Posted by Haja Mohideen
(Hajas) on 4/24/2013
|
|||
குழந்தைகளைக் கடத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்: ஜெயலலிதா எச்சரிக்கை
Posted by: Chakra Updated: Wednesday, April 24, 2013, 10:28 [IST] சென்னை: குழந்தைகளைக் கடத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று முதல்வர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார். சட்டசபையில் உள்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், நாட்டின் செல்வங்களான குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு வழிகோலும் வகையில் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. குழந்தைகள் திருட்டு மற்றும் காணாமல் போவது பற்றிய தகவல்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் இருக்க, குழந்தை கடத்தலில் ஈடுபடுபவர்களை தடுப்புக் காவல் சட்டமான குண்டர் சட்டத்தின் கீழ், அதாவது 1982ம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் 14-ன் கீழ் காவலில் வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான உரிய சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படும். மகளிர் காவலர்கள் தமது தலைமையிடத்தை விட்டு வேறு இடங்களுக்கு பணி நிமித்தமாக செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதால், அவர்களின் குழந்தைகளை சரிவர பராமரிக்க இயலாமல் போய் விடுகிறது. இந்தக் குறையைப் போக்க, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காவல் படை தலைமையிடங்களில் குழந்தைகள் நல காப்பகங்கள் அமைக்கப்படும். இந்த ஆண்டு 17,138 காவலர்கள், 1,091 சப் இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்படுவர். டிஎஸ்பிக்கள் பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில், நடப்பாண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 30 துணைக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுவர். தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கு முதல் கட்டமாக 10,500 இளைஞர்கள் நடப்பாண்டில் தேர்வு செய்யப்படுவர். இந்த படையைச் சேர்ந்தவர்கள் காவல் துறையின் வாகனங்களை ஓட்டுதல், தபால் வினியோகம் மற்றும் கம்ப்யூட்டர் பதிவுகளை மேற்கொள்ளுதல், காவல் குடியிருப்புகளை பராமரித்தல் மற்றும் விபத்துக்குள்ளான நபர்களின் உயிரிழப்பை தடுப்பதில் காவல் துறைக்கு உதவுதல் ஆகிய பணிகளைச் செய்வர். குற்றவாளிகளையோ, கைது செய்யப்பட்டவர்களையோ மனித நேயத்தோடு, மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டும் என்று திரும்பத் திரும்ப போலீசாருக்கு அறிவுறுத்தப்படுகிறது. இதன் அவசியத்தை அவர்கள் உணரச் செய்கிறோம். அதற்காக சில வகுப்புகள், கவுன்சிலிங்கூட நடத்தப்படுகிறது. குறிப்பிட்ட சம்பவங்களில் போலீசார் பிடித்துச் சென்றபோது சில இறந்திருக்கிறார்கள் என்று சொன்னால் அவற்றின் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில போலீஸ் அதிகாரிகளின் பெயரைச் சொல்லி, அவர்கள் இன்ன குற்றம் செய்தார்கள். இன்ன தவறு செய்தார்கள் என்று சட்டப்பேரவையிலே குற்றம்சாட்டுவது முறையாகாது. சரியாக இருக்காது. எதற்கும் ஆதாரங்கள் இருக்க வேண்டும். அப்படி குற்றச்சாட்டு சொல்ல விரும்பினால், அதை ஒரு கடிதம் மூலம் தரலாம். புகார் மனுவாகக் கொடுக்கலாம். சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் கொடுக்கலாம் அல்லது என்னிடத்தில் தரலாம் அல்லது போலீஸ் கமிஷனரிடம் அல்லது டி.ஜி.பி.யிடம் கொடுக்கலாம். அவ்வாறு தரப்படும் புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஜெயலலிதா.
பாஸ்போர்ட்-பெண்கள், குழந்தைகளை காவல் நிலையத்துக்கு அழைக்கக் கூடாது: முன்னதாக விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, பாஸ்போர்ட் விசாரணைக்காக பெண்களைக் கூட காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்துகிறார்கள். இதனைத் தடுக்க வேண்டும் என்றார். அதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஜெயலலிதா, சி.ஆர்.பி.சி. சட்டத்தின்படி சாட்சியாக விசாரணை செய்யக் கூட பெண்களையும், குழந்தைகளையும் காவல் நிலையத்துக்கு அழைக்கக் கூடாது. அவர்களின் இருப்பிடத்துக்குச் சென்றுதான் விசாரிக்க வேண்டும். எனவே பாஸ்போர்ட் விசாரணைக்காக பெண்களை காவல் நிலையத்துக்கு அழைக்கத் தேவையில்லை. அவ்வாறு நடைபெற்றிருந்தால், இனி இதுபோல நிகழாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |