8 விலை குறைந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 509-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.20 ஆயிரத்து 72-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் விலையேறும் போது, விலையேறுவதும், குறையும்போது, குறைவதுமாக இருந்து வரும் வெள்ளி விலையும், தங்கத்தின் விலையை போன்றே அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் நேற்றுமுன்தினம் 10 கிராம் ரூ.531-க்கும், ஒரு கிலோ ரூ.49 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்ட வெள்ளி, நேற்று 10 கிராமுக்கு ரூ.45-ம், கிலோவுக்கு ரூ.4 ஆயிரத்து 160-ம், விலை குறைந்தது. 10 கிராம் வெள்ளி ரூ.486-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.45 ஆயிரத்து 440-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 3 நாட்களில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.7 ஆயிரத்து 30 குறைந்துள்ளது. தங்கம், வெள்ளி விலை குறைந்து இருப்பதால் சென்னையில் பெரம்பூர், புரசைவாக்கம், தியாகராய நகர் உள்பட நகரின் முக்கிய கடை வீதிகளில் உள்ள நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. Read more at: http://tamil.oneindia.in/news/2013/04/16/tamilnadu-gold-rate-declines-drastically-173504.html
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |