குஜராத் அரசாங்கம் தனது காவல்துறையைப் பயன்படுத்தி ஒரு இளம் பெண்ணை உளவு பார்த்த தரமற்ற நடவடிக்கை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியினர் மீது இவ்வகையான குற்றச்சாட்டுகள் புதிதல்ல என்றாலும், இவ்விசயத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் அமித் ஷாவும், நரேந்திர மோடியும் நேரடியாக சிக்கியுள்ளனர்.
இதுகுறித்த முழுமையான தகவல்களை கோப்ரா போஸ்ட் இணையதளம் வெளியிட்டிருக்கிறது.2009 ஆம் ஆண்டில், அகமதாபாத் நகரின் தீவிரவாத தடுப்பு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் ஜி.எல்.சிங்கால். அவருக்கு அமித் சிங் ஒரு வாய்மொழி உத்தரவை இட்டுள்ளார். அதன்படி ‘மாதுரி’ என்ற இளம்பெண்ணை உளவு பார்த்ததாக அந்த இணையதள தகவல்கள் (கோப்ரா போஸ்ட்) தெரிவிக்கின்றன.
இதற்கு பல ஆதாரங்களை அந்த இணையதளம் கொடுத்துள்ளது. ஜி.எல்.சிங்கால் மற்றும் அமித் சிங் இடையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடல்கள் அதில் முக்கியமானவை. இந்த தொலைபேசி உரையாடல் தொகுப்பு முழுவதும் சிபிஐ வசம் இருந்துள்ளன. அவற்றை மேற்கண்ட இணையதளம் வெளிக்கொண்டு வந்துள்ளது.
இதுகுறித்து சிபிஐ-யிடம் கொடுத்த வாக்குமூலத்தில் – ஜி.எல்.சிங்கால் என்ற ஐபிஎஸ் அதிகாரி (மோடி உள்துறைக்கு பொருப்பாக இருந்தபோது, என்கவுண்டரின் பெயரால் அப்பாவிகளை சுட்டுக் குவித்த வழக்கில் கைதானவர்) “2009 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நான் அகமதபாத் நகரின் தீவிரவாத தடுப்பு படையின், காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டேன். பவ்னகர் நகராட்சி ஆணையராக பின்னர் நியமிக்கப்பட்ட திரு. பிரதீப் ஷர்மாவின் நடவடிக்கைகளை கண்காணிக்குமாறு, திரு அமித் ஷா என்னை பலமுறை கேட்டுக் கொண்டார். மாதுரி என்ற இளம் பெண்ணை பின்தொடரவும் என்னை கேட்டார். இதற்காக, குற்றப் பிரிவிலிருந்து சில காவலர்களை நான் நியமித்தேன். (CBI on April 17, 2013.)
அமித் ஷாவுக்கும், சிங்காலுக்கும் இடையில் நடந்த ஒரு தொலைபேசி உரையாடல் கீழே:
G.L.Singhal:: சார், நமஸ்தே சார்
Amit Shah:: நைட்டு என்ன நடந்துச்சு?
G.L.Singhal: சார், நைட்டு அவ ஒரு பையனோட 12.30 – 1 மணி வரைக்கும் இருந்தா. அப்றம் 1 மணிக்கு ஓட்டலுக்கு போனா. அப்றம் பவ்நகரில் செய்யப்பட்ட விசாரணை தகவல் எனக்கு ரொம்ப தாமதமா கெடச்சுது. அதனால உங்களுக்கு சொல்லல. அவர் பவ்நகர்லதான் இருக்கார்.
Amit Shah: அவன் மேல ஒரு கண் வையுங்க
G.L.Singhal: எங்க ஆளுக 8 மணில இருந்து வேலை பார்க்குறாங்க. நான் அவங்ககிட்ட இடத்தைக் கேட்டிருக்கேன். நமக்கு தெரியவரும்.
Amit Shah: அவ ஹோட்டலோட உள்ளூர் எண்களை எடுத்துக்கோ.
G.L.Singhal: ஆமா சார். அந்த ஹோட்டல் முன்பதிவு இன்றோட முடியுது, 11 ஆம் தேதி.
Amit Shah: புரியுது.
—
மற்றொரு உரையாடல்:
Amit Shah: சிங்கால்… அமித் ஹியர். தொடர்ந்து கண்காணி…
G.L. Singhal: சார், நாங்க ஒருத்தர ஹோட்டல் பார்க்கிங்ல நிறுத்தியிருக்கோம். இன்னொருத்தர் வெளியில. அப்றம் இன்னொருத்தர்.
Amit Shah: அவங்க இன்னும் உள்ளதான் இருக்காங்களா?
G.L. Singhal: இப்போ வரைக்கும் அவங்க வெளிய வரல, அவங்க உள்ளதான் இருக்கணும்.
Amit Shah: இன்னைக்கு அவங்க மதிய சாப்பாட்டுக்கு வெளியதான போறாங்க?
G.L. Singhal: ரைட் … ரைட்…
Amit Shah: ‘சாஹேப்’கு இது குறித்து போன் வந்துச்சு
G.L. Singhal: Ok… ok…
Amit Shah: அதனால, நீ யார் கூட போறானு பார்த்துக்கோ.
G.L. Singhal: சார்…
Amit Shah: அது, அவளை பார்க்க வர பையனா இருக்கும்
G.L. Singhal: Ok… ok…
Amit Shah: உண்மை என்னனா… சாஹெப்-கு எல்லா தகவலும் வருது, நாம் ஏதாச்சும் ஓட்டைவிட்டா, அது அவருக்கு தெரிஞ்சிடும்.
G.L. Singhal: Of course….of course
Amit Shah: So you please…
G.L. Singhal: சார், நானே நேர்ல போய் ஏற்பாடுகளை கவனிக்குறேன்.
Amit Shah: நீயே போய் ஏற்பாடுகளை பார்ப்பது நல்லது.
G.L. Singhal: பக்கத்துலதான் இருக்கேன். 10 நிமிசத்துல போயிடுவேன்.
சுமார் 1 மணி நேரத்திற்கு மேலான உரையாடல்கள் அந்த தளங்களில் கிடைக்கின்றன. முழுமையும்: (http://www.youtube.com/watch?v=roVZrT2_xuc)
—-
‘மாதுரி’ என்ற பெண்ணின் தனிப்பட்ட நடவடிக்கைகளை கவனிக்க, முழு காவல்துறை சக்தியும் பயன்படுத்தப்பட்டிருப்பதுடன் – இந்த முறைகேடான உளவு வேலை அமித் ஷாவின் வாய்மொழி உத்தரவின் அடிப்படையில் செய்யப்பட்டதாக சிங்கால் சிபிஐ-யிடம் சொல்லியிருக்கிறார்.
காவல்துறை அதிகாரிகள், ‘ஷாப்பிங் மால், உணவு விடுதி, ஐஸ் கிரீம் பார்லர், ஜிம், சினிமா ஹால், ஹோட்டல் மற்றும் விமான நிலையம் என அந்தப் பெண்ணின் பின்னாலேயே அலைந்துள்ளது. அவர் விமானத்தில் சென்றபோது, அவளை பின்தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளையும் செல்லச் சொன்னது பதிவாகியுள்ளது. அந்தப் பெண்ணை சந்திக்கும் ஆண்கள் குறித்த தகவல்களையும், யாரோடு அவள் விடுதியில் தங்கினாள் என்பதையும் அறிய அமித் ஷா ஆர்வமாக இருந்துள்ளார். அந்தப் பெண்ணின் தொலைபேசி மட்டுமல்லாது அவளது குடும்பத்தினர் அனைவரின் தொலைபேசிகளும் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன. அப்போது ‘சாஹெப்’ (தலைவர்) என ஒருத்தரை அமித் ஷா அடிக்கடி குறிப்பிடுகிறார்.
இந்த உளவு டேப்புகளின் அடிப்படையில், கண்காணிக்கப்பட்ட மற்றொரு நபர் ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரதீப் சர்மா. இவர் 2011 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். குஜராத் அரசு தன் மீது பொய்யான ஊழல் வழக்குகளை புனைவதாக குறிப்பிட்டுள்ள அவர். அரசு மீது குறிப்பிட்டுள்ள குற்றச் சாட்டுகளில், நரேந்திர மோடிக்கும் ஒரு இளம் பெண்ணுக்கும் இடையிலான தொடர்பைக் குறிப்பிட்டுள்ளார். அப்போது அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு உளவு விபரம் தெரியாது.
சிங்காலின் சாட்சியங்கள், அமித் ஷாவின் தொலைபேசி உரையாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும், அந்தப் பெண்ணின் பெயரும் ஒன்றாக உள்ளது என கோப்ரா போஸ்ட் தெரிவிக்கிறது.
குஜராத்தில் கலவரங்கள் நடக்கும்போது கட்டுப்படுத்தாமல் இருப்பதும், கலவரக்காரர்களுக்கு உதவி செய்வதும் காவல்துறையின் வேலை என நினைத்துக் கொண்டிருந்தோம். இப்போது, அவர்களுக்கு வேறு பல வேலைகளும் கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மோடியின் ராஜ்ஜியத்தில் எதுவும் ஆச்சர்யமில்லை.