Posted by Haja Mohideen
(Hajas) on 4/21/2013
|
|||
அறிவைத் தேடுவோம்!
( ஆக்கம் : மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி ) இறைவனின் படைப்புகளில் எத்தனை விதமான அதிசயங்களும், ஆச்சரியங்களும் நிகழ்கின்றன. விலங்குகள், பறவைகளை ஐந்தறிவாகவும், மனிதனை பகுத்தறிவென்னும் ஓர் அறிவை அதிகப்படுத்தி ஆறறிவு படைப்பாகவும் படைத்துள்ள இறைவன் அறிவையும், அனுபவத்தையும் தேடும் விஷயத்தில் மட்டும் மனிதனை விட விலங்குகள், பறவைகளை சிறப்பித்தே வைத்திருக் கிறான். மனிதன் பிறந்து வளர்ந்து வரும் பருவத்திலேதான் கொஞ்சம், கொஞ்சமாய் அறிவையும், அனுபவத்தையும் பெறுகிறான். அதுவும் அவனாக முயற்சி செய்யும் பொருட்டே அவனுக்கு அது வசமாகிறது. ஆனால் விலங்குகள், பறவைகளுக்கு அப்படியல்ல அவைகள் பிறக்கும் போதே அடிப்படை அறிவையும், அனுபவத்தையும் கொண்டே பிறந்து விடுகின்றன. உதாரணத்திற்கு ஒன்றை சொல்லலாம் ! பசி என்ற உணர்தல் உயிருள்ள எல்லாவற்றிற்கும் பொதுவானது. தாவரங் களுக்கும் கூட பொருந்தும். சரியான முறையில் தாவரங்களான செடி, கொடிகளுக்குரிய உணவு ஆதாரமான நீரை சரிவர கொடுக்கவில்லை யென்றால் அது தானாகவே வாடி கருகி அழிந்துவிடும். ஆக பசியென்பது உயிருள்ளவைகளுக்கு பொதுவானதே ! இதனடிப்படையில் பசி என்ற உணர்தல் ஏற்படும்போது பிறந்த குட்டிகளை தேடிப்போய் விலங்குகள் பாலூட்டுவதில்லை. குட்டிகளே தாயின் மடுவில் வாய் வைத்து பால் குடித்து பசி போக்கிக்கொள்ளும். ஆனால் மனிதனின் நிலையோ தலைகீழ் ! பசியை உணரும் குழந்தை தாயின் மடுவை தேடிப்போய் குடிப்பதில்லை. பசியால் அழும் குழந்தையை ஓடிப்போய் தூக்கி கொள்ளும் தாய் தன் மடியில் போட்டு பாலூட்டுகிறாள். தன் மடுவை குழந்தையின் வாயில் வைப்பது கூட தாய்தான் ! மடுவை தேடிப்போய் வாய் வைக்கும் அறிவை மனிதனாய் பிறந்த குழந்தைக்கு இறைவன் கொடுக்கவில்லை ! இன்னொரு விஷயத்தையும் இங்கே குறிப்பிடுவது மிகவும் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன் ! விலங்குகளில் பூனை தனி ரகமாகும். பூனை மலம் கழிக்கும் முன்பே மண்ணில் குழிதோண்டி விட்டு அந்தக் குழிக்குள் தான் மலம் கழிக்கும் பிறகு அந்தக் குழியை தோண்டிய மண்ணைக் கொண்டே மூடி விடும். மூடிய பிறகு அந்த இடத்தை முகர்ந்து பார்க்கும். மலக்கழிவின் வாடை வந்தால் மீண்டும் கொஞ்சம் மண்ணை அள்ளிப் போடும். வாடை வராவிட்டால் போய்விடும் ! இந்த அறிவையும் அனுபவத்தை யும் எந்த தாய் பூனையும் குட்டிகளுக்கு சொல்லிக் கொடுப்பதில்லை. விலங்குகள் தானாகவே அந்த அறிவைப் பெற்று விடுகின்றன. ஆனால் மனிதன் குழந்தையாய் தவழும் பருவத்தில், தான் கழித்த மலத்தை தானே எடுத்து வாயில் வைக்கும் காட்சிகளை பார்த்து தான் மனிதன் பிறக்கும் போது அறிவில்லாதவனாகவே பிறக்கிறான். என்னும் அசைக்க முடியாத நம்பிக்கையை பெற்றுள்ளோம். மனிதன் வளரும் போது தான் அறிவைப் பெறுகிறான். மலம், ஜலம் கழிக்கும் விஷயத்தில் சாதாரண ஒரு பூனைக்கு இருக்கும் நாகரீகம் கூட இன்று ஆறறவுக்கு சொந்தமான மனிதனிடம் இருப்பதில்லை. என்பதை நினைக்கும் போது விலங்குகளை விடவா மனிதன் கேவலமாக போய் விட்டான்? என வெட்கப்பட வேண்டியுள்ளது. அதனால் தான் மனிதன் தெருக்களிலும், நடைபாதைகளிலும் மலம் ஜலம் கழித்து விட்டு அதை அப்படியே போட்டு விட்டு போய் விடுகிறான் ! பொது இடங்களில் மலம் ஜலம் கழிக்கும் கேவலத்தை மனிதன் எங்கிருந்து கற்றானோ? தெரியவில்லை? நிச்சயம் விலங்குகளிடமிருந்து கற்றிருக்க மாட்டான் ! காரணம் பூனை போன்ற நாகரீக விலங்குகள் அதற்கு இடம் கொடுக்காது ! இன்னொரு விஷயத்தையும் நாம் யோசிப்போம் ! விலங்குகள், பறவைகள் தான் ஈன்ற குட்டிகளையோ, குஞ்சுகளையோ பிற விலங்குகள் அல்லது மனிதர்கள் தொட முயற்சித்தால் கூட தாய் பறவை அல்லது தாய் விலங்கு நம்மீது பாய்ந்து பிராண்டி விடும். தன் குஞ்சுகளை, குட்டிகளை பாதுகாப்பதில் அப்படியொரு அக்கறை உணர்வை அவைகளுக்கு இறைவன் கொடுத்துள்ளான். ஆனால் ஆறறிவு பெற்றுள்ள மனித சமுதாயமோ தான் பெற்ற குழந்தையை “பெண் சிசு” என்ற காரணத்தினால் தானே கள்ளிப்பால் கொடுத்து படு கொலை செய்து வரும் கொடுமைகளை என்னவென்று சொல்வது? இந்த ஈனச்செயலை மனிதன் எங்கிருந்து கற்றான்? விலங்குகளிட மிருந்தா? சீ…. சீ... நிச்சயமாக இருக்காது ! மனிதனை விட மிருகங்கள் எவ்வளவோ மேல் ! சிறுத்தை குட்டிகளுக்கு பாலூட்டிய நாய், நாய்க் குட்டிகளுக்கு பாலூட்டிய ஆடு என்றெல்லாம் பத்திரிகைகளில் செய்தி படிக்கிறோமே, இது விலங்குகளிடமிருக்கும் இரக்கப் பண்புகள் தானே? ஆனால் இதே ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த தாயை இழந்த குழந்தைக்கு மேல் ஜாதி பெண்ணொருத்தி பாலூட்டி உயிர் காப்பாற்றி விடுவாரா? விலங்குகளிடமிருக்கும் ஈவு இரக்கம் கூட மனிதர்களிடம் இல்லாதிருப்பது வெட்கக் கேடல்லவா? மனிதன் வளரும் போதே அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறது நியதி ! மனிதன் தேடும் அறிவு அது அவனுக்கும் அவன் சார்ந்த சமூகத்திற்கும் பயனுள் ளதாக இருக்க வேண்டும். அத்தகைய அறிவை தேடும் முயற்சியில் ஒவ்வொரு மனிதனும் சிரத்தை எடுத்துக் கொள்வது காலத்தின் கட்டாயம் !
ஒவ்வொரு மனிதனும் அறிவை தேடிக்கொள்வது எவ்வளவு அவசிய மென்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது ! அறிவென்னும் தேடலை காலத்திற்குத் தகுந்தாற் போல அமைத்துக் கொள்வது தான் மிகவும் புத்திசாலித்தனம். தற்போதைய அறிவுத்தேடல் என்பது கம்ப்யூட்டர் (கணிணி) மயமாகி விட்டது. ஒரு மனிதனின் அறிவுப் பசிக்குத் தேவையான தீனியை (கணிணி) உலகம் குறைவின்றி வழங்குகிறது என்பது மிகையல்ல ! “கரணம் தப்பினால் மரணம்” என்ற பழமொழி கம்ப்யூட்டரை நாடும் மனிதனுக்கும் பொருந்தும். கணிணி மூலம் வாழ்க்கைக்கு தேவையான நல்ல அறிவாற்றலையும் பெற முடியும் ! அதே நேரத்தில் தம் வாழ்க்கையை சீரழித்துக் கொள்வதற் கான சந்தர்ப்பத்தையும் உருவாக்கி கொள்ள முடியும். உலகின் மூலை முடுக்குகளில் நடக்கும் எந்தவொரு விஷயமானாலும் அடுத்த நிமிடமல்ல, நேரடியாகவே (கணிணி) இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு இணையதளத்தின் அடிப்படை அறிவு மிகவும் முக்கியம் ! இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இணையதள அறிவை தேடும் இன்றைய இளைஞர்களில் பெரும் பாலானோர் தமது விலை மதிப்பில்லா நேரத்தை ஆபாச காட்சிகளை பார்ப்பதற்கும், ஆபாச நாரசார செய்திகளை படிப்பதற்கும் செலவிடுவ தென்பது தன் விரல் கொண்டு தன் கண்ணையே குருடாக்கி கொள்வதற்கு ஒப்பாகும். ஆக்கப்பூர்வமான அறிவுத் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட “டேட்டிங்” வசதியை காதலர்களின் காம உணர்ச்சிகளை பரிமாறிக் கொள்ளும் ஹைவே (high way) யாக மாற்றிக்கொள்வது அபத்தமானதில்லையா? கணிணி மூலம் கடலை போடும் காதலர்களே ! கொஞ்சம் சிந்திக்கக் கூடாதா? ”டேட்டிங்” மூலம் தன் கற்பை பறி கொடுத்த அபலை பெண்களின் பரிதாப நிலையை என்னவென்று சொல்வது? தெருவுக்கு தெரு மளிகை கடைகள் வைத்த காலம் போய், “புரெளசிங் சென்டர்” வைக்கும் காலம் மாறிவிட்டது. இத்தகைய இண்டர்நெட் சென்டர் களெல்லாம் தற்போது காவல் துறையினரின் கண்காணிப்புக்குட் படுத்தப் பட்டுள்ளதாக செய்திகள் வருவது ஏன்? அறிவை தேட வேண்டிய சென்டர்களுக்குப் போய் அழிவை தேடிக் கொள்ளும் இளம் ஆண்களையும், பெண்களையும் பாதுகாக்கவே காவல் துறையினரின் இந்த கண்காணிப்பு நடவடிக்கை ! வேறு வழியின்றி இதை நமது எதிர்கால தலைமுறையினரின் ஒழுக்க வாழ்வியலுக்குரிய பாதுகாப்பு அரணாக எடுத்துக் கொள்ளவேண்டும். இணையதளங்கள் வந்தபிறகு தான் பெரும்பாலான இளைஞர்கள் வழி தவறி போய்க்கொண்டிருக் கிறார்கள் என்ற பெரியோர்களின் குற்றச்சாட்டையும் புறக்கனித்துவிட முடியாது ! அதற்காக இணைய தளங்களே வேண்டாமென சொல்லிட முடியாது. ஒரு மனிதனின் அறிவுத்தேடல் என்பது தொடக்கப்பள்ளி யிலிருந்து கல்லூரி வரை தான் என நினைத்தால் நிச்சயமாக அவன் தன்னையே ஏமாற்றிக் கொள்கிறான் என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தான் மரணிக்கும் வரை அறிவை தேடிக் கொண்டே இருக்க வேண்டும் என சொல்கிறார் ஹஸ்லிட் எனும் அறிஞர். மேலும் நம்மில் பலர் படித்து பட்டம்பெற்று ஒரு வேலையில் சேர்ந்த பின் புத்தகம் படிப்பதையே நிறுத்தி விடுகின்றனர். அன்றாட செய்திகளை கூட படிப்பதில்லை. இப்படிப்பட்ட மனிதர்கள் இறந்து விட்டால், இவர்களை அடக்கம் செய்யப்பட்ட பின் இவர்களின் கல்லறைகளில் 30 வயதில் இறந்துபோன இம்மனிதனை 60 வயதில் அடக்கியுள்ளோம் என எழுதி வைக்க வேண்டும் என்கிறார். ஹஸ்லிட் எனும் பிரபல அறிஞர். இவரது கூற்று மனிதன் தன் மரணம் வரைக்கும் அறிவை தேடிக் கொண்டேயிருக்க வேண்டும் என்பது தான். அத்தகைய அறிவை நூலகங்களுக்கு (Library) சென்று தேட முயற்சிக்க வேண்டும். அவசர யுகத்தில் அதற்கெல்லாம் நேரம் ஒதுக்க முடியா விட்டால் குறைந்தபட்சம் அன்றாட நாட்டுநடப்பு செய்திகளையாவது கேட்க, படிக்க ஆர்வம் கொள்ள வேண்டும். வீட்டுக்கு வீடு தொலைக் காட்சிப்பெட்டி வைத்தது தொலை தூரத்தில் நடக்கும் செய்திகளை தெரிந்து கொள்ளத்தானே தவிர, தொல்லை தரும் காட்சிகளை பார்த்து வீணாவதற்கல்ல ! ஒரு வீட்டில் ஒரே நேரத்தில் செய்தி கேட்பதா? (சீரியல்) தொடர் பார்ப்பதா? என வாக்கெடுப்பு நடத்தினால் அதிக வாக்கெடுப்பு வித்தியாசத்தில் அல்ல. மொத்த வாக்குகளும் (சீரியல்) தொடருக்கு கிடைத்து விடும். அதன் விளைவு கள்ளக்காதலை கண்டித்த மகனை தாயும்,கள்ளக்காதலனும் சேர்ந்து கொலை செய்தது. கள்ளக்காதலை கண்டித்த புருஷனை மனைவியும், அவளது காதலனும் சேர்ந்து துண்டுதுண்டாக வெட்டி வீசியது போன்ற கொடூரமான செய்திகளே இன்றைய நாளிதழ்களின் முக்கிய நிகழ்வுகளாய் பதிவாகி வருகின்றன. இது போன்ற கேடுகெட்ட வக்கிரமான செயல்கள் நடப்பதற்கு முழுக்காரணமும் சினிமா படங்களும், டி.வி. சீரியல் தொடர்களும் தான் ! தற்போதைய டி.வி. தொடர்களில் அதிகமாக வரும் கதாபாத்திரங்கள் ஒருவனை இரண்டு பெண்கள் அடைய முயற்சிப்பதும் ஒருத்தியை இரண்டு ஆண்கள் அடைய முயற்சிப்பது மான படுகேவலமான கன்றாவிகளை கதையென ஒளிபரப்பி வருபவர் களின் மூளையைச் சுற்றி மண்டைக்குள் ஓடிக் கொண்டிருப்பது நிச்சயம் சாக்கடை கழிவு நீராகத்தானிருக்கும். இப்படிப்பட்ட கீழ்த் தரமான சீரியல் தொடர்களுக்காக நேரத்தை செலவிடுபவர்கள் அதில் கொஞ்சத்தையேனும் அறிவை வளர்க்கும் சிறந்த நூல்களை படிக்க செலவிட்டால் போதும் ! தன்னைச் சுற்றியுள்ள மாசுக்களை களைந்து விடலாம். எதிர்காலத்தில் ஆரோக்கியமான அறிவுள்ள சமுதாயம் உருவாக இப்போதே நாம் எல்லோரும் அறிவை தேடி பயணிப்போம் !
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |