சரஸ்வதி நதி : வடிவேலு தொலைத்த கிணறு!

Posted by Haja Mohideen (Hajas) on 4/27/2015 1:53:07 PM

சரஸ்வதி நதி : வடிவேலு தொலைத்த கிணறு!

'வரலாற்றில்’ தொலைந்து போன சரஸ்வதி நதியை மீட்கப் போகிறதாம் ஹரியானா மாநில அரசு. பிப்ரவரி, 2015-லிருந்து ஆதி பத்ரா பகுதியில் இதற்கான ஆய்வுகளை, மாநில அரசின் வனத்துறை மேற்கொண்டு வருகின்றது.

சரஸ்வதியைத் தேடி

சரஸ்வதி நதியை மீட்கப் போகிறதாம் ஹரியானா மாநில அரசு. (படம் : நன்றி thehindu.com )

13 மார்ச், 2015 தேதியன்று யமுனா நகரில் நடந்த கூட்டமொன்றில் பேசிய மாநில பாரதிய ஜனதா முதல்வர் மனோகர் லால் கட்டர், ஆதிபத்ராவில் துவங்கவுள்ள சரஸ்வதி நதிக்கான அகழ்வாய்வு மிகப் பெரிய திட்டமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதற்காகவே அரசு உயரதிகாரிகள் எதிர்காலத்தில் உருவாக்கப்பட உள்ள சரஸ்வதி நதிக்கான நீராதாரத்தைத் தேடி ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

தமக்கு கிடைக்காத கல்வி குறித்து “சரஸ்வதி கடாட்சம் கிடைக்கவில்லை” என்று ஏழை மக்கள் முடித்துக் கொள்வார்கள். இங்ஙனம் ‘உயர் சாதி’ இந்துக்களிடம் சிக்கியுள்ள கல்வி சரஸ்வதி ஒரு புறம் என்றால் ஆர்.எஸ்.எஸ் கூட்டம் உருவாக்கியிருக்கும் சரஸ்வதி நதி இன்னொரு அவதாரம்.

ஆதிக்கத்தை தொடர வேண்டுமென்றால் வரலாற்றில் “ஏ டூ இசட்” வரை சகல பொய்களையும் கச்சிதமாக எழுப்ப வேண்டும். ஆகவே ஹரப்பா – சிந்து சமவெளி நாகரீகத்தை சரஸ்வதி நதி நாகரீகம் என்றே அழைக்கப்பட வேண்டும், மறைந்து போன சரஸ்வதி நதிக்கரையில் தான் வேதகால நாகரீகம் உச்சகட்ட வளர்ச்சியடைந்திருந்தது….. என இவற்றையெல்லாம் நிலைநாட்ட இந்துத்துவ கும்பல் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் கரடியாக கத்திக் கொண்டிருக்கிறது.

சங்கமத்தில் முழுக்கு

‘ஆரியர்கள் வந்தேறிகள் இல்லை என்பது மட்டுமல்ல, அவர்கள் தான் இந்தியாவின் சரஸ்வதி நதி தீரத்திலிருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு குடியேறிய ஆதி குடிகள்’

அதாவது, ‘இந்த நாட்டின் திராவிடர்கள், பழங்குடியினர் உள்ளிட்ட எல்லா இன மற்றும் மொழிக் குழுக்களைச் சேர்ந்தவர்களும் ஆரியர்களும் வேறு வேறு அல்ல; சரஸ்வதி நதிக்கரையில் வைத்து எழுதப்பட்ட ஆரிய இலக்கியங்களின் அடிப்படையிலான கலாச்சாரம் – அதாவது சமஸ்கிருதம், பார்ப்பனியம், சாதி – மொத்தமும் இந்திய கலாச்சாரமே’ என்பதை நிலைநாட்டும் முயற்சிகளை இந்துத்துவ கும்பல் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

இந்த விளக்கங்கள் எந்தளவுக்கு நீள்கிறது என்றால், ‘ஆரியர்கள் வந்தேறிகள் இல்லை என்பது மட்டுமல்ல, அவர்கள் தான் இந்தியாவின் சரஸ்வதி நதி தீரத்திலிருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு குடியேறிய ஆதி குடிகள்’ என்கிறார் சமீபத்தில் மோடி அரசால் பத்மவிபூஷன் விருது அளிக்கப்பட்ட அமெரிக்க சாமியார் டேவின் ஃப்ராலே (வாமதேச சாஸ்திரிகள்).

