காவிரிப் படுகையில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிராக, பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் போராட்டம் வலுத்துள்ளது.
இதையொட்டி, ட்விட்டரில் #StopMethaneExplorationInKaveriDelta என்ற பெயரில் உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக், செவ்வாய்க்கிழமை இந்திய அளவில் முன்னிலை வகித்துள்ளது.
இதன்மூலம், இந்தப் பிரச்சினையை இந்திய அளவில் கவனத்தை ஈர்க்கவைக்கும் முயற்சியில் தமிழ் இணையவாசிகள் மேற்கொண்டுள்ளனர்.
டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் பூமிக்கு அடியில் உள்ள மீத்தேன் வாயுவைக் கிணறுகள் அமைத்து குழாய் பதித்து, அதன் மூலம் எடுத்துப் பயன்படுத்தும் மீத்தேன் வாயு திட்டம் மத்திய அரசு மற்றும் எரிவாயு நிறுவனங்களின் கூட்டு முயற்சியோடு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நிலத்துக்கு அடியில் பல நூறு அடி ஆழத்தில் துளை அமைப்பதால் பூமியில் வெற்றிடம் உருவாகும் என்றும், இதனால் வெற்றிடத்தில் கடல் நீர் புகுந்து விளைச்சல் நிலம் பாழாகும் என்று எதிர்ப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதனால், இந்தத் திட்டத்துக்கு டெல்டா மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வு அமைப்புகள் பலவும் அதரவு தெரிவித்து பல கட்ட போராட்டங்களை நடத்தி, இந்தத் திட்டத்துக்கு தங்களது எதிர்ப்பை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், இந்த திட்டத்துக்கான துளை அமைக்கும் பணிகளும், நிலங்களை விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தும் நடவடிக்கைகளும் தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் நடந்து வருகின்றது.
இந்தத் திட்டத்தால் டெல்டா மாவட்டங்களில் செழுமை பாதிக்கப்பட்டு விளைச்சல் பொய்த்து போகும் என்று டெல்டா மாவட்ட விவசாயிகளும் இயற்கை ஆர்வலர்களும் தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் இதற்காக பல கையெழுத்து இயக்கங்களும் போராட்டங்களும் தொடர்ந்து நடத்தப்பட்டன. இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ட்விட்டரில் மீத்தேன் எரிவாயு திட்டத்துக்கு எதிரான கோஷங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
உலக அளவில் ட்விட்டர் வலைதளத்தை பயன்படுத்தும், பல போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்படுவதும் வழக்கம். எடுத்துக்காட்டாக, சமீபத்திய ஹாங்காங் மாணவர் போராட்டத்தையும், அமெரிக்க கருப்பினத்தவர்கள் போராட்டத்தையும் கூறலாம்.
ஆனால், தமிழக அளவில் ட்விட்டர் வலைதளம் பெரும்பாலும் திரைப்படங்களுக்கான ப்ரமோஷ்ன்களுக்காகவும், சினிமா ஹோரோக்களின் புகழ்பாடும் தளமாக மட்டுமே இருந்து வந்துள்ளது. எடுத்துக்காட்டாக அடிக்கடி விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் ட்விட்டரில் தங்களது ஹீரோக்களை ட்விட்டர் ட்ரெண்டிங் மூலம் கொண்டாடுவதைச் சொல்லலாம். ஆனால், இம்முறை தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைக்காக குரல் எழுப்ப ட்விட்டர் வலைதளத்தை வலைவாசிகள் பயன்படுத்தியுள்ளது வரவேற்கத்தக்கதாக உள்ளது. குறிப்பாக, விஜய் மற்றும் அஜித் ரசிகர்களும் இதில் தங்களது பங்களிப்பை அளித்துள்ளது கவனிக்கத்தக்கது.
முன்னதாக, கூடங்குளம் போராட்டம், மூவர் தூக்கு விவகாரம், தமிழக மீனவர் பிரச்சினை, 2ஜி ஊழல் வழக்கு மற்றும் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு போன்றவை ட்விட்டரில் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆன தமிழகம் தொடர்புடைய விவகாரங்கள் என்பது நினைவுகூரத்தக்கது.
நிலத்துக்கு அடியில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிராக ட்விட்டர் வாசிகள்#StopMethaneExplorationInKaveriDelta என்ற ஹேஷ்டேகில் தங்களது எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்து இதனை ட்ரெண்டிங்கில் கொண்டு சென்றுள்ளனர்.
இதனால், ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இந்திய அளவில் மூன்றாவது இடத்தில்#StopMethaneExplorationInKaveriDelta ஹேஷ்டேக் இடம்பெற்றுள்ளது. இதில் எதிர்ப்பாளர்கள் மத்திய அரசையும் பிரதமர் நரேந்திர மோடியையும் குறிப்பிட்டு தங்களது பதிவுகளை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.
அவற்றில் சில:
செந்தில்நாதன் (@suttapazham ): இது எங்கள் நிலம். வெளியேறுங்கள்...
மைதிலி பாரதிராஜா (@mythili): அரசியல்வாதிகளின் கையப்படுத்தப்பட்ட நிலத்தைக் காட்டிலும் எங்கள் விவசாயிகளின் நிலம் உங்களுக்கு மலிவானதா?
