Posted by Haja Mohideen
(Hajas) on 6/10/2014 5:07:05 AM
|
|||
புனே படுகொலை... இந்துக் குடும்பங்கள் தாக்கப்படாத வண்ணம் ரோந்து சுற்றிய முஸ்லீம் சகோதரர்கள் Posted by: Jayachitra Published: Tuesday, June 10, 2014, 12:29 [IST]
புனே: புனே தொழில்நுட்ப பணியாளர் கொல்லப்பட்டதன் எதிரொலியாக ஹடாப்சர் பகுதியில் உள்ள சைய்யது நகரில் குடியிருக்கும் இந்துக்களின் வீடுகள் எதுவும் தாக்கப் படாத வண்ணம் அங்குள்ள முஸ்லீம் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக ரோந்து மேற்கொண்டதாக தெரிய வந்துள்ளது. கடந்த வாரம் புனே தொழில்நுட்ப பணியாளரான சோலாப்பூரை சேர்ந்த மொசின் ஷேக் (24) என்ற வாலிபர் மாலை தொழுகைக்குச் சென்று திரும்பியபோது, மர்மநபர்களால் ஹாக்கி மட்டையால் தாக்கப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அந்த வாலிபர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாகப் பலியானார். பலியான மொசின் மீது சிவசேனா தலைவர் பால் தாக்கரேயையும், மராட்டிய மன்னர் சிவாஜியையும் தரக்குறைவாக விமர்சித்து 'பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த கொலை சம்பவத்தின் தொடர்புடைய ராஷ்டீரிய சேனை அமைப்பின் உறுப்பினர்கள் 17 பேரை காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இவர்கள் மீது கொலைக் குற்றம் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சமூகவலைதளமான பேஸ்புக்கில் கருத்து வெளியிட்டதற்காக வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டது புனே நகரில் பதட்டத்தை உண்டாக்கியது. அதன் தொடர்ச்சியாக சட்டமேதை அம்பேத்கரின் புகைப்படத்தை, பேஸ்புக் இணையதளத்தில் யாரோ, மோசமாக சித்தரித்துள்ளதாக பரவிய தகவலால் பல இடங்களில், தலித் அமைப்பினர் வன்முறையில் இறங்கி, பஸ்கள் மீது கல்வீசி தாக்கினர். இந்நிலையில் புனேயில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஹடாப்சர் பகுதியிலுள்ள சைய்யது நகரில் கலவரம் வெடிக்கலாம் என அச்சம் எழுந்தது. ஆனால், மாறாக அங்குள்ள முஸ்லீம்கள் மற்றும் இந்துக்கள் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு அரணாக செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதியில் வசித்து வரும் பண்டிட் டாலரே என்ற 60 வயது முதியவர் கூறுகையில், ‘அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். யாரும் மற்றவர்களைப் பார்த்து பயப்படக் கூடிய சூழல் இங்கில்லை' எனத் தெரிவித்துள்ளார். மேலும், முஸ்லீம் வாலிபர் மொசைன் அடித்துக் கொல்லப்பட்ட நாளன்று மர்மநபர்களால் தங்கள் பகுதி இந்துக் குடும்பங்கள் தாக்கப்படலாம் என கருதிய சைய்யது நகர் முஸ்லீம் குடும்பத்தார், அவர்களைப் பாதுகாக்கும் விதமாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அப்பகுதியில் குடியிருக்கும் அக்பர் ஷேக் என்பவர் கூறியுள்ளார். கலவரம் உண்டான அன்று முஸ்லீம் சகோதரர்களின் நடவடிக்கையால் தாங்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த கந்தாரே என்பவர் தெரிவித்துள்ளார். அதேபோல், அப்பகுதி மக்கள் தீபாவளி, ஹோலி, விநாயகர் சதுர்த்தி, ரம்ஜான் முதலிய பண்டிகைகளை அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாகக் கொண்டாடி வருவதே தங்களது ஒற்றுமைக்கு சாட்சி என அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |