நாட்டின் சட்டங்களில் “கல்வி பெறும் உரிமைச் சட்டம்” மிக முக்கிய ஒன்று. ஆறு முதல் பதிநான்கு வயது வரையுள்ள ஒவ்வொரு மாணவனுக்கும் கல்வியை இலவசமாக கற்பதற்கான வாய்ப்புதான் இந்த சட்டம். இச் சட்டம் நமது தேசத்திற்கு புதிதான ஒன்றல்ல. கல்வியாளர் அபுல் கலாம் ஆசாத் மற்றும் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் இணைந்து கடந்த 1950-ஆம் ஆண்டு முன்வைத்த சட்டம்தான் இது. சமூகத்தில் அனைத்து தரப்பினரும் கல்வி பெற்று எங்கே உயர்ந்து விடுவார்களோ என்றெண்ணி சில சதிகாரர்களால் இந்த சட்டம் நிறைவேறாமலே போய்விட்டது. இன்றளவும் அந்த “சமூக அநீதி” நடைமுறையில்தான் உள்ளது.
எதற்கெடுத்தாலும் மேலைநாடுகளை உதாரணம் காட்டும் நம் அரசியல் தலைவர்கள், கல்வியை இலவசமாக வழங்க வேண்டும் என்ற செயல்பாட்டை மட்டும் ஏன் பார்க்க தவறிவிட்டார்கள்? குட்டி நாடான பின்லாந்து முதல் மாபெரும் சக்தியான அமெரிக்கா உட்பட அநேக நாடுகளில் உயர்கல்வி வரை அரசே இலவசமாக வழங்கி வருவதுதான் அந்த நாட்டின் மேம்பாட்டிற்கு மிக முக்கிய காரணம். நம்மிடம் இல்லாத செல்வ வளமா, அந்த நாடுகளில்…! எத்தனை முறைகேடுகள்..! எததனை கோடிகள் கொள்ளைகள்..! அப்படியானால் காரணம் பணமல்ல. கல்வித்துறையில் சமூக அநீதி நிலைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கின்றது என்பதுதான் காரணமோ..!
கல்வி பெறும் உரிமைச் சட்டம் வாயிலாக குறைந்தபட்சம் பள்ளிக்கல்வி படிப்பதற்கு உதவி செய்ய முன்வந்துள்ளார்களே என்ற ஆசை இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்துவதில் அரசு மேற்கொண்ட உக்தி நடைமுறையில் சாத்தியமில்லாதவை. ஏழை மாணவர்களுக்கு 25 சதவிகித இடஒதுக்கீட்டினை தனியார் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளுங்கள் என அரசு 2 வருடங்களுக்கு முன் கூறியது அரசின் கையாளாகாத தனத்தையே காட்டியது.
இன்றளவும் இந்த இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பெரும்பான்மையான மாணவர்கள் சேர்க்கப்படவில்லை என்பதுதான் உண்மை. சில பள்ளிகள் தங்கள் பள்ளிகளில் வேலை பார்க்கும் பியூன், ஆயம்மா போன்றவர்களின் பிள்ளைகளுக்கு குறைந்த கட்டணத்தில் (இலவசமாக அல்லாமல்) இடமளித்து, அந்த நபர்களின் பட்டியலைக் கொண்டு இடஒதுக்கீடு கொடுத்துவிட்டோம் என்று கணக்கு காட்டுகின்றார்கள். இன்னும் சில பள்ளிகளில் "நீங்கள் கட்டணத்தை செலுத்தி விடுங்கள்; அரசு எங்களுக்கு பணம் கொடுத்தால் அதனை நாங்கள் திருப்பித் தருவோம்!" என்று கட்டணம் வசூலித்துதான் சேர்க்கை நடத்தினார்கள். கொஞ்சம் நடைமுறையில் யோசித்துப் பார்த்தால் அரசின் இந்த நடைமுறைப்படுத்துதல் என்பது முட்டாள்தனமானது என நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது.
அரசினால் தனியார் பள்ளிகளை நடைமுறையில் கட்டுக்குள் கூட கொண்டுவர முடியவில்லை என்பதுதான் உண்மை. ஒவ்வொரு பள்ளிக்கும் கட்டணம் நிர்ணயம் செய்தார்கள்; எங்காவது தனியார் பள்ளிகள் அதனைப் பின்பற்றியதா? கல்வித்துறையில் தனியாரின் ஆதிக்கம் அளவுகடந்து சென்றுவிட்டது. தனியார் பள்ளிகள் தேவைதான்; அரசு தன் கடமையை முழுமையாக செய்துவிட்டு, இன்னும் சில தேவைகள் இருப்பின், அதனடிப்படையில் அரசின் நோக்கத்தையே அடிப்படையாகக் கொண்டு, அரசின் கட்டுப்பாட்டிற்குள் இயங்கும் அரசு அல்லாத பள்ளிகளாகத்தான் தனியார் பள்ளிகள் இருக்க வேண்டும். ஆனால், இங்கு அரசின் தேவைக்காகவோ அல்லது தனிமனித சேவைக்காகவோ தனியார் பள்ளிகள் செயல்படவில்லை. அரசை மீறிதான் அவை செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதற்கு அங்கீகாரமும் கொடுத்திருக்கின்றது நமது அரசாங்கம்..!
சட்டம் இயற்றியதோடு, சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான எந்த ஒரு ஆரோக்கியமான வேலையையும் அரசு செய்யவில்லை. இதே தமிழகத்தில் அனைவருக்கும் இலவச கல்வி வழங்கி, ஒரு மாபெரும் கல்விப்புரட்சி செய்தவர்தான் மாமேதை காமராசர் அய்யா. கல்வி கற்க வேண்டும் என்ற விழிப்புணர்வே இல்லாத காலம் அது. பல்லாயிரக்கணக்கான கல்விக் கூடங்கள் மட்டும் கட்டவில்லை. அங்கே படிப்பதற்கு பிள்ளைகளை அனுப்ப வேண்டும் என்று வீதிவீதியாக சென்று மாநிலத்தின் முதல்வரே பிரச்சாரம் செய்தார்.
இன்னும் ஒருப்படி மேலே சென்று மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்ததோடு, அதற்கான நிதியை ஏற்பாடு செய்வதற்கு பிச்சையெடுப்பதற்கும் தயாரென்று எட்டயபுரம் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். ஏழ்மை நிலையிலிருந்து வந்ததனாலோ என்னவோ, ஏழ்மை நிலையில் உள்ளவர்களின் துயர்துடைக்கப் பாடுபட்டார்.
ஆனால், இன்று அரசு செய்து கொண்டிருக்கும் ஒரே வேலை… அரசுப் பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்திக் கொண்டிருப்பதுதான்...! கேட்டால் குறைவான சேர்க்கைதான் நடைபெறுகின்றது என்று சப்பைக்கட்டுகின்றார்கள். தரமில்லையென்றால் தனியார் பள்ளிகளுக்கும் ஆள்வரமாட்டார்கள். அரசுப்பள்ளிகளில் தான் மேதைகள் பலர் உருவாகியிருக்கின்றார்கள் என்பது உணமைதான். ஆனால், அப்போது நிறைவான, தரமான பள்ளிக்கூடங்கள் இருந்தது என்பதும் உண்மை. இப்போது அப்படியில்லை…! பள்ளிக்கூடங்கள் மட்டுமல்ல… அரசும்தான்.
மீண்டும் சொல்கின்றேன். கல்வித்துறையில் சமூக அநீதி காலூன்றி இருக்கின்றது. இந்த சிந்தனை களையப்படாமல், தரமான, நிறைவான கல்வி எல்லோருக்கும் கிடைக்கும் என்று எத்தனை சட்டங்கள் இயற்றினாலும் அவை வீணான சட்டங்களே…!
மு. சையது அபுதாஹிர் ஆராய்ச்சி மாணவர் பாரதியார் பல்கலைக்கழகம்.
|