பேச்சிமுத்து பாண்டியன் (@Tamilan_Petch): விஞ்ஞானிகள் எதற்காக மற்றொரு கிரகத்தை தேடிக் கொண்டிருக்கின்றனர்? ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் பூமியின் நிலங்கள் சூறையாடப்படும் என்று.
பார்த்தா(@VJFan): தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் தான் நமக்கு உணவு வழங்கும் மாவட்டம். அத்தகைய நிலத்தின் ஏன் இந்த திட்டம்?
யோகேந்திரம் (@yoagandran): இந்த மோசமான திட்டத்துக்கு எதிரான எதிர்ப்பு உலக அளவில் ட்ரெண்ட் ஆக போகிறது. அனைவரும் இதனை எதிர்க்கின்றனர் என்பது விளங்குகிறதா?
லிங்க ஃபேன்ஸ் (@geejeyz): ஆமாம், இதற்கு அனைவரது ஆதரவும் தேவை , #Rajinikanth அவர்கள் இதற்கு குரல் கொடுக்க வலியுறுத்துகிறோம்.
வக்கீல் வரிபுலி (@CitizenSaravana): இந்த ட்ரெண்டிங்கை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தொடரட்டும் போராட்டம்.
நிராவ் ஷா (@Nirav): நம்ம எல்லாருக்கும் சோறு போடுற கடவுள் விவசாயிகள். அவங்க வயித்துல அடிக்காதிங்க #Gov
பல்கார்பெட்கோ (@palkarbetko): கார்பன் டை ஆக்சைடை விட 34 சதவீதம் அதிக மாசுபாட்டை மீத்தேன் எரிவாயு ஏற்படுத்தும். இதன் தாக்கம் காலநிலையில் அடுத்து 100 ஆண்டுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
பாத்ரூம் பாகவதர் (@losangelesram): தமிழகத்தை தரிசு பாலைவனமாக்கும் திட்டம் இது. நல்ல ஆதாயம் கிடைப்பது உறுதி.
J Anbazhagan (@JAnbazhagan): காவிரியின் அழகை பாழாக்காதீர்கள்.
கெளதம் (@Gowtham_techno): விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பு. ஆனால் காவிரி டெல்டா ஆய்வாளர்களின் விளையாட்டு மைதானமா?
அருண் (@_ArunVS): தளபதி கூட #Kaththi படத்தில சொன்னாரு.
விஜய் ட்ரெண்ட்ஸ் (@VijayFansTrends): #Kaththi 50Days ஹேஷ் டேகை ட்ரெண்ட் செய்ய நினைத்தோம். ஆனால் அதை விட #StopMethaneExplorationInKaveriDelta என்பது மிக முக்கியம்.
சிந்து டாக்ஸ் (@sindhutalks): டூருக்கு சஹாரா போகலாம். அதுக்கு ஆசைப்பட்டு டெல்டா நிலத்த சஹாரா ஆக்கதீங்க.
மீத்தேன் எடுக்கும் திட்டம் தொடர்பாக, பெட்ரோலியம் மண்ணியலாளர் முனைவர் கே.என்.ஜெயராமன் சில மாதங்களுக்கு முன் ‘தி இந்து’ தமிழில் எழுதிய சிறு கட்டுரை:
மீத்தேன் எடுக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்!
தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகளில் விளைநிலங்களுக்கு அடியில் உள்ள நிலக்கரிப் படிமத்திலிருந்து, மீத்தேன் வாயுவை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். நிலத்தடியில் உள்ள தண்ணீரை வெளியேற்றினால்தான் மீத்தேன் வாயுவை எடுக்க முடியும். அதனால், முதலில் தண்ணீரை வெளியேற்றுவார்கள். நிலத்தடி நீர் மொத்தமாக வறண்டுவிடும். உடனே, அருகில் உள்ள கடல் நீர் நிலத்தடியில் ஊடுருவி, நிலத்தடி நீர் உப்பாகிவிடும்.
நிலக்கரியை எடுக்க ஆபத்தான ரசாயனங்கள் கலந்த கலவையைச் செலுத்தி, பாறைகளை விரிவடையச் செய்வார் கள். இதில் 30% ரசாயனக் கழிவுநீர் உள்ளேயே தங்கிவிடும். வெளியேற்றப்படும் கழிவுநீர் சுற்றுச்சூழலையும், மண் வளத்தையும் பாதிக்கும். இதனால், விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்படும். புற்றுநோய் மற்றும் சுவாச நோய்கள் ஏற்படும். திடீர் தீ விபத்துகளும், சிறிய அளவிலான நில நடுக்கங்களும் ஏற்படலாம்.
அமெரிக்கா, கனடா நாடுகளில் இந்தத் திட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்த்துள்ளேன். அங்கு என். அல்பெர்டா, அதபாஸ்கா காட்டுப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டத்தால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அங்கு குட்டைகளில் கலந்த ரசாயனக் கழிவு நீரைக் குடித்த லட்சக் கணக்கான பறவைகள் இறந்து விட்டன. அங்கு, இந்தத் திட்டத்துக்கு எதிராக மக்கள் கடுமையான போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்தத் திட்டத்துக்கு தமிழக அரசு தற்காலிகத் தடை விதித்தது சரியானதே. முழுவதுமாக இந்தத் திட்டத்தைக் கைவிடச் செய்ய வேண்டும்.
http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article6675663.ece#comments