கெஜ்ரிவாலுக்கு கேள்விகள் - 2
16 மார்ச் 2014
"ஆம் ஆத்மி' கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கேள்விக்குறியான பின்னணி குறித்து, நேற்று, கேள்வி எழுப்பி இருந்தோம். இன்று, அந்த கட்சியில் உள்ளவர்கள் குறித்து உள்ள கேள்விகளை பார்ப்போம்.
1 நாடு முழுவதும், ஊழல் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில், அன்னா ஹசாரேயின், "இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம்' முக்கிய பங்கு வகித்தது. அதில் இருந்து தனியாக பிரிந்து, கட்சி துவக்கினார் கெஜ்ரிவால். ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் போது எந்த போராட்டத்திலும், உண்ணாவிரதங்களிலும் பங்கேற்காமல் வெகு தூரம் விலகி இருந்து, பலர் வேடிக்கை பார்த்தனர். அவர்கள், இன்று, ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பதவிகளில் இருக்கின்றனர். உண்மையாக போராடிய, பண பலமோ, அதிகார பலமோ, கல்வி பலமோ இல்லாத, சாமானிய மக்கள் பலரும் கட்சியில் ஒதுக்கப்படுவதும், கேள்வி கேட்பவர்கள் வெளியேற்றப்படுவதும் தொடர்ந்து நடக்கிறதே, ஏன்? கட்சி என்றான பின், அதிகார போட்டியில், சாமானிய மக்களுக்கு பதவி கொடுப்பது பலன் தராது என்பதாலா?
2 ஊழல் எதிர்ப்புக்கும், ஆம் ஆத்மி கட்சியின் தற்போதைய முக்கியஸ்தர்களுக்கும் சம்பந்தமே இல்லையே, ஏன்?
3 உ.பி., பிரசாரத்தின் போது, ஊழல் எதிர்ப்பு என்ற, நிலைப்பாட்டை மாற்றி, வழக்கமான, தேர்தல் நேர ஆயுதமான மதவாதத்தை கையில் எடுத்தது ஏன்? மதவாத ஓட்டு வங்கி அரசியலை செய்து, மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை தானே ஆம் ஆத்மி கட்சியும் செய்கிறது? இதன் பெயர் தான் மாற்று அரசியலா?
4 ரேபரேலி (உ.பி.,) தொகுதியில், பெரும் மத கலவரத்திற்கு காரணமாக இருந்தவர் மத அடிப்படை பயங்கரவாதி தபீக் ரசா கான். இவர் தான், எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீனின் தலைக்கு ஐந்து லட்சம் ரூபாய் பரிசளிக்கப்படும் என, அறிவித்தவர். இவரை, கெஜ்ரிவால், டில்லி தேர்தலுக்கு முன் சந்தித்து அரசியல் பேசியது எதற்காக? இது மதவாதம் அல்லவா?
5 "காஷ்மீர், இந்தியாவில் இருந்து பிரிய வேண்டும்' என்று, தொடர்ந்து சொல்லியும், இயங்கியும் வரும், காஷ்மீர் பிரிவினைவாதியான யாசின் மாலிக் உடன், கெஜ்ரிவால் அரசியல் பேசும் பின்னணி என்ன? இந்தியாவில் இருந்து காஷ்மீர் பிரிவதை ஊக்குவிக்கும் பிரஷாந்த் பூஷண், கெஜ்ரிவால், யாசின் மாலிக் ஆகியோருக்கு இடையே கருத்தொற்றுமை இருக்கிறது என்று, எடுத்துக் கொள்ளலாமா?
6 "குற்றப் பின்னணி இல்லாதவர்களையே, ஆம் ஆத்மி கட்சி சார்பாக வேட்பாளர் களாக நிறுத்துவோம்' என, கெஜ்ரிவால் குழு கூறியது. ஆனால்,
இந்தியாவின் இணையதள போலிகளில் ஒருவரான சோம்நாத் பாரதியை டில்லி தேர்தலில் வேட்பாளராக்கியது எதற்காக? பாலியல் வன்புணர்வு வழக்கில் சிக்கி இருக்கும் மதன் லாலை வேட்பாளர் ஆக்கியது எதற்காக? உ.பி.,யில் ஏழைகளுக்கான நிலங்களை அபகரித்ததாக குற்றம் சாட்டப்படும் பிரஷாந்த் பூஷண் எந்த அடிப்படையில் வேட்பாளாரானார்? ஆம் ஆத்மி கட்சியை மலை போல நம்பி, டில்லி தேர்தலில் ஆதரவளித்த சாமானிய மக்களான ஆட்டோ ஓட்டுனர்களுக்கு வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பை ஏன் அளிக்கவில்லை?
7. அரியானாவில், பெண்களுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை போன்ற, காட்டுமிராண்டித் தனமான தண்டனைகளை சர்வ சாதாரணமாக வழங்கி வரும் "காப்' பஞ்சாயத்துகளை ஆதரித்து, கெஜ்ரிவால் பேசி வருவதற்கு காரணம் என்ன? "காப்' பஞ்சாயத்துகளை நடத்தும் சமூகங்கள் மிகப் பெரிய ஓட்டு வங்கிகள் என்பதாலா?
8 பிற கட்சிகள் காலம் காலமாக செய்து வரும், அதே ஓட்டு வங்கி அரசியலை, கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் சிறிதும் மாற்றமின்றி செய்வது தான் மாற்று அரசியலா? கேள்விகள் தொடரும்...
http://election.dinamalar.com/detail.php?id=902
|