Posted by Haja Mohideen
(Hajas) on 6/2/2013
|
|||
பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்.
என்னருமை முஸ்லிம் சமுதாயமே!விருப்பு,வெறுப்பின்றி எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரையை படித்துவிட்டு உங்களது கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்.
இந்திய தேசம் சுதந்திரம் பெற்ற அடுத்த ஐந்தாவது வருடத்தில் அதாவது 1952-ல் முதன்முறையாக லோக்சபா என்னும் மக்களவையும்,ராஜ்யசபா என்னும் மாநிலங்களவையும்,
அரசியல் சாசன விதிமுறைப்படி உருவாக்கப்பட்டு கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலுடன் சேர்த்து மொத்தம் 15 முறை பொதுத்தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.
இவற்றில் பெரும்பாலான தேர்தல்களில் தற்போதைய காங்கிரஸ் கட்சியே வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ளன.
காங்கிரஸின் தொடர் வெற்றிக்கு முக்கிய காரணமல்ல,முழுக்காரணமும் இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்கள் தான் என்பது ஜவஹர்லால் நேரு தொடங்கி இப்போதைய சோனியாகாந்தி வரை காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கு தெரியும்.
முஸ்லிம்கள் தொடர்ந்து காங்கிரஸை ஆதரித்து வருவதற்கு ஒரே காரணம், மதவாத பாசிஷ பிஜேபி ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதுதான்!
பாபர் மசூதியை இடித்த கயவர்களை நாடாள விடலாமா?என்பதுதான் நமது மக்களின் ஆதங்கம்!
இங்கே ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன்,பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது மத்தியில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சியே நடந்து கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது!
அன்றிலிருந்து இன்றுவரை மத்தியில் ஆட்சி பொறுப்பில் இருந்த காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுக்கு செய்த நன்மைகளை பட்டியலிடமுடியாது.
காரணம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எதுவுமே செய்யவில்லை.பிறகு எதற்கு காங்கிரஸை முஸ்லிம்கள் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும்?வேறு வழியில்லாமல்தான்!
காங்கிரஸ் இல்லாவிட்டால் பீஜேபி ஆட்சிக்கு வந்துவிடும் என்ற காரணத்தை மட்டுமே பிரதான அரசியல் முதலீடாக காங்கிரஸும் அதன்கூட்டணி கட்சிகளும் காங்கிரஸை ஆதரித்துவரும் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் போன்ற சமுதாய கட்சிகளும் பயன்படுத்தி வருகின்றன.
முஸ்லிம்களுக்கு நம்மை விட்டால் வேறு நாதி இல்லை.அதனால் அவர்களின் வாக்குகள் நமக்குத்தான் கிடைக்கும் என்ற மமதையில் காங்கிரஸ் நமது சமுதாயத்தை வெறுமனே ஓட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வருகிறது.
அரசியல்,கல்வி,பொருளாதாரம்,வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முஸ்லிம் சமுதாயம் மிகவும் பின் தங்கியுள்ள விபரங்களை அறிக்கையாய் சமர்ப்பித்த ராஜேந்திர சச்சார் குழுவின் பரிந்துரைகளுக்கு என்ன தீர்வு கண்டது காங்கிரஸ்?
மத்திய அரசுத்துறைகளில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ராவின் அறிக்கையின் மீது காங்கிரஸ் எடுத்த நடவடிக்கை என்ன?
இதுவரை முஸ்லிம்களுக்கு மத்தியில் இட ஒதுக்கீடு வழங்காதது ஏன்?
பாபர்மசூதியை இடித்த கயவர்கள் யார்,யார் என அடையாளம் காட்டி அவர்களின் மீதான சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என வலியுறுத்திய லிபரான் கமிஷனின் பரிந்துரைகளின் மீது இதுவரை காங்கிரஸ் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கைப்பார்ப்பது ஏன்?ஏன்?ஏன்?.....
என முஸ்லிம் சமுதாயத்திற்கு காங்கிரஸ் செய்துவரும் துரோகங்களை அடுக்கி கொண்டே போகலாம்.
அரசியல் சதுரங்க விளையாட்டின் காய்களாக பயன்படுத்தப்படுவது முஸ்லிம் சமுதாயத்தின் வாக்குகள்தான்.குட்ட,குட்ட குனிபவனும் முட்டாள்,குனிய,குனிய குட்டுபவனும் முட்டாள் என்ற பழமொழி தான் நமக்கு நினைவுக்கு வருகிறது.
என் இனிய தமிழ் முஸ்லிம் சமுதாயமே !உனக்கு நினைவிருக்கிறதா?நமது வாக்கு வங்கிகளின் வலிமை அறிந்து தமிழகத்தில் கொடுக்கப்பட்ட மூன்றரை சதவீத இடஒதுக்கீடு!
இது நமக்கு போதுமானதல்ல என்பது தனி விஷயம்.
எதிர்வரும் 2014 பாராளுமன்ற தேர்தலுக்கு ஒவ்வொரு கட்சியும்,சமூகமும் ஆயத்தமாகி வரும் வேளையில் நமது முஸ்லிம் சமுதாயம் மட்டும் மௌனம் காப்பது வேதனையல்லவா?
நமது சமுதாய கட்சிகளும் அமைப்புகளும் என்ன செய்யப்போகின்றது?வழக்கம்போல் காங்கிரஸை ஆதரிக்கப்போகிறார்களா?அல்லது இதுநாள் வரை காங்கிரஸ் செய்துவரும் துரோகங்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்கும் முடிவை எடுக்கப்போகிறார்களா?
நமது பதிவுகள் தொடரும் இன்ஷா அல்லாஹ்.....
உங்கள் விமர்சனங்களை jahangeerh328@gmail.comஎன்ற மின்னஞ்சலில் தெரிவிக்கலாம். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |