இறைவனின் திருப்பெயரால் மணம் வீசிய ஈமானின் ஈமானிய மொட்டுக்கள் 2014
அக் 02-2014 அன்று ஏர்வாடி முஸ்லிம் அறக்கட்டளை (ஈமான் சங்கம்)சார்பாக நடைபெற்ற ஈமானிய மொட்டுக்கள் 2 ஆம் ஆண்டு நிகழ்ச்சியின் செய்தி குறிப்பு :
நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா? - திருக்குர்ஆன் 55:60 அல்லாஹ்வின் மகத்தான கிருபையினால் 02.10.2014 வியாழக்கிழமை அன்று ஏர்வாடி முஸ்லிம் கூட்டமைப்பின் (EMAN) மக்தப் மாணவ மாணவியர்களுக்கான 2 நாள் சிறப்பு நிகழ்ச்சி ஜனாப் முஜிபுர் ரஹ்மான் உமரி அவர்களின் சிறப்புரையுடன் ஏர்வாடியில் சிறப்பாக நடைபெற்றது. காலை 9 மணிக்கு 6வது தெருவில் உள்ள மீலாது மேடையில் தொடங்கிய முதல் அமர்வில் குறித்த நேரத்திற்கு முன்பே வந்து அமர்ந்த மாணவ செல்வங்களும் அவர்களின் பெற்றோர்களும் நிகழ்ச்சியை துவங்குவதற்கு ஏதுவாக அமைதி காத்து ஆர்வமோடு எதிர்பார்த்து இருந்தனர். அவர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் விதமாக சகோ.முகைதீன் மற்றும் சகோ.பிலால் அவர்களின் அறிவிப்போடு, ஜனாப்.யாசின் நூரி அவர்களின் கிராஅத்துடன் தொடங்கியது.
ஜனாப்.யாசின் நூரி அவர்களின் கிராஅத் மக்தப் மாணவ,மாணவிகளை மிகவும் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல், தாங்களும் அது போன்று ஓத வேண்டும் என்பதற்காக கிராஅத் தின் நடுவரான ஜனாப் யாசின் நூரி அவர்களின் கிராஅத்தை உன்னிப்பாக கவனித்தனர். அதனைத் தொடர்ந்து, சகோதரர் நஸீர் அவர்களின் இஸ்லாமிய எழுச்சி கீதம் (பிறை போன்ற வளர்கின்ற) மாணவ மாணவிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. பின்னர் மருத்துவர்.ஜமீல் அவர்களின் வரவேற்புரையோடு நிகழ்ச்சியின் முதல் பகுதியான 7 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கிராஅத் போட்டி துவங்கியது. அதனை அடுத்து இஸ்லாமிய விழிப்புணர்வு நாடகங்களும், வினாடி வினா போட்டிகளும், இடையிடையே நடைபெற்ற பார்வையாளர்களுக்கான வினாடி வினா போட்டிகளும் நிகழ்ச்சியின் உற்சாகத்தை அதிகரித்தன. முதல் அமர்வின் இறுதி பகுதியாக இஸ்லாமியக் கலை கண்காட்சியின் துவக்கத்தோடு நிகழ்ச்சியின் முதல் அமர்வு 1.10 மணி அளவில் நிறைவுபெற்றது
மாலை 4.15 மனிக்கு துவங்கிய 2 வது அமர்வில் ஜனாப்.அபுபக்கர் ஷாதலி அவர்கள் கிராஅத் ஓத அதனை தொடர்ந்து 7 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கான கிராஅத் போட்டி துவங்கியது, அதனை தொடர்ந்து இஸ்லாமிய விழிப்புணர்வு நாடகமும் சுட்டி குழந்தைகளின் குட்டி கதைகளும் பார்வையாளர்களை வெகுவாக ரசிக்க வைத்தது.
மக்ரிப் தொழுகையின் இடைவேளையில் அனைவருக்கும் தேனீர், பிஸ்கட்கள் வழங்கபட்டன. பெண்கள் தொழுவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் பந்தலில் செய்யப்பட்டு இருந்தன. தொழுகைக்கு பின்னர் வினாடி வினா இறுதிச் சுற்றும் நாடகமும் நடைபெற்றது. இரண்டாம் அமர்வில், சிறப்பு பொதுக்கூட்டம் ஈமான் நிறுவனர்களில் ஒருவரான ஜனாப் அபுபக்கர் ஜின்னா அவர்களின் வரவேற்புரையோடு துவங்கியது. பொதுக்கூட்டத்திற்கு ஈமானின் நிறுவனர்களில் மற்றுமொருவரான ஜனாப். ஜமால் சார் அவர்கள் தலைமை தாங்க, நிறுவனரான ஜனாப்.முகம்மது ஷாபி அவர்கள் ஈமானின் துவக்கம் பற்றித் தெரிவித்து, ஈமானுக்காக ஆரம்ப காலத்தில் உதவி செய்து ஒத்துழைப்பு அளித்த பிற ஊர்களை சார்ந்த சகோதரர்களை பற்றிய தகவல்களையும் நினைவூட்டினார்கள். அவர்களை தொடர்ந்து ஜானப்.யாசின் அவர்கள் ஈமானின் பயணங்களையும் தற்போது ஈமான் செய்து வரும் பணிகளையும் எடுத்துரைத்தார்கள். ஒரு ஹாபிளின் அனுபவத்தை தன்னுடைய உரையின் மூலம் சிறப்பாக எடுத்துரைத்தார் காயல்பட்டிணத்தை சேர்ந்த பொறியாளர் ஜனாப்.முகம்மது ரிஸ்வான் அவர்கள். அவரைத் தொடந்து நிகழ்ச்சியின் சிறப்பு பேச்சாளரும், உளவியல் ரீதியான கருத்தரங்குகளின் மூலம் பயனுள்ள பல மார்க்கப் பணிகளை செய்துவருபவருமான நிகழ்ச்சியின் சிறப்பு பேச்சாளர் ஜனாப்.முஜிபுர் ரஹ்மான உமரி அவர்கள் தனது சிறப்புரையை அனைவரும் சிந்திக்கும் வண்ணமும், பார்வையாளைகளை வசீகரிக்கும் விதமாகவும், மக்தப்பின் முக்கியத்துவத்தை பார்வையாளர்களுக்கு உணர்த்தும் விதமாகவும் எடுத்துரைத்தார்.
இவ்வாறான இஸ்லாமிய பொதுக் கூட்டங்கள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் எனினும், மக்தப்கள் மூலமாகத்தான் சமுதாய மாற்றத்தினை ஏற்படுத்த முடியும் என அவர் தனது உரையில் விளக்கினார்.
அதனை தொடர்ந்து ஈமானின் நிறுவனர்களுக்காக சிறப்பு பரிசை சிறப்பு விருந்தினர் வழங்க,சிறப்பு விருந்தினருக்கான பரிசை ஈமான் நிறுவனர்கள் ஒன்றாக சேர்ந்து வழங்கினர். நேரமின்மை காரணமாக முக்கிய போட்டிகளின் முதல் மூன்று பரிசுகளை அதன் நடுவர்களான ஜனாப்.செய்யது சார், ஜனாப்.மாஹின் சார், ஜனாப்.அபுபக்கர் ஷாதலி, ஜனாப்.யாசின் நூரி ஆகியோர் வழங்கினர் நடுவர்களுக்கான சிறப்பு பரிசை ஜனாப்.யாசின் அவர்கள் வழங்கினார்கள். நிகழ்ச்சியின் இறுதியாக ஜனாப்.முகைதீன் (நிஸ்மா) அவர்கள் நன்றியுரை நவில துஆவோடு நிகழ்ச்சி நிறைவடைந்தது.
இரண்டாவது நாளான அக்டோபர் 3 ஆம் திகதி மக்தப் மதரஸா மாணவர்களின் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு பாராட்டினர்.
இந்த நிகழ்ச்சியில் 335 போட்டியாளர்கள், மதரஸா மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை லெப்பைவளவைச் சேர்ந்த 15 க்கும் மேற்பட்ட சகோதரர்களும், பைத்துஸ் ஸலாம் சகோதரர்களும், மற்ற முஹல்லாவை சேர்ந்த சில சகோதரர்களும் கூட்டாக இணைந்து மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
குறிப்பு - இன்ஷா அல்லாஹ் இந்த நிகழ்ச்சிகளின் ஒளிநாடாக்கள் விரைவில் வெளியிடப்படும். தேவைப்படுபவர்கள் emandubai@gmail.com ,emaneruvadi@gmail.com என்ற முகவரிக்கு அல்லது 95667 73469 / 94431 13517 / 99940 57888 தொடர்பு கொள்ளவும். ஈமான் தொடர்ந்து நன்முறையில் அறப்பணிகளில் ஈடுபட தாங்கள் துஆ செய்யுங்கள். இந்த அறப்பணிகளில் பெருமளவு மனிதவளம் தேவைப்படுகிறது. இதற்காக தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்க விரும்புவோர்கள் தங்களுடைய விருப்பத்தை மேற்கண்ட மின்அஞ்சல் முகவரிகள் மூலமாகவோ அல்லது உங்களது ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் மூலமாகவோ தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டு்க் கொள்கிறோம். அல்லாஹ் நமது பணிகளை ஏற்று மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒன்றாக இருக்க அருள் புரிவானாக....ஆமீன்! ஆமீன்!! ஆமீன்!!! யாரப்பல் ஆலமீன்.
|