Posted by S Peer Mohamed
(peer) on 3/11/2015 5:31:23 AM
|
|||
சென்னை, ‘அம்மா’ சிமெண்ட் 2 மாதத்தில் 25 லட்சம் மூட்டைகள் விற்பனையாகி உள்ளதாகவும், அம்மா சிமெண்டு 50 கிலோ மூட்டை தனியார் விலையை விட ரூ.210 குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும், அதன் நிர்வாக இயக்குனர் சி.காமராஜ் தெரிவித்துள்ளார். ‘அம்மா’ சிமெண்டு தமிழ்நாடு அரசின் ‘அம்மா’ சிமெண்டு- ‘அம்மா’ உப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சி.காமராஜிடம், ‘தினத்தந்தி’ நிருபர் பேட்டி கண்டார். அப்போது நிருபர் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- வெளி மார்க்கெட்டில், தனியார் சிமெண்டு 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே எடை கொண்ட ‘அம்மா’ சிமெண்டு விலை எவ்வளவு? பதில்:- 50 கிலோ எடை கொண்ட ‘அம்மா’ சிமெண்டு ரூ.190-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தனியார் சிமெண்டு விலையுடன் ஒப்பிடுகையில், ‘அம்மா’ சிமெண்டு விலை ரூ.210 குறைவு ஆகும். 25 லட்சம் மூட்டைகள் விற்பனை கேள்வி:- ‘அம்மா’ சிமெண்டு விற்பனை தொடங்கியதில் இருந்து, இதுவரை எவ்வளவு மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது? பதில்:- ‘அம்மா’ சிமெண்டு விற்பனை கடந்த ஜனவரி மாதம் 5-ந்தேதி தமிழகத்தில் தொடங்கப்பட்டது. விற்பனை தொடங்கிய 2 மாதத்தில் 24 லட்சத்து 99 ஆயிரத்து 500 மூட்டைகள் விற்பனையாகி உள்ளது. பொதுமக்கள் மத்தியில் அம்மா சிமெண்டு அமோக ஆதரவு இருந்து வருகிறது. எனவே 3 லட்சம் சிமெண்டு மூட்டைகள் எப்போதும் குடோன்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 60 சதவீதம் விலை குறைவு கேள்வி:- எத்தனை சதுரடியில் வீடுகள் கட்டினால் ‘அம்மா’ சிமெண்டு கிடைக்கும்? பதில்:- 500 சதுரடியில் வீடு கட்டுபவர்களுக்கு அதிகபட்சமாக 250 மூட்டைகளும், 501 முதல் 1,000 சதுரடிக்குள் வீடு கட்டுபவர்களுக்கு அதிகபட்சமாக 500 மூட்டைகளும், 1,001 முதல் 1,500 சதுரடிக்குள் வீடு கட்டுபவர்களுக்கு அதிகபட்சமாக 750 மூட்டைகளும் அம்மா சிமெண்டு விற்பனை செய்யப்படுகிறது. 100 சதுரடிக்கு 50 மூட்டைகள் வீதம் வழங்கப்படுகிறது. தனியாரிடம் 750 மூட்டைகள் சிமெண்டு வாங்கினால் ரூ.3 லட்சம் செலவாகும். அம்மா சிமெண்டு வாங்கினால் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 500 தான் செலவாகும். வெளி மார்க்கெட்டை விட 60 சதவீதம் அம்மா சிமெண்டு விலை குறைவாகும். நடைமுறை எளிதாக்கப்படுமா? கேள்வி:- ‘அம்மா’ சிமெண்டு வாங்க விண்ணப்பங்களை பூர்த்தி செய்வது போன்ற நடைமுறைகள் சற்று சிரமமாக இருப்பதால், கூடுதல் விலை கொடுத்து தனியாரிடமே சிமெண்டு வாங்கிக்கொள்ளும் மனப்பான்மை மக்களிடம் ஏற்பட்டுள்ளது. எனவே ‘அம்மா’ சிமெண்டு வாங்குவதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்படுமா? பதில்:- ‘அம்மா’ சிமெண்டு பெறுவதற்கு நடைமுறைகள் ஒன்றும் பெரியளவில் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட வீடு கட்டும் திட்டத்தின் வரைபடத்துடன், ‘சிமெண்டு’ விற்பனை செய்யும் குடோன்களுக்கு சென்று விண்ணப்பித்தால் போதும். முன்பதிவு அடிப்படையில் ஓரிரு நாட்களில் சிமெண்டு கிடைத்துவிடும். முறைகேடுகளை தடுக்கவே இந்த எளிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ‘அம்மா’ சிமெண்டு தொடர்பான சந்தேகங்கள், விளக்கங்களை பெற 1800-42522000 என்ற இலவச தொலைபேசி எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். வீடு பழுது-புதுப்பிக்க சிமெண்டு கிடைக்கும் கேள்வி:- வீடுகள் பழுது பார்க்க மற்றும் புதுப்பிப்பதற்கு ‘அம்மா’ சிமெண்டு கிடைக்குமா? பதில்:- நிச்சயம் கிடைக்கும். வீடுகள் பழுது பார்க்க மற்றும் புதுப்பித்தலுக்கு குறைந்தபட்சம் 10 முதல் அதிகபட்சம் 100 மூட்டைகள் வரை ‘அம்மா’ சிமெண்டு கிடைக்கும். சிமெண்டு பெற விரும்புவோர், ‘கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மேற்பார்வையாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சாலை ஆய்வாளர் இவர்களில் யாராவது ஒருவருடைய கையெழுத்தை பெற்று விண்ணப்பிக்க வேண்டும். தனியார் நிறுவனங்களுக்கு கேள்வி:- குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கும் தனியார் நிறுவனங்களுக்கு ‘அம்மா’ சிமெண்டு விற்பனை செய்ய ஏதேனும் திட்டம் உள்ளதா? பதில்:- முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ‘அம்மா’ சிமெண்டு விற்பனை தொடங்கியதன் நோக்கமே ஏழை-எளிய நடுத்தர மக்கள் பயன் பெற வேண்டும் என்பதற்கு தான். எனவே அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கும் தனியார் நிறுவனங்களுக்கு, ‘அம்மா’ சிமெண்டு விற்பனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை. ‘அம்மா’ உப்பு கேள்வி:- ‘அம்மா’ உப்பு விற்பனை எவ்வாறு இருக்கிறது? பதில்:- ‘அம்மா’ உப்பு விற்பனை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 11-ந்தேதி தொடங்கியதில் இருந்து, தமிழகத்தில் இதுவரை 2,328 டன் ‘அம்மா’ உப்பு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கேள்வி:- ‘அம்மா’ உப்பு எந்த மாவட்டத்தில் அதிகம் விற்பனையாகி உள்ளது? பதில்:- சென்னையில் அதிகபட்சமாக 640 டன்னும், காஞ்சீபுரத்தில் 250 டன்னும், தர்மபுரியில் 100 டன்னும், திருச்சியில் 80 டன்னும், புதுச்சேரி-காரைக்காலில் 81 டன்னும், கோவை, சேலம், திருப்பூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் தலா 60 டன்னும் ‘அம்மா’ உப்பு விற்பனையாகி உள்ளது. ரேஷன் கடைகளில் விற்பனை கேள்வி:- தமிழகத்தில் சராசரியாக ஒவ்வொரு மாதமும் எத்தனை டன் ‘அம்மா’ உப்பு விற்பனையாகிறது? பதில்:- 400 டன் ‘அம்மா’ உப்பு விற்பனையாகிறது. அடுத்த மாதம் முதல் 700 டன் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது ரேஷன் கடைகளிலும் ‘அம்மா’ உப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. விரும்பம் உள்ளவர்கள் வாங்கிக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |