"நம் நாட்டில் விற்பனை செய்யப்படும் 40 சதவீத வாகன உதிரிபாகங்கள் போலியானவை; இதனால் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது," என வாகன உதிரிபாக உற்பத்தியாளர் கூட்டமைப்பு(ஏசிஎம்ஏ) அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ரூ.8,500 கோடியாக இருந்த போலி வாகன உதிரிபாகங்களின் விற்பனை, கடந்த நிதி ஆண்டில் ரூ.10,500 கோடி முதல் ரூ.14,000 கோடியாக அதிகரித்துள்ளதாக ஏசிஎம்ஏ கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில் விற்பனை செய்யப்படும் 5ல் இரண்டு வாகன உதிரிபாகங்கள் போலியானவையாக இருக்கின்றன. கிளட்ச், ஃபில்டர் விளக்குகள், வைப்பர்கள், பேரிங்குகள், ஸ்டீயரிங் ஆர்ம், பிரேக்குகள் பிரேக் லைனிங் ஆகியவற்றில்தான் போலிகள் நிறைந்துள்ளன.
டிரக், கார், இருசக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களுக்கான உதிரிபாகங்களிலும் போலி உதிரிபாகங்கள் நீக்கமற நிறைந்து விட்டன. போலி உதிரிபாகங்கள் மூலம் வாகன தயாரிப்பாளர்களுக்கு மட்டுமின்றி அரசுக்கும் ஆண்டுக்கு ரூ.2,200 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது.
இதனை கட்டுப்படுத்த அதிக அளவில் முயற்சிகளும், பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டும் போதிய பலன் இல்லை. இவற்றை விட அதிர்ச்சிகரமான தகவல் என்னவெனில், நாட்டில் நடைபெறும் 20 சதவீத வாகன விபத்துக்களுக்கு போலி உதிரிபாகங்கள்தான் காரணம்.
போலி உதிரிபாகங்களின் விலை குறைவாக இருப்பதுடன், விற்பவர்களுக்கு அதிக லாபம் கிடைப்பதும் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. உள்ளூர் அதிகாரிகள் இதுபோன்ற போலி உதிரிபாகங்கள் விற்பவர்களை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாடிக்கையாளர்களும் இந்த விஷயத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், என்று வாகன உதிரிபாக உற்பத்தியாளர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.