Posted by Haja Mohideen
(Hajas) on 5/13/2015 10:24:36 AM
|
|||
விவசாயி மட்டுமே அரசனாக இருப்பான்.
வேப்பங்காய் உடலுக்கு நன்மை தரும் மருத்துவக் குணமிக்கது என்றாலும், அதை எவரும் விரும்புவதில்லை. காரணம், அவ்வளவு கசப்பு அது. அதேபோலத்தான், மனித குலம் உயிர் வாழ இன்றியமையாதது என்றாலும், பலரும் விரும்பாத தொழிலாக விவசாயம் மாறிவிட்டது. என்ன தொழில் இது? உட்கார்ந்து வேலை செய்ய குளிரூட்டப்பட்ட கட்டடம் கிடையாது. ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் நிச்சயிக்கப்பட்ட ஊதிய வரவு கிடையாது. அட, பணி ஓய்வும் கிடையாது, ஓய்வுக்குப் பிந்தைய பணப் பலனும் கிடையாது. நமது நாட்டில், எந்தப் பொருளாயினும் அதை உற்பத்தி செய்பவரே விலையை நிர்ணயிக்க முடிகிறது. இதில் பெரு நிறுவனங்களோ, குடிசைத் தொழிலோ எதுவும் விதிவிலக்கல்ல. ஆனால், தன் மண்ணில் வெயிலும், மழையும் பாராது அயராது உழைக்கும் விவசாயிக்கோ, தான் விளைவித்த பொருளுக்கு விலை சொல்லும் உரிமை இல்லவே இல்லை. நிலத்தை உழுது பயிரிட்டு, அதை அறுவடைக்குக் கொண்டு வரும் முன்னர் விவசாயிக்குத்தான் எத்தனை எத்தனை இன்னல்கள்? ஏனைய தொழில்களில் இன்றைய முதலீடு அடுத்த நாளே லாபமாக மாறுகிறது. ஆனால், விவசாயத்தில் மட்டும்தான் பயிரை விளைவித்து மாதக் கணக்கில் காத்திருக்க நேரிடுகிறது. அமோக விளைச்சல் கிடைத்தாலும் நல்ல விலை கிடைக்கும் என்பது நிச்சயமில்லை. சில நேரங்களில் விளைச்சலே வீணாகிப் போகலாம். அப்படியொரு பெரும் துயரைத்தான் நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகள் தற்போது சந்தித்துள்ளார்கள். ஆம். மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பெய்த பருவம் தவறிய மழையால் 1.8 கோடி ஹெக்டேர் அளவிலான பயிர்கள் நாசமாகியுள்ளன. கடுகு, கோதுமை, பருப்பு, எண்ணெய் வித்துகள், பழங்கள், காய்கறிகள் ஆகிய அனைத்துமே பாதிக்கப்பட்டுள்ளன. இந்நாட்டில் விவசாயி குறித்து கவலை கொள்வார் எவருமிலர் என்பதே மெய்நிகர் உண்மை. ஆனால், விவசாயி மீது தனக்கும் கருணை கிடையாது என்பதை அவ்வப்போது உணர்த்தி விடுகிறது இயற்கை. ஒன்று, மழை பெய்யாமல் கெடுக்கிறது. இல்லையெனில் பெய்து கெடுக்கிறது. சூறைக்காற்று, உறைபனி உள்ளிட்டவை கூடுதல் சாபங்கள். பெய்யாமல் கெடுத்தால்கூட பரவாயில்லை, ஆனால், மழை பெய்து கெடுப்பதுதான் அதைவிடக் கொடுமை. நிலத்தில் விளைந்த விளைச்சலை வீட்டுப் படியேற்றும் முன்னரே மண்ணுக்கு இரையாக்க நேரிடுகிறது. விவசாயிகளின் தற்கொலைக்கான தலைநகரம் என விமர்சிக்கப்படும் பகுதியான, மகாராஷ்டிர மாநிலம் விதர்பாவில் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டியுள்ளது. அங்கு இந்த ஆண்டில் மட்டும் 445 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக விவசாய அமைப்பு தெரிவிக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் விளைச்சல் பறிபோனதால், தற்கொலை செய்துகொண்டும், அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்த விவசாயிகள் 20-க்கும் அதிகம். ரத்தத்தை உறைய வைக்கும் வேதனையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு, இழப்பீடு என்ற பெயரில் ரூ.100, 200 என பிச்சை போட்டுள்ளது உத்தரப் பிரதேச அரசு. மேற்கு வங்க மாநிலத்தில் விவசாயிகள் எந்தத் தடையுமின்றி கைநிறைய விளைச்சல் கண்டாலும், அதற்குரிய பலனை அடைய முடியவில்லை. மண்ணுக்குள் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட உருளைக் கிழங்குகள், போதிய விலை கிடைக்காததால் மீண்டும் மண்ணுக்கே சொந்தமாயின. விளைவு, அங்கும் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். நாடு முழுவதிலும் தற்கொலை செய்யும் விவசாயிகளின் குடும்பத்தினர் சொல்லும் விளக்கம் ஒன்றுதான்: "கடன வாங்கி விவசாயம் பண்ணாரு. ஆனா, இப்போ விளைச்சல் பாதிச்சதால கொஞ்ச நாளா மனசுடஞ்சு போயி இருந்தாருங்க'. ஆக, விவசாயிகளின் உயிரைப் பறிக்கும் ஒற்றைச் சொல் கடன் என்பது இந்நாட்டுக்கு கேவலம் இல்லையா? பொதுத் துறை வங்கிகளில் பல்லாயிரம் கோடிகளைக் கடனாக வாங்கி ஏப்பம் விட்டுக் கொண்டு, பெரு முதலாளிகள் சுகபோக சொகுசு வாழ்க்கையில் ஊறித் திளைக்கையில், சில ஆயிரங்களையும், ஓரிரு லட்சங்களையும் கடனாக வாங்கிய விவசாயி மட்டும் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் என்ன? நாட்டுக்குத் தேனமு(ம)து தயாரித்துக் கொடுத்து மக்களை இன்பலோகத்தில் (?) திளைக்கவிடுபவர்கள் குறித்து அரசுக்கு இருக்கும் கவலை, ஏழை விவசாயிகள் குறித்து இல்லை என்பதால்தான் அவர்கள் மட்டும் தற்கொலைக்குப் பலியாகிறார்கள். நாடு முழுவதிலும் உள்ள கரும்பு விவசாயிகளுக்கு, சர்க்கரை ஆலைகள் ரூ.16,334 கோடி நிலுவைத் தொகையாக வைத்துள்ளன என்று மத்திய அரசே தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் ரூ.522 கோடி விவசாயிகளுக்குத் தர வேண்டியுள்ளது. கடனை அடைக்க முடியாத விவசாயிகளின் உடைமைகளை வங்கிகள் பறிமுதல் செய்யும்போது, வாங்கிய கரும்புக்குப் பணம் கொடுக்காமல் இழுத்தடிக்கும் சர்க்கரை ஆலைகளின் சொத்துகளை ஏன் முடக்க முடியவில்லை? வெங்காயத்தின் விலை ரூ.70-ஐத் தொட்டுவிட்டால் நாடே கண்ணீர் சிந்துகிறது. தக்காளி விலை ரூ.50 என்றால் மக்களுக்கு விழி பிதுங்குகிறது. ஆனால், இவையிரண்டின் விலை சரிந்து ரூ.5-க்கு விற்குமானால், குற்ற உணர்வின்றி வாங்கிச் செல்கிறதே இந்தச் சமூகம்? விற்பவருக்கே இந்த விலைதான் என்றால், விளைவித்தவருக்கு என்ன கிடைத்திருக்கும் என்பதை இந்தச் சமூகம் ஒரு நாளேனும் சிந்தித்திருக்குமா? இதே நிலை தொடர்ந்தால், கையளவு விளைநிலம் கொண்டவனுக்கு மட்டுமே அடுத்த வேளை உணவு கிடைக்கும் என்ற நிலை ஒரு நாள் வரத்தான் போகிறது. அன்றைய தினத்தில் விவசாயி மட்டுமே அரசனாக இருப்பான். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |