Posted by Haja Mohideen
(Hajas) on 5/7/2015 3:43:55 AM
|
|||
நம் கல்வி... நம் உரிமை!- கே.பி.யும், ஜி.பி.யும் இனி வருவார்களா? Updated: Wed, 6 May 2015 08:25 | வி.தேவதாசன்
ஒரு 30 வருஷங்கள் இருக்கும். அது மார்கழி மாதப் பனி இரவு. அந்தி நேரத்திலேயே குளிரின் நடுக்கம் தொடங்கிவிடும். ஆனால், அந்தக் குளிரிலும் இரவு 10 மணி வரை நாங்கள் விளையாடுவோம். ஊரே இருட்டாக இருக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் தெரு விளக்குக் கம்பங்களில் தொங்கும் மங்கலான குண்டுபல்பு மட்டும் ஊருக்குக் கொஞ்சம் வெளிச்சத்தைக் கொடுக்கும். தெரு விளக்குக்குக் கீழே அப்போது இருந்த மண் சாலைதான் எங்கள் விளையாட்டுக் களம். தட்டுக்கோடு, சில்லு, கபடி என மாறி மாறி விளையாடுவோம். அப்படி ஒருநாள் இரவு விளையாடிக்கொண்டிருந்த இடத்துக்குப் பக்கத்தில் இருந்த சந்துக்குள் அந்த சைக்கிள் நுழைந்தது. முண்டாசுவாலா சைக்கிள். உற்றுப் பார்த்தால் கே.பி. சார்போல இருந்தது. நான் விளையாட்டை விட்டுவிட்டு அந்த சைக்கிள் பின்னால் ஓட ஆரம்பித்தேன். மகேந்திரன் வீட்டை நோக்கி சைக்கிள் போக ஆரம்பித்தபோது, மனசு கொஞ்சம் படபடவென்றது. இதற்குள் அங்கிருந்த ஐந்தாறு தெரு நாய்கள் பயங்கர சத்தத்துடன் குரைக்கத் தொடங்கின. நாய்களின் சத்தம் ஊரையே கூட்டிவிடும்போல் இருந்தது. சைக்கிளை நோக்கி அந்த நாய்கள் ஓடி வந்தன. சைக்கிளில் சென்ற முண்டாசுவாலாவோ இவை எதற்கும் அலட்டிக்கொள்ளவில்லை. அந்த உருவம் அமைதியாக மகேந்திரன் வீட்டின் அருகே சென்று சைக்கிளை நிறுத்தியது. மகேந்திரன் குரலைக் கேட்டபோது, என் சந்தேகம் சரிதான் என்று புரிந்தது. வந்திருப்பது கே.பி. சார். “சார்… சார்… வாங்க சார்… வாங்க சார்…” என்று பம்மிக்கொண்டிருந்தான் மகேந்திரன். வார்த்தைகள் எல்லாம் உளறல்கள்போல உதிர்ந்தன. “என்னய்யா கீழப்பர்ராகுடியார… இதுதான் படிக்கிற லட்சணமா? (கீழத்திருப்பாலக்குடி என்ற எங்கள் கிராமத்தின் பெயரை இப்படித்தான் கே.பி. சார் கிண்டலாகக் கூறுவார்) இன்னும் 10 மணிகூட ஆகலை. அதுக்குள்ள தூக்கத்துக்கு ரெடியாயிட்டே போலிருக்கு” என்றார் கே.பி. சார். வீட்டினுள் பாய் விரித்து எல்லோரும் தூங்குவதற்குத் தயாராக இருந்தார்கள். “சார்… சார்… ரொம்ப நேரமா படிச்சிக்கிட்டுதான் சார் இருந்தேன். இப்பதான் சார் புத்தகத்தை மூடி வெச்சேன். எல்லாம் படுக்கலாம்னாங்க” என்றான் மகேந்திரன். “ஆமாம் சார். சாயந்திரத்திலேர்ந்து படிச்சுக்கிட்டுதான் இருந்தான். இப்பதான் சார் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மூடி வெச்சான்” என சௌந்தராசு சித்தப்பாவும் வக்காலத்துக்கு வந்தார். “இப்படியெல்லாம் புள்ளைக்கு சப்போர்ட் பண்ணிப் பேசாதீங்க. 10 மணி வரைக்கும் கண்டிப்பா படிக்கணும். காலையில சீக்கிரமா எழுப்பிவிட்டுப் படிக்கச் சொல்லுங்க. இந்த வருஷம் பத்தாவது பொதுப் பரீட்சை. புள்ள நல்லா வரணுமா, வேணாமா?” என்றவர் சௌந்தராசு சித்தப்பாவிடம் கொஞ்ச நேரம் பேசினார். அப்புறம் மகேந்திரனிடம் என்னவெல்லாம் படித்திருக்கிறான் என்று கேட்டவர், ‘‘கண் விழித்துப் படித்தால் உடம்பு சூடாகாமல் இருக்க வெந்தயம் கொஞ்சம் தினமும் விழுங்கு” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். சைக்கிளில் ஏறும்போது, மகேந்திரன் கன்னத்தில் ஒரு செல்லத் தட்டு. “இன்னொருத்தன் இருப்பானே இங்கே, அவன் வீடு எது?” என்றார். சந்தோஷம் பொங்க ராஜேந்திரன் வீட்டைக் காட்டிவிட்டு, படிக்க ஓடினான் மகேந்திரன். அவனுடைய வீட்டிலிருந்து அடுத்த இரண்டாவது வீடுதான் ராஜேந்திரன் வீடு. மகேந்திரன் வீட்டில் கே.பி. சார் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், ராஜேந்திரன் வீட்டுக்குள் படித்துக்கொண்டிருந்தான். அடுத்து தனது வீட்டுக்கு கே.பி. சார் வருவார் என்று தெரிந்துவைத்திருந்தானோ, என்னவோ புத்தகத்தோடு வெளியே வந்தான். “வெரிகுட்... நல்லா படிங்கடா” என்று சொல்லிக்கொண்டே அடுத்த தெரு நோக்கி சைக்கிளை விட்டார் கே.பி. சார். அடுத்து அவர் சென்றது, பொற்கொடி வீடு நோக்கி. அது எங்கள் பெரியப்பா வீடுதான். அவ்வளவு நேரம் படித்துக்கொண்டிருந்த பொற்கொடியக்கா அப்போதுதான் பெரியப்பாவுக்குச் சட்னி அரைப்பதற்காக எழுந்து சென்றிருந் தார். கே.பி. சார் வீட்டுக்குள் நுழையவும் அக்கா அம்மியில் சட்னி அரைக்கவும் சரியாக இருந்தது. பொற்கொடி அக்காவும் கே.பி. சாரிடம் வசமாக மாட்டிக்கொண்டார். பயத்தில் அக்காவும் உளறித் தள்ளினாள். எங்கள் பெரியப்பா கணேசன், நடுநிலைப் பள்ளி ஒன்றின் தலைமையாசிரியாக இருந்தார். கே.பி. சாரின் மரியாதைக்குரியவர். “இவ்வளவு நேரம் படிச்சுக்கிட்டுதான் இருந்துச்சு. இப்போதான் சட்னி அரைக்கப் போச்சு” என்று பெரியப்பா சொன்னதை ஏற்றுக்கொண்ட கே.பி. சார், கொஞ்ச நேரம் பெரியப்பாவுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்புறம், அடுத்த கிராமம் நோக்கி நகர ஆரம்பித்தார். கே.பி. சார் எங்கள் ஊருக்கு வந்த அதே நேரத்தில், ஜி.பி. சார் பக்கத்தில் இருந்த கண்டிதம்பேட்டையில் சுற்றிக்கொண்டிருந்ததை மறுநாள் பையன்கள் பேசிக்கொண்டனர். யார் இந்த கே.பி. சாரும், ஜி.பி. சாரும்? திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள ஆலங்கோட்டை கிராமத்தில் உள்ளது திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி. கிராமத்து மக்களால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு சமுதாயப் பள்ளி அது. சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கல்வி ஒளி ஏற்றிய பள்ளி அது. அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள்தான் கே.பன்னீர்செல்வம் என்ற கே.பி-யும், ஜி.பாலச்சந்திரன் என்ற ஜி.பி-யும். 10-ம் வகுப்பில் அங்கு ஏ, பி என்று இரு பிரிவுகள் இருக்கும். கே.பி-யும், ஜி.பி-யும் ஆளுக்கொரு வகுப்பின் வகுப்பாசிரியர்கள். பள்ளிக்கூடத்தில் படிப்பதோடு அல்லாமல், வீட்டிலும் தம் மாணவர்கள் படிப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்பதற்காக கே.பி-யும், ஜி.பி-யும் இரவு நேரத்தில் சைக்கிளை எடுத்துக்கொண்டு, குளிரிலும் இருளிலும் சுற்றிவருவார்கள். 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள தங்கள் மாணவர் ஒவ்வொருவர் வீட்டுக்கும் இப்படிப் போவார்கள், வாரத்துக்கு நான்கு நாட்கள். தம் வீட்டுக்கு ஆசிரியர்கள் வரக் கூடும் என்ற எண்ணத்தில் மாணவர்கள் படிப்பார்கள் என்பது மட்டும் அல்ல நோக்கம்; அவர்கள் படிப்பதற்கான சூழலைப் பெற்றோர்கள் வீட்டில் தர வேண்டும் என்ற எண்ணமும் உண்டு. இன்றைக்குத் தமிழ்நாட்டின் பல ஊர்களில் கோழிப் பண்ணைகள்போலத் தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. இரவு நெடுநேரமும், அதிகாலையிலும் மாணவர்களைப் படிக்க வைக்கும் பல பள்ளிகள் வந்துவிட்டன. இந்தப் பள்ளிகளின் ‘நோக்கம்’ வேறு. ஆனால், கே.பி.யும், ஜி.பி.யும் இரவு நேரத்தில் வீடு வீடாக அலைந்ததன் நோக்கம் வேறு. அப்போது கே.பி.யிடமும், ஜி.பி.யிடமும் படிக்க வந்தவர்களில் பலர் முதல் தலைமுறை மாணவர்கள். ஏழ்மைப் பின்னணியைக் கொண்டவர்கள். பள்ளிக்கூடங்கள் தான் அவர்களின் பல நூற்றாண்டு வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டிருந்தன. கே.பி.யும், ஜி.பி.யும் இதை நன்கு உணர்ந்திருந்தார்கள். அவர்களிடம் காணப்பட்ட அதே அக்கறை பள்ளியின் தலைமையாசிரியர் பாஸ்கரன் உட்பட அன்றைய ஆசிரியர்கள் பலரிடமும் உண்டு. தேர்வுக் காலம் நெருங்கிவிட்டால், உள்ளிக்கோட்டை லெட்சுமி திரையரங்கம் வாசலில் (அன்றைய காலகட்டத்தில் அந்தப் பகுதியின் ஒரே பொழுதுபோக்கு இடம்) மாலை 5.30 மணிக்கெல்லாம் கே.பி. சாரையும், குமணன் சாரையும் பல நாட்கள் பார்க்கலாம். வாசலில் அவர்கள் நின்று கொண்டிருந்தால் மாணவர்கள் யாரும் தேர்வு நேரத்தில் திரையரங்கம் பக்கம் வர மாட்டார்கள் என்பதற்காக நின்று கொண்டிருப்பார்கள். சில சமயங்களில் உள்ளே புகுந்தும்கூட ‘ரெய்டு’ நடத்துவார்கள். “அடேய் படிங்கடா... பரீட்சை முடிஞ்ச உடனே தெனம் வந்து பாருங்க... நானே காசு தர்றேன்” என்பார்கள். அது ஒரு காலம். இப்படி ஒவ்வொரு ஊரிலும் மாணவர் களைத் தம் பிள்ளைகளாகக் கருதி உழைத்த ஆசிரியர்கள் இருந்த காலம். இன்றைக்கும் அரசுப் பள்ளிகள் இருக்கின்றன. ஆசிரியர்கள் இருக்கின்றனர். மாணவர்கள் இருக்கின்றனர். இந்தக் காலத்தைப் பின்னாளில் எப்படி நினைவுகூர்வது? - வி. தேவதாசன் ©2015, தி இந்து
https://www.facebook.com/bk.mohideen/posts/10203020915723751
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |