நமது மண்! நமது நீர்!
நெருங்கி வரும் பேராபத்து!!!!!!!
தாரை வார்ப்போமா? தடுத்து நிறுத்துவோமா?
ஏர்வாடியில் மக்கள் பணியாற்றும் சமூக அக்கறை கொண்ட அனைத்துக் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள், மற்றும் பொதுமக்களின் கவனத்திற்கு.........
நமது ஏர்வாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் அழகிற்கும், வளத்திற்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாகத் திகழ்வது, நம் அருகில் அமைந்திருக்கும் மேற்குத்தொடர்ச்சி மலையும், அதிலிருந்து நமக்குக் கிடைக்கும் நீரும்தான் என்பதை நாம் அறிவோம்.
நமது ஆறு, குளம், ஏரி, கண்மாய், டேம் என அனைத்தும் மேற்குத்தொடர்ச்சி மலை தரும் நீரால் தான் நிரம்புகிறது.
இது இறைவன் நமக்கு அளித்த பெரும் அருட்கொடை.
பொது நன்மைக்குறிய வளமாகவே இருக்க வேண்டிய தண்ணீர், இன்று, சந்தைப் பொருளாக, பொருளாதாரத்தைப் பெருக்கும் போகப் பொருளாக மாறிப்போனதன் விளைவு, ஆறு, குளம், கண்மாய், நிலத்தடிநீர் என பல நீர் ஆதாரங்கள் அலங்கோலப்படுத்தப்பட்டும், சில இடங்களில் இவைகள் முற்றிலும் அழிக்கப்பட்டும் விட்டது.
இந்த வரிசையில் நமது பகுதியின் மிக முக்கியமான நீர் ஆதாரமாகத் திகழும் கொடுமுடியாறு அணையும் இடம்பெறும் நிலை உருவாகி இருப்பது, நமது பகுதியின் வளத்திற்கும், நம் விவசாயிகளின் வாழ்விற்க்கும் விடப்பட்ட சவாலாகும்.
நாங்குநேரி, இராதாபுரம் ஆகிய இரு தாலுக்காகளில் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களின் ஜீவனாக இருப்பது கொடுமுடியின் தண்ணீர் தான்.
இவ்வருடம் பெய்த நல்ல மழையால், பல ஆண்டுகளுக்குப் பின் நிரம்பிய நமது கொடுமுடியின் தளும்பும் தண்ணீரைப் பார்த்து மகிழாத உள்ளங்கள் நம் பகுதியில் உண்டா?
நீரால் நிறைந்தது டேம் மட்டுமா? நம்முடைய ஒவ்வொருவரின் உள்ளங்களுமல்லவா மகிழ்ச்சியால் நிறைந்தது.
இந்நிலையில்.. ஏழை விவசாயிகளின் தாகத்திற்கும், விவசாயத்திற்கும் மூலதனமாக இருக்கும் நமது நீர், பாட்டில்களில் அடைக்கப்பட்டு எங்கோ விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படப் போகிறது என்பதை நினைத்துப் பார்க்கவே இரத்தம் கொதிக்கிறது.
நம் வளங்களெல்லாம், அளவுக்கு மீறி பணம் கொழிக்கும் எவரோ ஒருவரின் பணங்களை மேலும் மேலும் கொழிக்க வைக்க, நம் மண்ணின், நம் விவசாயிகளின் வளமும், வாழ்வும் பலிகடாவாக்கப்படுவதை நாம் அனுமதிக்கலாமா?
நம் மாவட்டத்தின் ஜீவ நதியாம் தாமிரபரணியில் கை வைத்தார்கள் கார்ப்பரேட் முதலைகள்.
அதன் விளைவு: இராட்சதக் குழாய்கள் மூலமாக இன்று நாளொன்றுக்கு ஐந்து இலட்சம் லிட்டருக்கும் அதிகமானத் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது.
நம் தாமிரபரணியின் இயற்கையான தன்மையில் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.
எப்போதும் தண்ணீர் ஓடும் தாமிரபரணிக்கே இவர்களால் இந்நிலை என்றால்... எப்போதாவது மட்டுமே நீர் நிரம்பும் நமது கொடுமுடியும், அதையே நம்பியுள்ள நமது குளங்கள் மற்றும் கால்வாய்களின் நிலை என்ன ஆவது?
சிந்தியுங்கள்!
மாறி வரும் பருவநிலைகள், அழிந்து வரும் விளைநிலங்கள், வற்றிவரும் கிணறுகள், உருக்குலைந்து வரும் குளங்கள், குறைந்து வரும் நிலத்தடிநீர் -இவ்வாறு நிலமை சென்று கொண்டிருக்க, நமது பகுதியின் எதிர் காலத் தலைமுறையின் தவிக்க முடியாத நீர் ஆதாரமாகத் திகழவிருப்பது நிச்சயம் கொடுமுடியாகத்தான் இருக்கும்.
தண்ணீர் கம்பெனிக்கு அதை தாரைவார்த்து விட்டால், அது நாளைய நம் தலைமுறையை நாமே சாகடிப்பதற்க்குச் சமமானது.
இயற்க்கையை நேசிக்கும் நெஞ்சங்களே! சமூக அக்கறையுள்ள உள்ளங்களே! மண்ணின் மைந்தர்களாகிய சிங்கங்களே! எவன் நிலத்துத் தண்ணீரை எவன் விற்பது?
நீரை இழந்து, விளைநிலங்களை இழந்து, இதனால் நிம்மதி தொலைந்து நாளைய நம் தலைமுறை நம்மைக் காரி உமிழ வேண்டுமா?
நம் பகுதியிலுள்ள அனைத்து கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள், சமூக நலக்கூட்டமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒருங்கினைந்து செல்படவேண்டிய தருணம் இது.
ஏற்கனவே வள்ளியூர் கம்யூனிஸ்ட் தோழர்கள் இதற்கான போராட்டத்தை துவக்கிவிட்டனர்.
ஒவ்வொரு தாமதமும் இழப்புகளுக்கே இடமளிக்கும். எனவே தாமதிக்காமல், இதற்கான எல்லா நடவடிக்கைகளையும் அனைவரும் ஒன்றினைந்து மேற்கொண்டால் மட்டுமே நம் நீரை நம்மால் தக்கவைத்துக்கொள்ள முடியும்.
நமது மண்! நமது நீர்! தக்க வைப்போமா? தாரை வார்ப்போமா?
குறிப்பு: இது பற்றிய விழிப்புணர்வை நமது பகுதியில் முதன்முதலில் மக்களின் கவனத்திற்கு கொண்டு வந்தது வள்ளியூர் முகநூல் குழுவினர்தான். இந்த புகைப்படங்களில் சிலதும் வள்ளியூர் முகநூல் குழுவில் எடுக்கப்பட்டவைதான். அவர்களுக்கு நமது மனமார்ந்த நன்றிகள்.
நன்றி: நெல்லை ஏர்வாடி அழகும் வளமும்
நேற்றைய பேருராட்சி மன்றகூட்டத்தில்,கொடுமுடியாறு தண்ணீர் கம்பெனி போன்ற, நீர்நிலைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை உடனடியாக தடுத்து நிறுத்தவும் ,ராட்சச ஆழ்குழாய் கிணறு அமைக்க அனுமதி அளிக்ககூடாது எனவும் தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் .
|