''என்னய்யா... அம்மா, அய்யானு ஆளாளுக்கு பிரசாரத்துல பட்டையக் கிளப்பறாங்க போல. போதாக்குறைக்கு கேப்டன் வேற, மோடி பிரதமராயிட்டா... தமிழ்நாடே சொர்க்கலோகம் ஆயிடும்னு கலக்குறாரே... நீ யாருக்கு ஓட்டுப் போடப் போறே...?!'' என்று கேட்டு, அன்றைய மாநாட்டைத் துவக்கி வைத்தார் வாத்தியார் வெள்ளைச்சாமி.
''ம்க்கும்... தேர்தல் நேரத்துல இப்படித்தான் ஒவ்வொரு தடவையும் கலர்கலரா ஆளாளுக்கு ரீல் விடறாங்க. போன தேர்தல்ல இன்னொருப் பக்கம் சேர்ந்துகிட்டு இப்படி ரீல் விட்டவங்க... இந்தத் தேர்தல்ல வேற பக்கம் சேர்ந்துகிட்டு ரீல் விடறாங்க. போன தேர்தல்ல சேர்த்துக்கிட்டவங்கள, இந்தத் தடவை கழட்டிவிட்டுட்டு, ரீல் விடறாங்க. ஆகக்கூடி, தேர்தலுக்குத் தேர்தல் எல்லா கட்சிகளுக்கும்தான் லாபம் கிடைக்குதே தவிர, நமக்கு என்னத்த கிடைக்குது'' என்று எரிச்சலாகப் பேசினார் ஏரோட்டி ஏகாம்பரம்.
''என்னய்யா... இப்படி அலுத்துக்கறே. ஏன், ஓட்டுப் போடறதுக்கு யாரும் பிரியாணி, குவார்ட்டர், 1000 ரூபாய் இதையெல்லாம் கொடுக்காம விட்டுட்டாங்களா?'' என்று நக்கலடித்தார் காய்கறி கண்ணம்மா.
எரிச்சலாகிவிட்ட ஏரோட்டி... ''அட நீவேற வயித்தெரிச்சல கிளப்பாதே. 100 சதவிகித மானியத்துல சொட்டு நீர்ப்பாசனம் தரப்படும்கிறான். போய்க் கேட்டா... அவருக்கு 5 ஆயிரம்... இவருக்கு 10 ஆயிரம்னு ஆளாளுக்கு கமிஷன் வெட்ட வேண்டியிருக்கு. இதுக்கு சொந்தக் காசுலயே போட்டுட்டு போயிடலாம் போலிருக்கு. வறட்சி நிவாரணம் 10 ஆயிரம் ரூபாய் தரப்படும்னு முதலமைச்சர் அறிவிக்கிறாங்க. கடைசியில உள்ளூர் வி.ஏ.ஓ. கொடுக்கறது என்னவோ... 4 ஆயிரம், 5 ஆயிரம்தான். மீதியெல்லாம் மேல்மட்டம் வரைக்கும் பங்குபோட்டுத் தின்னுடறாங்க. இப்படி கொள்ளையடிக்கற காசைத்தான், தேர்தல் நேரத்துல நமக்கும் கொஞ்சம் போல தட்டிவிட்டு, வளைக்கிறாங்க. அநியாயக்காரனுங்களோட காசு நமக்கெதுக்கு?'' என்று சூடாகச் சொன்னார்.
''அதுக்காக, ஓட்டுப்போடாம இருக்கறது நல்லதில்லையா... யாருக்குமே போடப் பிடிக்கலைனா... ஓட்டு இயந்திரத்துல கடைசி பொத்தானா... 'நோட்டா' வெச்சுருக்காங்க. இதை அமுக்கிட்டு வந்துடு. உன்னோட வாக்குரிமையைப் பயன்படுத்தின மாதிரியும் இருக்கும்... யாருமே சரியில்லைங்கறத அடிச்சு சொன்ன மாதிரியும் இருக்கும்ல...” என்று வாத்தியார் எடுத்துக் கொடுக்க...
''ஓ இப்படி ஒரு வசதியும் வந்தாச்சா. நோட்டுக்குப் போடறதைவிட, நோட்டா வுக்கு போட்டுட வேண்டியதுதான்! அப்பதான் இந்த ஜென்மங்களுக்கு புத்தி வரும்'' என்று சூடாகச் சொன்னார் ஏரோட்டி.
-பசுமை விகடன் 25/04/14 தேதியிட்ட இதழின் மரத்தடி மாநாடு பகுதியில்...