சமஸ்கிருதம் தான் உலக மொழிகளுக்கெல்லாம் தாய் என்று ஆர்.எஸ்.எஸ் கும்பல் செய்யும் பிரச்சாரத்துக்கு ”ஆதாரங்கள் சப்ளை” செய்யப் போகும் ஆய்வாளர் இவர் தான்.

சங்க பரிவார பிரச்சாரம்

பிரச்சாரங்களுக்குத் தேவையான ஆதாரங்களை சப்ளை செய்வது.

தங்கள் பிரச்சாரங்களுக்குத் தேவையான ஆதாரங்களை சப்ளை செய்வதற்காகவே நட்வர் ஜா, ராஜாராம் போன்ற பல்வேறு ‘அறிஞர்களை’ உற்பத்தி செய்து அவர்களின் ’ஆய்வு’ அறிக்கைகளை, தமது ஆட்சிக்காலங்களில் நடந்த அறிவியல் மாநாடுகளில் சமர்பிக்கச் செய்தது இந்துத்துவ கும்பல். அறிவியல் மாநாடுகளில் சமர்ப்பிக்கப்பட்டதாலேயே அவற்றில் உள்ள உளறல்களை இந்துத்துவ இணையச் சில்லுண்டி அறிஞர் பெருமக்கள் மேற்கோள் காட்டி தங்களுக்குள் மகிழ்ந்து கொண்டிருந்தனர்.

ஆனால் பரிதாபம் என்னவென்றால், இந்துத்துவ வரலாற்று அறிஞர்களால் சிந்து சமவெளி நாகரீகத்தைக் கைப்பற்றச் செய்யப்படும் முயற்சிகள் ஒவ்வொன்றும் மொத்த ஆய்வுலகத்தையும் நகைப்பில் ஆழ்த்துகிறது. ஹரப்பாவில் ’கண்டுபிடிக்கப்பட்ட’ குதிரையும், ‘சரஸ்வதி நதியிலிருந்து உலகமெங்கும் பரவிச் சென்றது மனித இனம்’ என்ற விளக்கமும் மிகக் கேவலமாக அம்பலப்பட்டு சந்தி சிரித்தது.

“அரசர் ஆடையில்லாமல் அம்மணமாக வீற்றிருக்கிறார்” என்ற உண்மையை அவர்களது அரசவையில் உள்ள எவரும் இன்று வரை எடுத்துச் சொல்லவில்லை. விளைவு? ஆர்.எஸ்.எஸ் ஷாகாவின் தயாரிப்பான மோடி, அறிவியலே வெட்கப்படுமளவு விஞ்ஞானியாக அவதாரம் எடுத்திருக்கிறார்.

சரஸ்வதியில் பிடிக்கும் முயற்சி

குதிரையில் விட்டதை சரஸ்வதியில் பிடிக்கும் முயற்சியை காவி கோஷ்டிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

திருவாளர் மோடி அவர்கள், புராண காலத்தில் இந்தியாவில் பிளாஸ்டிக் சர்ஜரி இருந்ததற்கான ஆதாரமாக சிவகாசி ஓவியரால் வரையப்பட்ட விநாயகரின் படத்தை முன்வைத்திருப்பதை வாசகர்கள் அறிவார்கள். இன்னும் சில ஆண்டுகள் கழித்து ’அறிவியல்’ மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட இந்த ’அறிவியல்’ உரையிலிருந்து அரவிந்தன் நீலகண்டன் போன்றோர் மேற்கோள் காட்டி எழுதும் நூலை கிழக்கு பதிப்பகம் பதிப்பிக்கலாம்; இந்து கடவுளர்களையே உருவாக்கிய சிவகாசி ஓவியர்களின் வரலாற்றை அறிந்தவர்கள் ஆதித்யா சானல் பார்க்க வேண்டிய அவசியமில்லை.

போகட்டும். எத்தனை அடித்தாலும் தாங்குவதற்கு முதுகோ, மானமோ இல்லை என்பதால் குதிரையில் விட்டதை சரஸ்வதியில் பிடிக்கும் முயற்சியை காவி கோஷ்டிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

’காணாமல்’ போன சரஸ்வதி நதியைத் தேடும் பாரதிய ஜனதாவின் முயற்சி புதிதல்ல. 2014-ம் ஆண்டில் நீர்வளத் துறை அமைச்சரான உமா பாரதி சரஸ்வதி நதியை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடும் என்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். முன்பு வாஜ்பாய் பிரதமராக இருந்த போது மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சகம் இம்முயற்சியை 2002-ம் ஆண்டே எடுத்தது குறிப்பிடத்தக்கது. என்றாலும், சரஸ்வதி நதியை இன்னும் தயாரித்து தீர்ந்தபாடில்லை.

சரஸ்வதியை தேடி

இல்லாத கலாச்சார பாரம்பரிய பெருமைகளை இந்துக்களின் மூளைக்குள் திணிக்கும் நடவடிக்கைகள்.

இல்லாத கலாச்சார பாரம்பரிய பெருமைகளை இந்துக்களின் மூளைக்குள் திணிக்கும் நடவடிக்கைகளில் அப்போதைய பாரதிய ஜனதாவின் கலாச்சாரத் துறை அமைச்சரான ஜக்மோகன் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். “சரஸ்வதி நதியை உருவாக்கும் முயற்சியைப் பொருத்த வரை, அதில் கிடைக்கப் போகும் வெற்றி தோல்விகளை விட அம்முயற்சி உண்டாக்கும் தேசியப் பெருமிதமே முக்கியமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்” என்று அவர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

கிணறு : வடிவேலுவின் வார்த்தைகளின் படி…

சரஸ்வதியைத் தேடுவதிருக்கட்டும், முதலில் அவள் கருப்பா சிவப்பா என்பதிலேயே பல குழப்பங்கள் இருக்கின்றன. “சரஸ்வதி நதி புராண காலத்தில் இமயத்தில் உற்பத்தியாகி கங்கைக்கும் யமுனைக்கும் நடுவே ஓடி உத்திரபிரதேச மாநிலம், அலகாபாத் நகரின் திரிவேணி சங்கமத்தில் கலந்தது; தற்போதும் அந்த நதி கண்ணுக்குத் தெரியாமல் பூமிக்கு அடியில் ஓடிக் கொண்டிருக்கிறது” என்பது ‘இந்துக்களின் நம்பிக்கை’.

இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே அலகாபாத்தில் கும்பமேளா நடக்கிறதாம். இந்துக்களின் நம்பிக்கையை கிளறிவிட்டோ, இல்லை, வேக வைத்தோ வயிறு வளர்க்கும் கட்சிதான் பாரதிய ஜனதா என்பதைச் சொல்லத் தேவையில்லை. அந்த ‘நம்பிக்கையின்’ அடிப்படையிலேயே பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது, சேது கால்வாய்த் திட்டம் முடக்கப்பட்டது. ஆனால், சரஸ்வதியின் விசயத்தில் இந்துக்களின் நம்பிக்கையும் இந்துத்துவாவின் நம்பிக்கையும் வேறு வேறாக இருக்கிறது.

சரஸ்வதி நதி பற்றிய புரட்டு

‘சரஸ்வதி நதி ஹரியானா மாநிலம் ஆதி பத்ராவில் உற்பத்தியாகி ஹரியானா, ராஜஸ்தான், குஜராத்தின் வழியே தெற்கு நோக்கிப் பாய்ந்து கட்ச் அருகில் கடலில் கலந்தது’

இந்துத்துவ கும்பலைப் பொருத்தவரை, ‘சரஸ்வதி நதி ஹரியானா மாநிலம் ஆதி பத்ராவில் உற்பத்தியாகி ஹரியானா, ராஜஸ்தான், குஜராத்தின் வழியே தெற்கு நோக்கிப் பாய்ந்து கட்ச் அருகில் கடலில் கலந்தது’ என்கிறார்கள். இதில் ஒரு டெக்னிக்கல் பிரச்சினை இருக்கிறது – அதாவது, அந்தப் பகுதி நிலப்பரப்பின் புவியியல் தன்மையையின் படி நிலம் தென்மேற்கான சரிவு கொண்டது. புவியியலை கணக்கில் எடுத்துக் கொள்வதானால், உருவாக்கப்பட உள்ள சரஸ்வதி நதி பாகிஸ்தான் எல்லைக்குள்ளும் சென்றாக வேண்டும்.

அந்தோ பரிதாபம்! எதிர்கால அகண்ட பாரதத்தில் இடம் பெறவுள்ள பாகிஸ்தான் தற்போதைக்கு மாட்டுக்கறி தின்னும் முசல்மான்களின் வசம் உள்ளது. கோட்டைத் தாண்டிப் போனால் கவட்டைக்குள் கம்பை விட்டுச் சுத்தும் ஆபத்து உள்ளது. வேறு வழி? ”கோதாவரீ.. இந்திய எல்லைக் கோட்டுக்கு உள்ளேயே கோட்டைக் கிழிடி” என்கிறது இந்துத்துவ கும்பல்.

விட்டால் கொஞ்ச நாட்களில் சிந்துவெளி நாகரீகமே இன்றைய இந்தியாவில்தான் தோன்றியது என்றும், மொகஞ்சதாரோ, ஹரப்பா கண்டுபிடிப்புகளெல்லாம் வெள்ளையர் சதி என்றும் கூற வாய்ப்பிருக்கிறது.

வரலாற்று அறிஞர் இர்ஃபான் ஹபீப்

“சரஸ்வதி நதியை கற்பனை செய்வது” – வரலாற்று அறிஞர் இர்ஃபான் ஹபீப்

வேத புராணங்களில் – குறிப்பாக ரிக் வேதத்தில் –  சரஸ்வதி நதி குறித்து வரும் சில குறிப்புகள் அதை, சிந்து நதிக்கு இணையாக ஓடிய பெரு நதியாகச் சித்தரிக்கின்றன. சிந்து சமவெளி நாகரீகத்தைப் பறை சாற்றும் ஆதாரங்கள் அனைத்துமே சிந்து நதிக்கரையை ஒட்டிய சமவெளிப் பகுதியில் இருந்து கிடைத்தவை. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை தற்போதைய பாகிஸ்தான் எல்லைக்குள் அமைந்துள்ளன.

ஆரியர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், வேத நாகரீகம் தான் இந்திய நாகரீகம் என்ற தங்களது சிந்தாந்தத்திற்கு முட்டுக் கொடுக்க வேண்டுமென்றால், சிந்து சமவெளி நாகரீகத்தை பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் கொண்டு வந்தாக வேண்டும்; சிந்து சமவெளி நாகரீகத்தை சரஸ்வதி நதி நாகரீகம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும். ஆக, ரிக் வேதத்தில் சொல்லப்படும் சரஸ்வதி நதியின் பாதை எப்படி இருந்தால் தங்களது விளக்கங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்பதை உத்தேசித்தே தற்ப்போது ஆதி பத்ராவில் நிலத்தைக் குடைந்து கொண்டிருக்கிறார்கள்.

எனில் பிரயாகையையும், திரிவேணி சங்கமமும்?

இந்துத்துவ தாக்குதல்

‘சமஸ்கிருதம், பார்ப்பனியம், சாதி – மொத்தமும் இந்திய கலாச்சாரமே’

சரஸ்வதி நதி வற்றிப் போன பின் கிழக்கு நோக்கி நகர்ந்த மக்களின் தொன்ம நினைவுகள் என்கிறார்கள். அதாவது இந்துக்களின் ’நம்பிக்கைக்கு’ அலகாபாத் – இந்துத்துவாவின் நம்பிக்கைக்கு ஆதி பத்ரா!

சரி, நதியின் பாதையை வரையறுத்தாயிற்று.. தண்ணீருக்கு எங்கே போவது? கடைசியாக கிடைத்த தகவல்களின் படி போர்வெல் போட்டு பூமியைக் குடைந்து கொண்டிருக்கிறார்களாம். ஆதி பத்ரா என்பது ஹரியானாவின் சிர்சா மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதி. சிர்சா மாவட்டம் ஏற்கனவே வறண்ட பகுதி. எனவே நிலத்தடி நீர் தீர்ந்து போனால்? அக்கம் பக்கத்தில் உள்ள நீராதாரங்களில் உள்ள நீரை மடைமாற்றி விட்டு எப்படியாவது சரஸ்வதியை உருவாக்கியே தீர்வது என்ற லட்சிய வெறியில் உள்ளனர் காக்கி டவுசர்கள். இனி விவசாயிகள் சரஸ்வதி நதிக்காக நிலத்தடி நீரை இழப்பதோடு தற்கொலையும் செய்து கொள்ள வேண்டும் போல.

வடிவேலு வெட்டிய கிணறு : வட்டமா சதுரமா முக்கோணமா?

நாகா சாமியார்

அரசியல் கழிசடைத்தனமான விளையாட்டிற்கு மக்களின் வரிப்பணம் லட்சக்கணக்கான கோடிகளில் கொட்டப்படும்.

ரிக் வேதத்தில் சொல்லப்பட்ட சரஸ்வதி நதியைப் பற்றிய குறிப்புகளே முரண்பட்டவையாக உள்ளன. நான்கு வேதங்கள் என்று சொல்லப்படும் ரிக், யஜூர், சாம, அதர்வன ஆகியவற்றின் சமஸ்கிருத சுலோகங்களின் தொகுப்புகள் ஒரே காலகட்டத்தில் ஒரே நபராலோ அல்லது ஒரு குழுவாலோ எழுதப்பட்டவை அல்ல.

மொழியியல் ஆய்வாளர்களின் கூற்றுப்படி காலத்தால் முந்தையதாகச் சொல்லப்படும் ரிக் வேதத்தின் பகுதிகள் சுமார் முன்னூறு ஆண்டுகால இடைவெளியில் எழுதப்பட்டவை (கி.மு 1500 – 1200). எழுதப்பட்டவை என்று சொல்வதை விட பாடப்பட்டவை – அப்போது சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவம் கிடையாது.

ரிக்வேத சுலோகங்களைப் பாடியவர்கள் யாரும் தாங்கள் பாடும் பாடல்கள் பிற்காலத்தில் வேதங்களாக அறியப்படும், புனிதமாக போற்றப்படும் என்ற தன்னுணர்வில் இருந்து அவற்றைப் பாடவில்லை. தாங்கள் பாடுவது (இன்றைக்கு 21-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாம் புரிந்து கொண்டிருக்கும் பொருளிலான) வேதங்கள் என்ற புரிதலும் அவர்களுக்குக் கிடையாது. நாடோடி நாகரீகத்தில் இருந்த ஆரியர்களின் ஆரம்ப கால கட்ட புரிதலே இப்பாடல்கள். மேற்படியாக இயற்றப்பட்ட பாடல்களை குப்தர்களின் காலமான 6-ம் நூற்றாண்டில் தான் வேதங்களாக எழுத்து வடிவில் தொகுத்துள்ளனர்.

இந்துத்துவ முயற்சிகள்

குழப்பமான வர்ணனைகளை தற்போதைய புவியியல் கூறுகளோடு பொருத்தும் முயற்சிகள் இந்துத்துவ கும்பலால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த ‘வேத கால’ பாடல்களில் சொல்லப்படும் சரஸ்வதி நதி என்பதைப் பற்றி நாம் எந்த முடிவுக்கும் வர இயலாது.

முதலாவதாக,  ரிக்வேதத்தின் நதி சூக்தத்தில் வரும் பாடல் ஒன்று (X.75.5) நதிகளை கங்கையில் துவங்கி சுஷோமா வரை கிழக்கு மேற்காக பட்டியலிடுகிறது. இந்தப் பாடலும் வேறு சில பழைய பகுதிகளில் வரும் குறிப்புகளும் சரஸ்வதி நதியை சட்லெஜ் – யமுனை நதிகளுக்கு இடையில் ஓடிய நதியாக முன்வைக்கின்றன. ஏறக்குறைய இந்த புவியியல் விவரணைகளின்படி பார்த்தால், ஹரியானாவின் தானேஸ்வர் பகுதியில் ஓடும் ஒரு சிறு ஒடையான சிர்ஸுதி என்ற நதியைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

இரண்டாவதாக, ரிக்வேதத்தின் மற்றொரு பாடல் (VII, 95.2) மலையில் துவங்கி சமுத்திரம் வரை ஓடிய நீண்டதொரு நதியாக குறிப்பிடுகிறது. பிந்தைய காலத்தில் இயற்றப்பட்ட வேறு சில புராணப் பாடல்கள் மற்றும் மகாபாரதத்தில் பீமனுக்கும் துரியோதனனுக்கும் இடையே நடந்த இறுதிச் சண்டையின் போது குறிப்பிடப்பட்டுள்ள சரஸ்வதி நதி குறித்த வர்ணனைகள் அந்நதி பாலைவனத்தோடு கலந்து கரைந்து போனதாகச் சொல்கின்றன.

ஆக மூலத்திலேயே குழப்பம்.

நாகா சாதுக்கள்

‘காக்கர் – ஹக்ரா நதி நீண்டதும் இல்லை, இமயத்தில் உற்பத்தியாகவும் இல்லை, கடலில் கலக்கவும் இல்லை, அது ஒரு ஜீவ நதியும் இல்லை.

இந்தக் குழப்பமான வர்ணனைகளை தற்போதைய புவியியல் கூறுகளோடு பொருத்தும் முயற்சிகள் இந்துத்துவ கும்பலால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ‘சிந்து நதிக்கு இணையாக தற்போதைய இந்திய எல்லைக்குள்ளும் பாகிஸ்தானின் எல்லையைத் தொட்டும் ஓடக்கூடிய சிறு நதியான கக்கர்-ஹக்ரா (Ghaggar – hakra) தான் முன்னொரு காலத்தில் சரஸ்வதி நதியென்று அழைக்கப்பட்டது’ என்ற கருதுகோளை அறுதி உண்மை போல் முன்வைக்கிறார்கள். சிர்ஸூதி நதி கக்கர் நதியோடு இணைந்து தெற்கு நோக்கிப் பாய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த விளக்கத்தில் மூன்று பிரச்சினைகள் எழுந்தன.

முதலாவதாக, சிர்ஸூதி நதி கக்கரோடு இணைந்தது வேதகால கடவுள்களின் செயலால் அல்ல – மாட்டுக்கறி தின்னும் முசல்மானான பெரோஸ் ஷா துக்ளக்கின் (1351 – 88) கைங்கர்யத்தால். அதற்கு முன் துக்ளக் தனது ஆட்சிக்காலத்தில் பாசன வசதிக்காக இந்த இரண்டு நதிகளையும் இணைத்து காக்கர்-ஹக்ரா நதியை ராஜஸ்தானின் ஹர்னி கேரா வரை ஓட வைத்துள்ளார்.

தீனாநாத் பத்ரா

ஆர்.எஸ்.எஸ் ஷாகாகளில் உற்பத்தி செய்யப்பட்ட ‘விஞ்ஞானிகளை’ களமிறக்கி பல ’ஆய்வுக்’ கட்டுரைகளை வெளியிடச் செய்தனர். (ஆர்.எஸ்.எஸ் ‘ஆய்வாளர்’களில் ஒருவர் தீனாநாத் பத்ரா)

நியாயமாகப் பார்த்தால், சிர்ஸூதியை காக்கர் நதியோடு சேர்த்து மேலும் கொஞ்சம் தூரம் ஓட வகை செய்து கொடுத்த பெரோஸ் ஷா துக்ளக்கிற்குத்தான், இந்து முன்னணி ராம கோபாலன் அலகு குத்தி காவடி எடுக்க வேண்டும்.

இரண்டாவதாக, வேத பாடல்களில் சொல்லப்பட்ட விளக்கத்தின் படி காக்கர் – ஹக்ரா நதி நீண்டதும் இல்லை, இமயத்தில் உற்பத்தியாகவும் இல்லை, கடலில் கலக்கவும் இல்லை, அது ஒரு ஜீவ நதியும் இல்லை.

மூன்றாவதாக, காக்கர் சமவெளிப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வில் கிடைத்த அலூவிய படிமத்தை ஆய்வு செய்த மேரி ஆக்னஸ் கவுண்டி குழுவினர் (1983 – 87) கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் இந்தப் பகுதியின் ஊடாக இமயத்திலிருந்து எந்த நதியும் பாய்ந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதை அறிவியல் பூர்வமாக நிறுவினர்.

மிஷேல் தனினோ

புதுவை அரவிந்தர் ஆசிரம கஞ்சா யோகத்தில் ஞானதீக்‌ஷை பெற்ற மிஷேல் தனினோ.

காக்கர்- ஹக்ரி தான் புராணகாலத்தில் தொலைந்து போன சரஸ்வதி நதி என்ற விளக்கத்திலிருந்த முரண்பாடுகளை பிற வரலாற்று, புவியியல், மொழியியல் துறைகளைச் சார்ந்த அறிஞர்கள் முன்வைத்து சுற்றி வளைத்து எல்லா கேட்டையும் பூட்டிய பின்னும் இந்துத்துவ கும்பல் அடங்கவில்லை – அதற்கெல்லாம் கொஞ்சம் கூச்ச நாச்சம் வேண்டுமல்லவா?

ஆர்.எஸ்.எஸ் ஷாகாகளில் உற்பத்தி செய்யப்பட்ட ‘விஞ்ஞானிகளை’ களமிறக்கி பல ’ஆய்வுக்’ கட்டுரைகளை வெளியிடச் செய்தனர். மேற்படி ஆய்வுக் கட்டுரைகளை பல இடங்களில் மேற்கோள்காட்டி ஆதாரங்களை ஏற்படுத்தும் முயற்சிகளை முடுக்கி விட்டனர்.

அந்த வகையில் பிரான்சைச் சேர்ந்த மிஷேல் தனினோ என்ற ஆய்வாளர் The Lost River என்கிற நூல் ஒன்றை எழுதியுள்ளார். மிஷேல் தனினோ விஞ்ஞானப் படிப்பை பாதியில் கைவிட்டதோடு, புதுவை அரவிந்தர் ஆசிரம கஞ்சா யோகத்தில் ஞானதீக்‌ஷை பெற்றவர். முக்கியமாக இவருக்கும் புவியியல் அறிவியல், நிலவியல், தொல்லியல், மொழியியல் முதலான அறிவுத்துறைக்கும் யாதொரு தொடர்புமில்லை. இருப்பினும், ‘ஒரு வெள்ளைக்காரரே சரஸ்வதி நதியை ஆய்வு செய்து கண்டுபிடித்திருக்கிறார்’ என்று இந்துத்துவ சில்லறைகள் இதை போற்றுகின்றன.

வெவ்வேறு அறியலாளர்கள் முன்வைக்கும் கருதுகோள்களில் இருந்து இந்துத்துவ நோக்கங்களுக்கும் விளக்கங்களுக்கும் பொருத்தமானவற்றை முறைகேடாக பொறுக்கியெடுத்து ஆஃப் பாயில் உண்மையாக தனது நூலை எழுதியுள்ளார். ஒப்பிட்டுப் புரிந்து கொள்வதற்காக – நமது தமிழ்தேசிய அரைகுறைகள் லெமூரியா காண்டம் பற்றியும், ‘தமிழ் தான் மில்கி வே கேலக்சியிலேயே முதல் மொழி’ என்கிற ரீதியிலும் வெளியிடும் “அறிவியல்” நூல்களை இதற்கு இணையாகச் சொல்லலாம். தனினோ எழுதியதை தமிழாக்கம் செய்து வெளியிட்ட பத்ரியின் கிழக்கு பதிப்பகம் எப்பேற்பட்ட தரத்தோடு இயங்குகிறது என்பதற்கு இந்த கூமுட்டை நூல் ஒரு எடுப்பான சான்று.

பத்ரியின் கிழக்கு பதிப்பகம்

பத்ரியின் கிழக்கு பதிப்பகம் எப்பேற்பட்ட தரத்தோடு இயங்குகிறது என்பதற்கு இந்த கூமுட்டை நூல் ஒரு எடுப்பான சான்று.

இந்தக் கோமாளித்தனம் ஒரு பக்கமிருக்க, ருடால்ப் வோன் ரோத் என்ற ஆய்வறிஞர், வேதகாலத்தவர்கள் சிந்து நதியைக் குறிப்பதற்கான இன்னொரு பெயராக சரஸ்வதி நதியை பயன்படுத்தினார்கள் என்கிறார். வோன் ரோத்தின் விளக்கப்படி, சமஸ்கிருதத்தில் நதியை குறிக்க சிந்து அல்லது சரஸ்வதி என்ற வார்த்தைகளும் பயன்படுத்தப்படுகிறது என்பது மற்றொரு ஆய்வாளரான ஜிம்மரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு சமஸ்கிருத அறிஞரான கே.சி சட்டோபாத்யா போன்றோரும் அதை அங்கீகரிக்கின்றனர்.

இறுதியாக, லிவியு ஜியோசான் என்ற புவியியல் ஆய்வாளர் வேதங்களில் சொல்லப்படும் சரஸ்வதி நதி குறித்து ஒருங்கிணைந்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டு (high resolution topographic data, geomorphologic analysis and sediment dating)  அவ்வறிக்கையை 2012-ல் வெளியிட்டுள்ளார். அதன்படி, “காக்கர் – ஹக்ரா நதியானது பருவமழையினால் நீரூட்டப்பட்ட நதி” என்றும், “கடந்த பத்தாயிரம் வருடங்களில் (holocene) ஹரியானாவின் குறுக்காக இமயத்தின் பனிச்சிகரங்கள் உருகி அதனால் நீரூட்டப்பட்ட நதி எதுவும் ஓடவில்லை” என்றும் தெளிவாக நிலைநாட்டப்பட்டுள்ளது.

எனினும், ஜியோசானின் ஆய்வறிக்கையை அறிவியல் பூர்வமாக எதிர்கொள்ளும் திராணியற்று வழக்கம் போல் தொன்மம், நம்பிக்கை, வேதம் போன்ற வஸ்துக்களை தூவி இந்துமதவெறியர்கள் எதிர்கொள்கின்றனர். முன்னர் குதிரை இலட்சினைக்கு நடந்ததே, சரஸ்வதி பில்டபுக்கும் நடந்தது. வரலாற்றறிஞர்கள் இந்த நகைச்சுவை இம்சைகளை ரசிக்கிறார்களா, இல்லை, இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியிருக்கிறதே என்று வெறுக்கிறார்களா தெரியவில்லை.

லிவியு ஜியோசான்

வேதங்களில் சொல்லப்படும் சரஸ்வதி நதி குறித்து ஒருங்கிணைந்த ஆய்வு மேற்கொண்ட புவியியல் ஆய்வாளர் லிவியு ஜியோசான்

இக்கட்டுரையின் அடிக்குறிப்பில் அது தொடர்பாக வெளியான ஆய்வறிக்கைகள், மற்றும் இந்துத்துவ கும்பல் வைத்த அரைகுறை ”விஞ்ஞான” எதிர்வினைகள், அவை தொடர்பாக ஆய்வுலகில் நடந்த விவாதங்கள் மற்றும் அவை எப்படி முறியடிக்கப்பட்டது என்பதற்கான இணைப்புகள் உள்ளன.

எப்படிப் பார்த்தாலும் சரஸ்வதி நதி என்று வேதங்களில் சொல்லப்படுவது ஒன்று கற்பனையானதாகவோ அல்லது வேறு ஒரு பெரிய நதியைப் பற்றிய வர்ணனையாகவோ அல்லது ஆரியர்கள் தாங்கள் கடந்து வந்த பாதையில் இருந்த வேறு ஒரு நதியைப் பற்றிய பழைய நினைவுகளாகவோ அல்லது சட்லெஜ் யமுனைக்கு இடையே ஓடி கடலில் கலக்காத சிறிய ஓடையாகவோ, அல்லது நதி தேவதை குறித்த வேத காலத்தவர்களின் விவரணைகளாகவோ தான் இருந்திருக்க வேண்டும் – அல்லது இவை எல்லாமாகவும் இருந்திருக்கலாம் (ரிக் வேதம் தான் பல காலகட்டத்தில் பலரால் பாடப்பட்டதாயிற்றே, ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த சரஸ்வதியைப் பற்றிச் சொல்லியிருக்க கூடிய வாய்ப்பும் உள்ளது)

ஆனால் சர்வ நிச்சயமாக இந்துத்துவ கும்பல் தற்போது போட்டுக் காட்டும் வரைபடத்தில் இருப்பது போன்ற ஒரு ஜீவ நதி எந்தக் காலத்திலும் அங்கே பாய்ந்திருக்க வாய்ப்பே இல்லை.

இல்லாத கிணற்றைத் தேடும் இந்துத்துவ முயற்சி, கோமாளித்தனமா?

இல்லை, இது நரித்தனம். பழைய புராணங்களின் கற்பனைக் கதைகளைத் தேடும் இந்துத்துவ முயற்சிகள் ஒவ்வொன்றும் மக்களை மத அடிப்படையில் திரட்டி இந்துக்களின் ஓட்டுக்களைப் பொறுக்க பாரதிய ஜனதா – ஆர்.எஸ்.எஸ் கும்பல் செய்யும் சதிகள். ஹரியானாவின் ஆதி பத்ராவில் இருந்து ராஜஸ்தான் வழியே குஜராத்தின் கட்ச் பிராந்தியம் வரை மசூதிகளையும் சர்ச்சுகளையும் இந்துக்களின் புனித ‘நம்பிக்கையின்’ பேரில் உடைப்பதற்கான பிரச்சாரங்கள் இனி வேகமெடுக்கும்.

இந்த அரசியல் கழிசடைத்தனமான விளையாட்டிற்கு மக்களின் வரிப்பணம் லட்சக்கணக்கான கோடிகளில் கொட்டப்படும். புராணக் கதையான ராமாயணத்தில் வந்த கதாபாத்திரமான இராமனை முன்வைத்து அயோத்தியில் நடத்தப்பட்ட வெறியாட்டங்கள் மொத்த நாட்டையும் கலவரங்களால் அழச்செய்தது. அயோத்தியில் கற்றுக் கொண்ட பாடத்தை தேசமெங்கும் விரிவு படுத்தும் முயற்சியின் துவக்கப் புள்ளியாகவே இந்த முயற்சிகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே பாரதிய ஜனதா – ஆர்.எஸ்.எஸ் கும்பலை இந்த நாட்டில் இருந்து விரட்டாமல் மக்கள் மட்டுமல்ல, வரலாறு, அறிவியல் போன்ற கல்வித்துறைகளும் நிம்மதியாக இருக்க முடியாது.

-    தமிழரசன்.

இது தொடர்பான சுட்டிகள்

 

www.vinavu.com/2015/04/27/search-for-sarasvati-yet-another-political-machination-of-rss/






Other News
1. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
2. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
3. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
4. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
5. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
6. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
7. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
8. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
9. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
10. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
11. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
12. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
13. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
14. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
15. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed
16. 07-06-2024 இந்தியத் தேர்தல் முடிவுகளும் சர்வதேச ஊடகங்களின் பார்வையும் - S Peer Mohamed
17. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed
18. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
19. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
20. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
21. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
22. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
23. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
24. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
25. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
26. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
27. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
28. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
29. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
30. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..