Posted by Haja Mohideen
(Hajas) on 9/10/2013 3:50:58 AM
|
|||
வீட்டுமாடியில் தோட்டம் அமைக்கலாம்
பதிவு செய்த நாள் : Sep 09 | 10:45 am
தோட்டங்களில் காய்கறிகள் சாகுபடி செய்வது மட்டும் அல்லாமல் வீடுகளிலும் தோட்டம் அமைப்பது மக்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது. படித்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருவோர், தங்களது வீடுகளில் மாடித்தோட்டம் அமைக்க தொடங்கி உள்ளனர். வீடுகளில் மாடித் தோட்டம் போடுவதற்கு தோட்டக் கலைத்துறையும் உற்சாகப்படுத்தி வருகிறது. பாளையங்கோட்டை மாவட்ட மைய நூலக மாடியில் தோட்டக் கலைத்துறை சார்பில் காய்கறித் தோட்டங்கள் போடப்பட்டன. அதுவும் தற்போது நல்ல முறையில் விளைச்சலுக்கு தயாராகி விட்டது. மாடி தோட்டம் அமைப்பது குறித்து அரசின் தோட்டக்கலைத்துறை சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பலர் வீட்டு மாடிகளில் தோட்டம் போன்று பயன்பெற்று வருகிறார்கள். மாடி தோட்டம் பாளையங்கோட்டை மின்சார வாரிய காலனியில் ராமசுப்பிரமணியன் என்பவர் மாடி தோட்டம் அமைத்துள்ளார். இது பற்றி அவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது. எளிய முறையில் மாடியில் தோட்டம் போடலாம். குறைந்த இடம் இருந்தாலே போதுமானது. சிறிய பையில் மண் கலவைகளை தயார் செய்து காய்கறிகளை வைக்கலாம். தேவைக்கு ஏற்ப காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை உற்பத்தி செய்யலாம். இதில் முக்கியமானது மண் கலவை தான். மண்புழு உரம் மற்றும் தென்னை நார்க்கழிவுகளையும் கொண்டு அனைத்து பயிர்களும் நன்கு வளரும் வகையில் மண் கலவைகளை தயார் செய்யலாம். கீரை வகைகள் தண்டுக்கீரை, அரைக்கீரை, பாலாக்கீரை, வெந்தயக்கீரை உள்பட அனைத்து கீரைகளும் உற்பத்தி செய்யலாம். கத்தரிக்காய், தக்காளி, மிளகாய், வெண்டை, அவரை, முள்ளங்கி, பாகற்காய், புடலை, பீக்கங்காய் உள்பட அனைத்து காய்கறிகளையும் உற்பத்தி செய்யலாம். பொதுவாக கீரை வகைகள் விதைத்த 21 முதல் 30 நாட்களில் பயன் தரும். மற்ற காய்கறிகளை பொறுத்த வரையில் அந்தந்த பயிர்களின் வயதுக்கேற்ப தொடர்ச்சியான கண்காணித்தால் நல்ல மகசூல் பெற முடியும். இயற்கை உரங்கள் மூலம் காய்கறிகளை உற்பத்தி செய்ய முடியும். ஆடி மற்றும் புரட்டாசி மாதங்கள் காய்கறி வளர்ப்பு ஏற்ற மாதங்களாக கருதப்படுகிறது. மொட்டை மாடியில் வைக்கப்படும் பைகளுக்கு கீழே பிளாஸ்டிக் விரிப்புகள் விரிக்க வேண்டும். இந்த பிளாஸ்டிக் விரிப்புகள் மூலம் பைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் தரைத் தளத்தை பாதிக்காமல் இருக்கும். நம் வீடுகளில் நமது மேற்பார்வையில் இயற்கையான முறையில் எந்தவிதமான ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பாதிக்காத காய்கறி மற்றும் கீரைகளை உற்பத்தி செய்யலாம். சுகாதாரமான வாழ்வுக்கு வழி வகுக்கும். நான் பி.எஸ்சி வேளாண்மை படித்தவன். இவ்வாறு விவசாயி ராமசுப்பிரமணியன் கூறினார். தோட்டக்கலைத்துறை இது குறித்து தோட்டக்கலைத்துறை பாளையங்கோட்டை உதவி இயக்குனர் தமிழ்வேந்தன் கூறியதாவது:– மாடி வீட்டு தோட்டம் அமைப்பதை அரசு ஊக்குவித்து வருகிறது. இது குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தோட்டக்கலைத்துறை சார்பில் தொழில் நுட்ப உதவிகளை செய்து வருகிறோம். தோட்டம் போட விரும்புபவர்களின் வீட்டை நேராக பார்வையிட்டு, ஆலோசனை வழங்கி வருகிறோம். இடு பொருட்கள் எங்கே கிடைக்கும்? உரங்களை எப்படி பயன்படுத்துவது? குறிப்பாக இயற்கை உரங்களை பயன்படுத்தி எப்படி பயிர்களை வளர்ப்பது? என்று பொது மக்களுக்கு விளக்கம் அளித்து வருகிறோம். குறைந்தது 10 பேர் வந்தால், அவர்களுக்கு செயல் முறை விளக்கம் அளித்து வருகிறோம். வீட்டு மாடியில் தோட்டம் போட்டால் ஓய்வு நேரத்தை பயன் உள்ள வகையில் செலவழிக்கலாம். நாமே உற்பத்தி செய்த காய்கறிகளை உணவுக்கு பயன்படுத்தலாம். இயற்கையான முறையில் சத்தான உணவு நமக்கு கிடைக்கிறது. மேலும், மாடி தோட்டம் உள்ள வீடுகள் வெயில் காலங்களில் குளுமையாக இருக்கும். வங்கி அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மாடி வீட்டு தோட்டம் போட வேண்டும் என ஆர்வமாக வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்கி வருகிறோம். அதிக அளவில் கீரைகளை வளர்க்க வேண்டும் என ஆலோசனை வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |