கூடலூரைச் சேர்ந்த அக்காள், தம்பி வெறிநோய் பாதிப்பில் சிகிச்சைப் பலனின்றி மதுரையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
தேனி மாவட்டம் கூடலூர் முனியாண்டிகோயிலைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகள் பாண்டியம்மாள் (4). மகன் தேவசிரிபிரியன் (2). கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாண்டியம்மாளை தெரு நாய் கடித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் சிறுமிக்கு தடுப்பூசி அளித்துள்ளனர். ஆனால், வெறிநோய் பாதிப்புக்குரிய தொடர் ஊசியை போடவில்லை எனக்கூறப்படுகிறது.
இந்நிலையில் சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் தேனி அரசு மருத்துவமனை பரிந்துரைப்படி மதுரை அரசு மருத்துவமனைக்கு கடந்த 22-ம் தேதி காலையில் கொண்டுவந்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட சிறுமியைப் பரிசோதித்ததில் அவருக்கு ரேபீஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறுமி உயிரிழந்தாள்.
சிறுமிக்கு ரேபீஸ் பாதிப்பு இருந்ததால் சிறுமி தாய், தந்தை மற்றும் தம்பி தேவசிரிப்பிரியன் ஆகியோருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சிறுவனுக்கும் ரேபீஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. ஆனால், சிறுவனை வீட்டிற்கு அழைத்துச்செல்வதாக ராஜ்குமார் வற்புறுத்தியுள்ளார். இதனா, வைரஸ் பாதிப்புக்கு வெளியில் சிகிச்சை பெறச்செல்வதாக ராஜ்குமாரிடம் எழுதிய வாங்கிய மதுரை அரசு குழந்தைகள் நலப்பிரிவினர் சிறுவனை அனுப்பிவைத்தனர்.
இந்தநிலையில் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டதால் சிறுவனை மீண்டும் திங்கள்கிழமை இரவு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி சிறுவன் உயிரிழந்தார். இதையடுத்து மாநகராட்சி சுகாதாரப் பிரிவு ஆய்வாளர் ஆலோசனையின் பேரில் சிறுன் உடலை தகனம் செய்யப்பட்டது. அடுத்தடுத்த நாளில், மகள், மகனை ரேபீஸ் பாதிப்பில் இழந்த பெற்றோர் கதறியழுதது பரிதாபமாக இருந்தது.
சிறுமி பாண்டியம்மாள் ரேபீஸ் பாதித்து உயிரிழந்த நிலையில் அவளது தம்பிக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளித்திருக்கவேண்டும். ஆனால், சிறுவனின் பெற்றோர் அறியாமையில் வீட்டிற்கு அழைத்துச்செல்வதாக கூறியதை காரணம் காட்டி மருத்துவர்களும் ரேபீஸ் பாதித்த சிறுவனை அனுப்பியது சரியல்ல என்பதே சமூக ஆர்வலர் கருத்து. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, சிறுமி, சிறுவனுக்கு ரேபீஸ் பாதித்தது குறித்தும், சிகிச்சை குறித்தும் விசாரித்தாலே உண்மை தெரியவரும் எனக்கூறப்பட்டது