Posted by Haja Mohideen
(Hajas) on 6/4/2013
|
|||
பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!(நிறைவு) கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்.
எதிர்வரும் 2014 பாராளுமன்ற தேர்தலுக்கு ஒவ்வொரு கட்சியும்,சமூகமும் ஆயத்தமாகி வரும் வேளையில் நமது முஸ்லிம் சமுதாயம் மட்டும் மௌனம் காப்பது வேதனையல்லவா?
நமது சமுதாய கட்சிகளும் அமைப்புகளும் என்ன செய்யப்போகின்றது?வழக்கம்போல் காங்கிரஸை ஆதரிக்கப்போகிறார்களா?அல்லது இதுநாள் வரை காங்கிரஸ் செய்துவரும் துரோகங்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்கும் முடிவை எடுக்கப்போகிறார்களா?
அல்லது திமுக கூட்டணியில் 5 அமைப்புகளும்,அதிமுக கூட்டணியில் 10 அமைப்புகளும்,காங்கிரஸ் கூட்டணியில் 2 அமைப்புகளும் பீஜேபி கூட்டணியில் 2 அமைப்புகளும்,சுயேட்சையாக 10 அமைப்புகளாக தனி தனியே பிரிந்து தேர்தலை சந்திக்கப்போகிறார்களா?
அல்லது சமுதாய நலன் கருதி விஸ்வரூபம் சினிமா படத்தின் மூலம் 24 அமைப்புகளும் ஒருங்கிணைந்தது போல வரும் பாராளுமன்ற தேர்தலிலும் ஒற்றுமையாக ஒருங்கிணைந்து 10 தொகுதிகள் ஒதுக்கும் கட்சிகளுடன் முஸ்லிம் சமுதாய கூட்டமைப்பு கூட்டணி வைக்கும் என அறிவிக்கப்போகிறார்களா?
ஒரு வேளை 10 தொகுதிகள் ஒதுக்கித்தர சம்மதித்தால்....அது திமுகவாக இருந்தாலும் சரி,அல்லது அதிமுகவாக இருந்தாலும் சரி, கௌரவமான இடங்களை பெற்றுக்கொண்டு ஒதுக்கப்படும் தொகுதிகளை ஏற்றத்தாழ்வு இல்லாமல் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டிருக்கும் முஸ்லிம் கட்சிகள் சரிசமமாக பங்கிட்டு கொண்டு தேர்தலை சந்திக்கப்போகிறார்களா?
அல்லது சமுதாயம் எதிர்பார்க்கும் அளவுக்கு தொகுதிகள் தராமல் 1 அல்லது 2 தொகுதிகள் மட்டுமே தரமுடியும் என திமுக,அதிமுக கட்சிகள் சொல்லிவிட்டால்,24 அமைப்புகளும் ஒருங்கிணைந்து முஸ்லிம் சமுதாயத்தின் வாக்கு வங்கி வலிமையை பிற கட்சிகளுக்கு உணர்த்தும் வகையில் தனி அணியாக தேர்தலை சந்திக்கப்போகிறார்களா?
ஒருவேளை தனி அணியாக தேர்தலை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டால் வெற்றி நமக்காக இல்லாவிட்டாலும், முஸ்லிம் கூட்டமைப்பினால் தான் திமுக அணி வெற்றியை இழந்தது.அல்லது அதிமுக அணி வெற்றியை இழந்தது என்ற உண்மையை நிச்சயம் அரசியல் உலகம் ஒப்புக்கொள்ளும்!
இதே நிலையுடன் அடுத்த சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் போது முஸ்லிம் கூட்டமைப்பு கேட்கும் தொகுதிகளை போட்டி போட்டுக்கொண்டு ஒதுக்கித்தரும் கட்டாய நிலை திமுக,அதிமுக கட்சிகளுக்கு உருவாகும்.
என்னருமை சமுதாயத்தலைவர்களே,
முஸ்லிம் சமுதாயத்தின் கண்ணியத்தையும்,வெற்றியையும் மட்டுமே இலக்காக கொண்டு 24 அமைப்புகளும் ஒருங்கிணைந்து ஒரே ஒருமுறை பிற கட்சிகளை தூக்கி சுமக்காமல் தனியாக தேர்தலை சந்தித்துப்பாருங்கள்,காலம் சென்ற நமதருமை ஷஹீத் பழனிபாபா அவர்களின் கனவு நினைவாகும் சூழலை அல்லாஹ் நமக்கு உருவாக்கித்தருவான்.
ஷஹீத் பழனிபாபா அவர்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ள,
தென்சென்னை,மத்தியசென்னை,மயிலாடுதுறை,தஞ்சாவூர்,
இராமநாதபுரம்,வேலூர்,திருநெல்வேலி,தூத்துக்குடி,
தேனி,கோயம்புத்தூர்,பொள்ளாச்சி போன்ற பாராளுமன்ற தொகுதிகளில் முஸ்லிம் சமுதாயத்தின் வாக்குகள்தான் வெற்றி,தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளது!
இதுபோன்ற தொகுதிகளை தெரிவு செய்து நமது சமுதாய அமைப்புகள் ஒற்றுமையுடன் வரும் பாராளுமன்றத்தேர்தலை தனி அணியாக எதிர்கொள்ளுமானால்.....
இன்ஷா அல்லாஹ்....இதற்கான வெற்றியை அடுத்த சட்டமன்ற தேர்தலில் அருவடை செய்யும் வாய்ப்பு உருவாகும்.
ஷஹீத் பழனிபாபா அவர்களின் கருத்தைத்தான் காலத்தின் அவசியமறிந்து நமது சமுதாயத்தின் தலைவர்களுக்கும்,மக்களுக்கும் நினைவூட்டி இருக்கிறேன்.
யா அல்லாஹ்!உனது அடியார்களுக்கு மத்தியில் ஒற்றுமையையும்,நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தி வைப்பாயாக!
பிணக்குகளையும்,பிளவுகளையும் எங்களை விட்டும் தூரமாக்குவாயாக!
கல்வி,தொழில்,பொருளாதாரம் போன்றவற்றில் எங்களை கண்ணியமாக வாழச்செய்வாயாக!
ஆமீன்,ஆமீன்,யாரப்பல் ஆலமீன்!
என்னருமை மக்களே,இதுபோன்று நிறைய எழுத ஆசைபடுகிறேன்.இது குறித்து உங்களின் மேலான அன்பையும்,ஆதரவையும் jahangeerh328@gmail.comஎன்ற மின்னஞ்சலில் தெரிவிக்கவும். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |