நெல்லை: தென் மாவட்டங்களில் கடந்த சிலதினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இம்மழையின் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலுள்ள நீர்த்தேக்கங்கள்,அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் அகஸ்தியர் அருவி, பானத் தீர்த்தம் அருவி, குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, தமிழக கேரளா எல்லையில் உள்ள கும்பாஉருட்டி அருவி, பாலருவி,உள்ளிட்ட அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அய்யப்ப பக்தர்கள் உற்சாகமாய் குளித்து சென்ற வண்ணம் உள்ளனர்.
மழையின் காரணமாக குமரி மாவட்டத்தில் குளச்சல், நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கோதையாறு, பேச்சிப்பாறை உள்ளிட்ட மலையடிவார பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் குமரி குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வரத்து ஏற்ப்பட்டு தண்ணீர் கொட்டுகிறது.
இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க அதிக அளவில் திரண்டு வந்தனர். ஆனால் மழையின் காரணமாக தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் அருவியில் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதால் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலாப்பயணிகள் அருவியை வேடிக்கை பார்த்துவிட்டு குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற வண்ணம் உள்ளனர்