''தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் ரயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு, ஒத்துழைப்பு தரவில்லை
தமிழகத்தில், 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில், முக்கியமான விரிவாக்க திட்டங்களை, ரயில்வே அமைச்சகம் கண்டு கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. சென்னை வந்திருந்த ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவிடம் இதுகுறித்து கேட்ட போது, ''தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் ரயில்வே திட்டங்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, ஒத்துழைப்பு தரவில்லை,'' என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
சில மாதங்களுக்கு முன், ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் சதானந்த கவுடா, துணிச்சலான ஒரு முடிவை எடுத்தார். புதிய திட்டங்கள், புதிய ரயில் சேவைகளை, அவர் அறிவிக்கவில்லை. 'ஏற்கனவே, கிடப்பில் இருக்கும் ஏராளமான ரயில்வே திட்டங்களை விரைந்து முடிப்பது தான், தலையாய அவசரம்; அதைத் தான் செய்யப் போகிறோம்' என, விளக்கம் அளித்தார்.வழக்கம் போலவே, இந்த ரயில்வே பட்ஜெட்டிலும், தமிழகம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டது. அதற்காக, வழக்கம்போல மத்திய அரசை, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்த சூழ்நிலையில், வேலுாரில் உள்ள தனியார் பல்கலைக் கழக விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக, சென்னை வந்த ரயில்வே அமைச்சர் சதானந்தா கவுடா, 25ம் தேதி இரவு, 9:30 மணிக்கு, பசி வேளையில்,
'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி: தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் ரயில்வே திட்டங்களுக்கு, மாநில அரசின் ஒத்துழைப்பு, நிதியுதவி அளிக்கப்படுகிறதா? நிலுவையில் உள்ள திட்டங்களை விரைந்து முடிக்க, தமிழக அரசு அளிக்க வேண்டியது என்னென்ன? நாடு முழுவதும், 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ரயில்வே திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், ரயில்வேயின் சரக்கு போக்குவரத்து மற்றும் பயணிகள் போக்குவரத்து கட்டணங்கள் மூலம், எங்களுக்கு வருவாயாக, 30 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கிறது.இதுதவிர, பட்ஜெட் ஒதுக்கீடாக, 30 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கிறது. இது தவிர, ரயில்வே திட்டங்களுக்காக எங்களிடம் நிதி இல்லை.அதாவது, கடுமையான நிதி நெருக்கடியில் ரயில்வே உள்ளது. முந்தைய அரசுகளால், ஏராளமான ரயில்வே திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், அவை முடிக்கப்படவில்லை.இந்திய ரயில்வே சரித்திரத்தில், முதல் முறையாக, இந்த ரயில்வே பட்ஜெட்டில் தான், புதிய திட்டங்கள் மற்றும் புதிய ரயில் சேவைகள் எதையும் நாங்கள் அறிவிக்கவில்லை.ஆனால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை முடிக்க திட்டமிட்டுள்ளோம். அவற்றில், சில திட்டங்களை, முக்கியமானவையாக நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.அந்த திட்டங்களை விரைந்து முடிக்க, நடவடிக்கை எடுத்துள்ளோம். இப்படியில்லாமல் இருந்திருந்தால், நீங்கள் எதிர்பார்ப்பது போல, ரயில்வே பட்ஜெட்டில், புதிய திட்டங்களையும், ரயில் சேவைகளையும் அறிவித்து இருப்போம்.தமிழகத்தை பொறுத்தவரை, 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, ரயில்வே திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், துரதிஷ்டவசமாக, இந்த செலவு தொகையில், மாநில அரசின் பங்களிப்பு ஏதும் இல்லை.ஆனால், அண்டை மாநிலமான கர்நாடகா, ரயில் திட்டங்களுக்கு, இலவசமாக நிலங்களை அளித்துள்ளது. ரயில் திட்டங்களை நிறைவேற்ற தேவைப்படும் தொகையில், 50 சதவீதத்தை வழங்கி உள்ளது.இதுகுறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். 'ரயில் திட்டங்களுக்கான, 50 சதவீத தொகையை, மாநில அரசு ஏற்றுக்கொண்டால், திட்டங்களை விரைந்து முடிக்க முடியும்' என்று, அதில் குறிப்பிட்டு இருந்தேன்.ஆனால், தமிழக அரசிடம் இருந்து, ரயில்வே அமைச்சகத்திற்கு, எந்த பதிலும் வரவில்லை. எனவே, ரயில் திட்டங்களுக்கு, நிதி உதவி அளிக்க வேண்டும் என, தமிழக முதல்வருக்கு மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுக்கிறேன்.தமிழகத்தில், நிலம் கையகப்படுத்தப்படுவது முதல், பல்வேறு நிலைகளில் திட்டங்கள், நடந்தபடி இருக்கின்றன. எனினும், மாநில அரசிடம் இருந்து, முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.
தமிழகத்தின் தென் மாவட்ட மக்களுக்கு, மிக அத்தியாவசியமான, செங்கோட்டை புனலுார் அகல ரயில் பாதை திட்டத்திற்கு, குறைந்தளவு நிதி ஒதுக்கீடு செய்வதால், திட்டம் தாமதமாகிறதே... தமிழகத்தின் நான்கு மாவட்ட மக்களுக்கு, தங்களின் அன்றாட பிழைப்புக்காக, கேரளாவுக்கு செல்ல இந்த ரயில் பாதை மிக அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் விரைவுப்படுத்தப்படுமா? இது மிகவும் முக்கியமான ரயில் பாதை தான். ஆனால், இந்த திட்டத்துக்காக, கடினமான நில பரப்புகளின் வழியாக, சுரங்கப் பாதை அமைக்க வேண்டி உள்ளது. இது, கொஞ்ச காலம் அவகாசம் எடுக்கும்.இந்த திட்டத்தை முடிக்க, 300 கோடி ரூபாய் தேவை. எனினும், இந்த திட்டத்தை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.அரசியல் மாச்சரியம் இன்றி, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களை, எந்தவித காலதாமதமும் இன்றி, இந்த அரசு கண்டிப்பாக முடிக்கும் என, இந்த நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். திட்டங்களை முடிக்க, நிதி நெருக்கடி பிரதான பிரச்னையாக இருக்கிறது. இருப்பினும், தனியார் பங்களிப்பு, அன்னிய முதலீடு போன்ற வழிகள் மூலம், ரயில்வே துறைக்கு நிதி திரட்டவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.வரும் நாட்களில், அதிகளவில் நிதி கிடைக்கும் என்று நம்புகிறோம். போதுமான அளவுக்கு நிதி வந்து விட்டால், திட்டமிட்டகாலத்தையும் விட, குறைவான காலத்திலேயே பணிகள் முழுமை பெற்றுவிடும்.
சென்னை மதுரை இடையே, இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால், மதுரை கன்னியாகுமரி இடையே, இரட்டை ரயில் பாதை திடத்திற்கு, தெற்கு ரயில்வே முக்கியத்துவம் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே? இந்த திட்டத்திற்கு, ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், இந்த திட்டம் குறித்து, மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். இது தொடர்பாக என்னை சந்தித்தும் அவர் வலியுறுத்தினார். திட்டம் குறித்த ஆய்வுப் பணிகள் முடிந்த உடன், திட்டத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பது தான், எங்கள் எண்ணம். அதற்கு, இரட்டை ரயில் பாதை, மூன்றாவது ரயில் பாதை ஆகியவை கட்டாயம் தேவை என்பதால், அவற்றை அமைப்பதில் தான், முனைப்பாக இருந்து செயல்படுகிறோம். அரசின் பிரதான நோக்கமும் அதுதான்.
சென்னை பெங்களூரு இடையே, மணிக்கு, 160 கி.மீ., வேகத்தில் செல்லும் ரயில்களை இயக்க வாய்ப்பு உள்ளதா? அதிவேக ரயில்களை இயக்குவதற்காக, நாடு முழுவதும், ஒன்பது செக்டார்களை தேர்வு செய்துள்ளோம். தற்போது இயக்கப்படும் ரயில்களின் வேகத்தையே, மணிக்கு 160 கி.மீ., வேகம் என்ற அளவுக்கு, உயர்த்த முயற்சி எடுத்து வருகிறோம்.அனைத்து வழித்தடங்களிலும், உடனடியாக, இது சாத்தியம் இல்லை. குறிப்பிட்ட சில வழித்தடங்களில், இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வழித்தடங்களில், பாதை வளைவாக இருப்பதும் பிரச்னையாக உள்ளது. அப்பிரச்னைகளையும் களைந்து வருகிறோம்.சென்னை பெங்களூரு வழித்தடத்தில், அதிவேக ரயில் இயக்குவதற்காக, சீனாவுடன், ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. சீன அதிபர் சமீபத்தில், இந்தியா வந்திருந்த போது, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.விரைவில், ஆய்வு நடத்தி, சென்னை பெங்களூரு வழித்தடத்தில், அதிவேக ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.பெங்களூரு மைசூரு வழித்தடத்தில், இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி, வரும்
Advertisement மார்ச் மாதத்துடன் முடிவடையும். அதன் பிறகு, சென்னை பெங்களூரு வழித்தட பணி மேற்கொள்ளப்படும்.அந்தப் பணிகள் முடிவடைந்தால், சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூருக்கு அதிவேக ரயில்கள் இயக்கப்படும்.
சென்னை கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை சாலை வழியாக, புதிய ரயில் பாதை அமைக்கப்படுமா? முன்பு வாஜ்பாய் அரசில், சாலைப் போக்குவரத்தில், தங்க நாற்கர சாலை திட்டம் அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதுபோல், இப்போது பிரதமர் மோடி தலைமையிலான அரசால், வைர நாற்கர ரயில் பாதை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டால், அனைத்து பெரு நகரங்களும், ரயில் பாதைகள் மூலம் இணைக்கப்படும்.
தமிழகத்தில், ரயில் இன்ஜின் தொழிற்சாலை அமைய வாய்ப்பு உள்ளதா? இல்லை. தற்போது, நம்மிடம் ஏராளமான திட்டங்கள் கைவசம் உள்ளன. மம்தா பானர்ஜி, லாலு பிரசாத் யாதவ் என, இதற்கு முன் ரயில்வே அமைச்சராக இருந்த பலரும், ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளனர். அவற்றையெல்லாம் விரைந்து முடிப்பது தான், இப்போதைய இலக்கு.கேரளாவில்ஏற்கனவே, இரண்டு ரயில் தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, நிறைவேற்றப்படவில்லை. எனவே, புதிய தொழிற்சாலைகள் அமைப்பது குறித்து, எந்த அறிவிப்பையும் வெளியிட வாய்ப்பு இல்லை.
சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில், அதிநவீன எல்.ஹெச்.பி., ரக பெட்டிகள் அதிகளவில் தயாரிக்கப்படுவதில்லை. அதனால், பெரம்பூர் தொழிற்சாலைக்கு, முக்கியத்துவம் குறைந்து வருகிறது. இப்பிரச்னையை களைய நடவடிக்கை எடுக்கப்படுமா? இதற்கான திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது, முடியும் தருவாயில் உள்ளது.இவ்வாறு, சதானந்தா கவுடா பேட்டியளித்தார்.
தினமும் 2.3 கோடி பேர் பயணம்:உலகளவில், ரயில் சேவை வழங்குவதில், பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே தான் மிக பெரியது; பிரமாண்டமானது. நாடு முழுவதும், 65,436 கி.மீ., துாரத்திற்கு ரயில் பாதை; 7,172 ரயில் நிலையங்களைக் கொண்டது.கடந்த, 2013 14ல், இந்திய ரயில்வே இயக்கிய ரயில்களில், 842.5 கோடி பேர், பயணம் செய்துள்ளனர். தினம்தோறும், 2.3 கோடி பேர் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். 105 கோடி டன் சரக்குகளை, இந்திய ரயில்வே கையாண்டு வருகிறது.இந்திய ரயில்வேயில், 13.2 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்தியாவில் இருக்கும் பொதுத் துறை நிறுவனங்களில் ரயில்வேத் துறை தான் மிகப் பெரியது.இந்த அளவுக்கு பிரமாண்டமான, இந்திய ரயில்வே நிறுவனம், ரயில்வே அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. கர்நாடகாவின் முன்னாள் முதல்வரான சதானந்த கவுடா தான், ரயில்வே துறையின் இந்நாள் அமைச்சர்.
சொல்பா... சொல்பா...:ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா, கர்நாடக முதல்வராக இருந்தவர். பெங்களூரு நகரில், பல ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். பெங்களூருவில், தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகம். எனவே, ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவிடம் பேட்டி துவங்கும் முன், 'தமிழ் மொழியில் பேச தெரியுமா?' என்று கேட்டபோது, சிரித்தபடி, 'சொல்பா... சொல்பா...' என்று, கன்னட மொழியில் பதில் அளித்தார்; 'சொல்ப' என்றால், தமிழில், 'கொஞ்சம்' என்று பொருள்.
நமது சிறப்பு நிருபர்
http://www.dinamalar.com/news_detail.asp?id=1079764&Print=1
|