Posted by Haja Mohideen
(Hajas) on 9/4/2013 12:58:09 PM
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உணவுப் பாதுகாப்பு மசோதா மீது இருவகையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. முதல் வகை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகளால் முன்வைக்கப்படுகிறது. அவர்கள் உணவுப் பாதுகாப்பு மசோதா வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். அனைவருக்கும் வேண்டும்; அனைத்துப் பொருட்களும் வேண்டும், 35 கிலோ அல்லது நபருக்கு 7 கிலோ; இதில் எது அதிகமோ அது வழங்கப்பட வேண்டும்; அரிசி ரூ.2/- விலையில் கொடுக்கப்பட வேண்டும். இதர அத்தியாவசியப் பொருட்களும் ரேசனில் வழங்க வேண்டும். ஆதாருடனோ நேரடி பணமாற்றத்துடனோ இதை இணைக்கக் கூடாது. உள்ளிட்டவை இடதுசாரிகள் முன்வைத்த கோரிக்கைகள். இதை ஏற்றுக் கொள்ளாததால் இடதுசாரிகள் இதை விமர்சிக்கின்றனர். அடுத்த வகை, உணவுப் பாதுகாப்புச் சட்டமே கூடாது என்பவர்கள். அனேகமாக முதலாளித்துவ சிந்தனையாளர்கள் அனைவரும், முதலாளிகள் அனைவரும் இந்த வகையினர், பெரும்பாலான பத்திரிக்கைகளும் இதையே முன்வைக்கின்றனர். தமிழ் பத்திரிக்கைகளும் ஆங்கில பத்திரிக்கைகளும் உணவுப் பாதுகாப்பு மதோதா மக்களவையில் நிறைவேறியது குறித்து வெளியிட்டுள்ள செய்திகளையும் விமர்சனங்களையும் கீழே காணலாம். டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி… எல்லா பொருட்களும் விலையேறும் அபாயம்….. மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டம் காரணம்? “இறக்குமதி மூலம் தயாரிக்கப்படும் உற்பத்திப் பொருட்கள் அனைத்தும் விலை உயரும். தவிரவும் கச்சா எண்ணெய் இறக்குமதி விலையும், டாலர் மதிப்பு உயர்வால் அதிகரிக்கும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை உயர்த்தப்படும். சமையல் எண்ணெய் இறக்குமதி விலையும் இனி அதிகமாகும். மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமலாகி செயல்படும் போது, இதன் பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கும் என்பதை நேரடியாக உணர முடியும்”. ஜுனிலிருந்து 3 மாதங்களில் 21,554 கோடி அன்னிய முதலீடு வாபஸ். வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பீதியை ஏற்படுத்திய காரணங்கள்.
தினமணி ஏற்கனவே நிதிப்பற்றாக்குறை, ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்குமுள்ள இடைவெளி அதிகரித்து ரூபாயின் மதிப்பு அதலபாதாளத்தை நோக்கி சரிந்து கொண்டிருக்கிறது. திவாலாகும் நிலையில் இந்தியப் பொருளாதாரம் இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அடுத்த மக்களவைத் தேர்தலை மட்டுமே கருத்தில் கொண்டு உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தாங்குமா இந்தியா? தி. நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மக்களவையில் உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றத்தை சந்தைகள் 600 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து வரவேற்றன. சரிந்து கொண்டிருந்த ரூபாய் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ. 66/- என்பதைத் தாண்டி சென்றது. அரசியல்வாதிகள் தங்கள் முதுகுகளை தாங்களே தட்டிக் கொடுத்துக் கொண்டார்கள் – மசோதா நிறைவேறியதற்காக. மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் நிதிச்சந்தைகள் இதில் கொண்டாடுவதற்கு எதுவுமிருப்பதாக கருதவில்லை. பிஸினஸ் ஸ்டாண்டர்டு முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் திரு.பிமல் ஜலான் உணவுப் பாதுகாப்பு மசோதா பொருளாதார நிலைமையை மேலும் மோசமாக்கும். நிதிப் பற்றாக்குறையை அதிகரிக்கும் என்றார். டைம்ஸ் ஆஃப் இந்தியா உணவுப் பாதுகாப்பு மசோதா நிறவேற்றம் இந்தியாவின் பொருளாதார பிரச்சனைகளை தீவிரமாக்கும். அரசின் நிதிநிலையை பாதிக்கும் என்று உலக தர நிர்ணய நிறுவனம் மூடி (MOODY) தெரிவித்துள்ளது. டெக்கான் ஹெரால்டு உணவுப் பாதுகாப்பு மசோதா:- நல்ல அரசியல் மோசமான பொருளாதாரம். பிசினஸ் லைன் உணவுப் பாதுகாப்பு மசோதா பயத்தில் ரூபாய், சென்செக்ஸ் மூழ்குகிறது. பற்றாக்குறையை அதிகரிக்கும். பெரும் துயரம், திவால் நிலையைக் கொண்டுவரும். பத்திரிக்கைகள், அதிகார வர்க்கம், முதலாளிகள், தரநிர்ணய நிறுவனங்கள் இவற்றின் கருத்துக்கள் தான் மேலே உள்ளவை. முதலாளித்துவம் எப்போதுமே தனது நலனை தனது நலனென்று சொல்லாது. மக்கள் நலனென்று சொல்லும்; தேசத்தின் நலனென்று சொல்லும். மேலே உள்ள பத்திரிக்கைகளில் பிஸினஸ் ஸ்டாண்டர்டு செய்தி என்ன சொல்கிறது “மக்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் நிதிச் சந்தைகள்” என்கிறது. 67% மக்கள் மக்களில்லை. ஆனால், நிதிச்சந்தையில் வணிகம் செய்வோர் மட்டும் மக்கள். ஆனால், படிக்கிற வாசகனுக்கு செய்தியின் தொடர்ச்சியில் உணவில் பதுங்கிய விஷயமாக இந்தக் கருத்து ஏறும். அனேகமாக ஓரிரண்டு பத்திரிக்கைகள் தவிர மற்ற அனைத்தும் உணவுப் பாதுகாப்பு மசோதாவை இந்த நோக்கிலிருந்தே தாக்குகிறார்கள். இவர்கள்தான் நடுநிலை பத்திரிக்கைகள், மக்களின் மனசாட்சி, தமிழில் நம்பர் ஒன் பத்திரிக்கைகள், இவைதான் வெகுஜன பத்திரிக்கைகள். இவை நடுநிலை போன்றும், தேசநலன் போன்றும் தோன்றும்படி முதலாளித்துவத்திற்கு சேவை செய்து கொண்டிருக்கின்றன. உணவுப் பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய ஆண்டிற்கு ரூ. 1,25,000 கோடி தேவை. இப்போது ரூ ஒரு லட்சம் கோடி ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கூடுதலாக 25,000 கோடி ரூபாய் மட்டுமே தேவை. 80 கோடி பேருக்கு ஆண்டுதோறும் உணவளிக்க ஒட்டுமொத்த தேவையே 1,25,000 கோடி ரூபாய். அதாவது நபர் ஒருவருக்கு ஆண்டிற்கு சுமார் 1,500 ரூபாயை மட்டுமே அரசாங்கம் மானியமாக கொடுக்கப்போகிறது. இன்னும் சொல்லப்போனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, உரங்கள் ஆகியவற்றிற்கான மானியங்கள் இந்தக் காலத்தில் வெகுவாக வெட்டிக் குறைக்கப்பட்டுள்ளன. இவற்றின் கூட்டுத்தொகை மட்டுமே கூட ஒட்டுமொத்த உணவுப் பாதுகாப்பிற்கான தொகையை ஈடுகட்டிவிட முடியும். ஆனால் ஆண்டுதோறும் இந்தியாவின் பெருநிறுவனங்களுக்கு அள்ளி வீசிய தொகைகளோடு ஒப்பிடும் போது இது மிகவும் அற்பத் தொகையாகும். 2005-2006 ஆம் ஆண்டு முதல் இந்திய பெருநிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் விட்டுக்கொடுக்கப்பட்ட வரிகள் மட்டுமே 31,11,169 கோடிகள். இன்றைய மதிப்பு அப்படியே தொடரும் என்றால் அடுத்த கால் நூற்றாண்டுகளுக்கு போதுமான தொகை. (இதுகுறித்து மார்ச் 16, 2013 அன்று தி ஹிந்து நாளேட்டில் பி.சாய்நாத் எடுத்தாண்டுள்ள விபரம் கீழே)
இவ்வளவு பெரிய தொகை விட்டுக்கொடுக்கப்பட்ட போது அது பெருநிறுவனங்களுக்காக விட்டுக் கொடுக்கப்பட்டதால் அறிவுஜீவிகள் எனப்பட்டோரும் நடுநிலை நாளேடுகள் எனப்பட்டவையும் ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். ஆனால், இப்போது குதிக்கிறார்கள். Image courtesy : crocodileinwatertigeronland இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ள படி மட்டும் ரூ. 5,73,636/- கோடி பெருமுதலாளிகளுக்கு விட்டுக் கொடுக்கப்பட்ட தொகை. இதை வசூலித்திருந்தால் இந்தியாவின் பட்ஜெட் பற்றாக்குறை தீர்ந்து ரூ. 52,711/- கோடி கையிருப்பு இருந்திருக்கும். வரிஏய்ப்பு செய்தோரிடம் வரியை வசூலிக்க ஒரு சட்டம் கொண்டு வந்தார்கள். GAAR (General Annual Avoidance Rule) என்று அதற்குப் பெயர். நாடாளுமன்றம் நிறைவேற்றியது. பிரணாப் முகர்ஜி அமெரிக்கா செல்லும் முன்பு ஓராண்டு அதை நிறுத்தி வைத்தார். வேட்டி கட்டிய தமிழன் ப.சிதம்பரம் பொறுப்புக்கு வந்ததும் இன்னும் இரண்டாண்டுகள் நிறுத்தி வைத்தார். முதலீட்டாளர்களின் சென்டிமெண்ட் பாதிக்கப்படுமாம். முதலாளி மனம் கோணினால் இவர்களுக்கு இதயம் கோணிவிடும். அப்போது இந்த அறிவு ஜீவிகளும் பத்திரிக்கை தர்மகளும் ஏதும் அலட்டிக் கொள்ளவில்லை. ஏழைகளுக்கு உணவிற்கு நிதி ஒதுக்க வேண்டுமென்றால் இவர்களுக்கு கசக்கிறது. பொருளாதார சிக்கல், நாடு குட்டிச் சுவராகிவிடும் என்றெல்லாம் எழுதுகிறார்கள்; பேசுகிறார்கள்; ஏழைகளின் பட்டினியில் தான் ஒரு நாடு கெடாமல் காப்பாற்ற முடியுமென்றால், ஏழைகளுக்கு உணவளிப்பதால் ஒரு நாடு கெட்டுப்போய்விடும் என்றால் அது கெட்டுத்தான் போகட்டுமே. தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜெகம் அழியட்டுமே! |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |