என்னங்க பெரிய வித்தியாசத்தைக் கண்டுட்டீங்க? எல்லா கட்சிலயும் தொழிற்சங்கம், வாலிபர் சங்கம், மாதர் சங்கம், மாணவர் சங்கம் என பல சங்கங்கள் வைத்திருக்கலாம். ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு பல பிரிவுகள் இருந்தால் தப்பா? இது போலத்தான் அதுவும்! இதைப் போய் ஏதோ மகா குற்றம் போலப் பேசுறீங்களே இது சரியா? என்று விபரம் தெரிந்தவர்களே கேட்கிறார்கள்.
இதைப் பற்றி சற்று விரிவாகப் பேச வேண்டும் என்று தோன்றுகிறது. இந்தியாவில் உள்ள பல கட்சிகளுக்கு இது போன்ற பல துணை அல்லது சார்பு அமைப்புகள் இருக்கின்றன. எனவே அரசியல் கட்சிகளுக்கு சார்பு அமைப்புகள் இருப்பது போல் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் சார்பு அமைப்புகள் இருக்கின்றன என்று ஒரே கோட்டில் வைத்துப் பார்ப்பதே முதல் தவறு. அறியாமையாகும்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு இருக்கும் வலைப்பின்னல் என்பது மேற்கண்ட எந்தவொரு கட்சிகளோடும் ஒப்பிட்டு நியாயப்படுத்தக்கூடியது அல்ல. ஏனென்றால் முதலில் ஆர்.எஸ்.எஸ். என்பது ஒரு அரசியல் கட்சி அல்ல! ஆர்.எஸ்.எஸ். என்பது ஒரு குறிப்பிட்ட மதவாத நோக்கத்திற்காகச் செயல்படும் அமைப்பு! அந்த அமைப்பின் துணை அல்லது சார்பு அமைப்புகளாகச் செயல்படுவதுதான் பாரதிய ஜனதா, விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம், இந்து முன்னணி உள்ளிட்டவை.
இதில் கவனிக்க வேண்டிய விசயம் மற்ற அரசியல் கட்சிகளுக்கு வர்க்க, வெகுஜன, இலக்கிய அமைப்புகள் என இருப்பதற்கு நேர்மாறாக, தலைகீழாக, ஆர்.எஸ்.எஸ். என்ற மதவாத அமைப்புக்கு துணை அமைப்பாக, அதன் கட்டுப்பாட்டில் செயல்படக்கூடிய அரசியல் கட்சியாக பாரதிய ஜனதா கட்சி இருக்கிறது! இங்குதான் முரண்பாடே இருக்கிறது.
மற்ற அரசியல் கட்சிகளின் முடிவை சமூகத்தின் பல பிரிவுகளில் கொண்டு சேர்க்கும், செயல்படும் அமைப்புகளாக சார்பு சங்கங்கள் இருக்கின்றன. ஆனால் பாஜக விசயத்தில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. அதாவது ஒரு அரசியல் கட்சி என்ற முறையில் பாஜக மக்களிடம் தனது கொள்கை, கோட்பாடு, நோக்கங்களை கொண்டு செல்வதற்கான சார்பு அமைப்பாக ஆர்.எஸ்.எஸ். செயல்படவில்லை. ஆர்.எஸ்.எஸ். என்ற ஒரு குறுங்குழுவின் சகிப்புத்தன்மையற்ற, பாசிச நோக்கத்தை மக்கள் சமூகத்தில் செயல்படுத்தும் அரசியல் கட்சியாக பாஜக செயல்படுகிறது.
இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் உள்ளிட்ட அமைப்புகளும் அதே குறுங்குழு பாசிச, மதவெறியை வெவ்வேறு தன்மையில் வெவ்வேறு விதத்தில் கொண்டு சேர்க்கக் கூடிய துணை அமைப்புளாகும்.
ஆக அடிப்படையிலேயே வேறுபாடு இருக்கிறது. ஒரு சமூகத்தில் வெவ்வேறு மக்கள் குழுக்களின் நலன்கள், கருத்துக்களை பிரதிபலிக்கும் அமைப்புகளாக அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. அரசியல் கட்சிகளின் வாழ்வு சமூகத்தில் அவை பிரதிநிதித்துவப்படுத்தும் வர்க்கங்களின் தன்மையோடு இணைந்திருக்கிறது. எனவே அரசியல் கட்சிகள் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அல்லது பிரதிநிதித்துவம் படுத்துவதாகக் காட்டிக் கொள்ளும் குறிப்பிட்ட மக்கள் பிரிவின் அங்கீகாரம், ஒப்புதல், இசைவைப் பெற வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே அவை சமூகத்தின் ஜனநாயக அரசியல் செயல்பாட்டில் ஏதோ ஒரு விதத்தில் பங்கேற்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எனவே அவை மக்களுக்குக் கடமைப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் மக்களுக்குக் கடமைப்பட்டதாக காட்டிக் கொள்ளவாவது செய்கின்றன.
ஆனால் மக்கள் சமூகத்தின் நலன்களுக்கு நேர் மாறாக ஒரு குறிப்பிட்ட மேலாதிக்கக் குழுவாக இருப்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.! இந்திய சமூகக் கட்டுமானத்தை வரலாற்றுரீதியாகப் பார்த்தால் ஒரு பிரமீடு கோபுரம் போன்ற சாதியடுக்கு இருப்பதை அறியலாம். அந்த பிரமீடின் உச்சாணிக் கொம்பில் எல்லா இடைநிலை, கீழ்நிலை அடுக்குகளையும் மொத்தமாக அழுத்தக்கூடியதாக, உச்சியில் கூர்மையான கூம்பாக இருக்கக்கூடிய மிக, மிகச் சிறிய குழுவின் கருத்தியல் பிரதிநிதிதான் ஆர்.எஸ்.எஸ்.,
ஆகவே இந்த அமைப்பு ஒருபோதும் தனது கருத்தியலுக்கான நியாயமான ஆதரவை ஒட்டுமொத்த சமூகத்திடமும் ஜனநாயகரீதியாகக் கோரிப் பெற முடியாது. ஆனால் அதற்காக அதைக் கைவிட்டுவிடாது! ஆகவே தான் தனது லட்சியத்தை, நோக்கத்தை எப்படியாவது சாகசமாக சாதித்துக் கொள்வதற்காக மக்கள் சமூகத்தை பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது. ஏமாற்றுகிறது. அதற்காக மக்கள் சமூகத்தை எத்தகைய விலை கொடுக்கவும் தள்ளுகிறது. எனவே தான் அது பாசிச குணம் கொண்டது என்று மதிப்பிடுகிறோம்.
ஆர்.எஸ்.எஸ்.சின் கடந்த கால, நிகழ்கால வரலாற்றை விருப்பு, வெறுப்பில்லாமல் பார்த்தாலே அதன் பாசிச குணம் தெளிவாகத் தெரியும். நாம் சமகாலத்தில் பேசக்கூடிய அரசு பயங்கரவாதம், எல்லை தாண்டிய பயங்கரவாதம் என எல்லா பயங்கரவாதங்களையும் விட ஆபத்தானது பாசிச பயங்கரவாதம்.
அது பிறர் கருத்தைப் பற்றி அக்கறைப்படாதது, மதிக்காதது, தன் கருத்தின் நியாயத்தை கருத்தியல்ரீதியாக விவாதத்துக்கு உட்படுத்தாது, அனுமதிக்காது. எதிர்த்து தர்க்கம் செய்யும் எல்லாவித கருத்துக்களையும் விவாதித்து மோதிப் பார்க்காது. மொத்தமாய் அழிக்கத் துடிக்கும். கருத்துக்களை மட்டுமல்ல, கருத்துக்களை கொண்ட மனிதர்களையும் தான்! தனது கருத்தைத் திணிக்கும், தனது மேலாதிக்கத்தை திணிக்கும், தனது ஒற்றை ஒழுங்கை ஏற்பதைத் தவிர வேறெதுவும் சமூகத்துக்கு விதிக்கப்படவில்லை என கட்டளை பிறப்பித்து அதை நிறைவேற்ற எவ்வளவு ரத்தம் வேண்டுமானாலும் குடிக்கும். இதுதான் பாசிசத்தின் குணம்.
இந்த பாசிச குணம் கொண்ட அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ். இந்த ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் கட்சிதான் பாஜக. இத்யாதி அமைப்புகள். இதை உண்மை என்று மெய்ப்பிக்க ஓராயிரம் எடுத்துக்காட்டுகள் உண்டு. ஆனால் சமீபத்திய எடுத்துக்காட்டைச் சொன்னால் இதைப் புரிந்து கொள்ள முடியும். பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவர் நரேந்திரமோடி! இவரை பிரதமர் பதவி வேட்பாளராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முதலில் தீர்மானித்தது ஆர்.எஸ்.எஸ்.தான். பாரதிய ஜனதா கட்சியல்ல.
உண்மையிலேயே உள்கட்சி ஜனநாயக அடிப்படையில் செயல்படக்கூடிய கட்சியாக பாஜக இருந்திருக்குமானால் மோடி பிரதமர் வேட்பாளராக வந்திருக்க முடியுமா என்பது கேள்விக்குறி. ஆனால் ஆர்எஸ்எஸ் தீர்மானித்துவிட்ட பிறகு பாஜகவில் அத்வானி உள்பட வேறு எந்தவொரு தலைவரும் அதை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை. மோடியை பாஜக தலைவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள் என்பது அவர்களது உள்கட்சி ஜனநாயக அடிப்படையில் சுயகட்டுப்பாட்டினால் அல்ல! ஆர்எஸ்எஸ் சொன்ன பிறகு அதை ஏற்காமல் தவிர்க்கவோ, தடுக்கவோ, மாற்றவோ அந்த கட்சியின் எந்தவொரு தலைவராலும் முடியாது!
ஒரு கற்பனைக்கு, பாஜகவின் மொத்த உறுப்பினர்கள், தலைவர்கள், நிர்வாகிகளின் பெரும்பான்மைக் கருத்து நரேந்திர மோடி வேண்டாம் என நினைப்பதாக வைத்துக் கொள்வோம், அதையும் தாண்டி மோடிதான் வேட்பாளர் என ஆர்.எஸ்.எஸ். சொல்லிவிட்டால் பெரும்பான்மை கருத்தை குப்பைத் தொட்டியில் வீசுவதைத் தவிர பாஜகவுக்கு வேறு வழியில்லை.
பிற கட்சிகளில் கொள்கை முடிவுகள் கட்சிக்கு வெளியே வேறொரு குறுங்குழுவால் தீர்மானிக்கப்படாது, திணிக்கப்படாது. அந்தந்த கட்சித் தலைமை, நிர்வாகிகளால் தான் முடிவுகள் எடுக்கப்படும். அந்த கட்சித் தலைமையின் வர்க்கச் சார்புக்கு ஏற்ப வேண்டுமானால் அவர்கள் கொள்கை முடிவுகளை சமரசம் செய்து கொள்ளக்கூடியவர்களாக, மக்கள் கருத்துக்கு மாறாக செயல்படக் கூடியவர்களாக இருக்கக்கூடும். ஆனால் அப்போதும் கூட அவர்கள் ஒரு கருத்தியல் குழுவின் சர்வாதிகாரத்துக்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்க மாட்டார்கள்.
ஆனால் முழுக்க முழுக்க ஆர்எஸ்எஸ்சின் ஒரு ஒற்றைக் கருத்தியல் திணிப்பின் அரசியல் வடிவம் தான் பாஜக. அவர்கள் ஒருபோதும் ஆர்எஸ்எஸ்சின் பிடியில் இருந்து இம்மியும் பிசக முடியாது. அப்படி ஆர்எஸ்எஸ்சின் பிடியில் இருந்து பாஜக விலகுமானால் அப்போது பாஜகவின் இருப்பே கேள்விக்குள்ளாகிவிடும்! இப்போது ஒப்பிட்டுப் பாருங்கள் பிற கட்சிகள் செயல்பாடு போலத்தான் ஆர்எஸ்எஸ் – பாஜகவின் செயல்பாடு உள்ளதா?
மீண்டும் துவக்கக் கேள்விக்கு வாருங்கள்! பிற கட்சிகளுடன் ஆர்.எஸ்.எஸ்.ஐ ஒப்பிடுவது சரியா என்று?
ஒப்பிட முடியாது, ஒப்பிட முடியாது, ஒப்பிடவே முடியாது!
ரத்தத்தில் உள்ள செல்கள் உடல் வளர்ச்சிக்கு, உயிர் வாழ்வதற்கு அவசியமானது. அவை உடலின் எல்லா உறுப்புகளின் இசைவான இயக்கத்தில் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கின்றன. ஆனால் புற்றுநோய்க் கிருமி அது உடலின் ஏதோ ஒரு இடத்தில் மையம் கொண்டு ஒற்றை ஆதிக்கமாகப் பற்றிப் பரவி ஒட்டுமொத்த செல்களையும், உடலியக்கத்தையும், உயிரையும் பறித்துவிடுகின்றன.
சமூகம் என்ற உடலியக்கத்தின் செல்களும், புற்றுநோய்க் கிருமியும் ஒன்றாகிவிடுமா? நண்பர்களே சொல்லுங்கள்!