ரமழான் பாடம் -6 ரமழானில் கைக்கொள்ளவேண்டிய பண்புகள் ********************************************************************* 1. நாவடக்கம் ************************* 'பொய் கூறுவதையும் பொய்யான நடவடிக்கைகளில் ஈடு படுவதையும் எவன் விடவில்லையோ அவன் பட்டினி கிடப் பதாலும் தாகத்தோடு இருப்பதாலும் இறைவனுக்கு எந்தத் தேவையும் இல்லை' என அண்ணலார் கூறியுள்ளார்கள். (புகாரி)
'நோன்பு ஒரு கேடயமாகும். நீங்கள் நோன்பு வைக்கும் நாளில் யாரையும் ஏசாதீர்கள், திட்டாதீர்கள், ஆபாசமாக பேசாதீர்கள். உங்களை யாரேனும் திட்டினாலோ உங்களோடு வம்புச் சண்டைக்கு வந்தாலோ நான் நோன்பு வைத்துள்ளேன் எனக் கூறி விலகிக் கொள்ளுங்கள்' எனவும் அண்ணலார் கூறி யுள்ளார்கள்.
'உணவையும் குடியையும் தவிர்த்துக் கொள்வது சாதாரண நோன்பு' என சான்றோர்கள் வகைப்படுத்தி உள்ளார்கள்.'நோன்பு நோற்றால் உன்னுடைய காதுகளும் உன்னுடைய கண்களும் உன்னுடைய நாவும் பொய் உரைப்பதை விட்டும் ஹராமான செயல்களைச் செய்வதை விட்டும் பக்கத்து வீட்டுக் காரர்களுக்கு தொல்லை தருவதை விட்டும் நோன்பு இருக்க வேண்டும்.
நோன்பிருக்கும் நாளில் மன நிம்மதியும் அமைதி யும் நீ பெற்றாக வேண்டும். நோன்பிருக்கும் நாளும் நோன்பி ருக்காத நாளும் ஒன்றுபோல காட்சியளிக்கக் கூடாது' என ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள். பேச்சு நால்வகைப்படுகின்றது. 1. தீமைபயக்கும் பேச்சு 2. நன்மையான பேச்சு 3. நன்மையும் தீமையும் கலந்த பேச்சு 4. நன்மையோ தீமையோ எதுவுமற்ற பேச்சு ஆழமாக யோசித்துப் பார்த்தால் பேச்சினால் நன்மை விளை வதைவிட பெரும்பாலும் தீமைகளும் தவறான விளைவு களுமே ஏற்படுகின்றன. ஆகையால் இந்த ரமழான் மாதத்தில் கீழ்க்கண்ட வகைப் பேச்சுகளை விட்டு முஃமின்கள் படு எச்சரிக் கையோடு இருக்க வேண்டும். புறம், ஆற்றாமை, கோள், பொய், கேலி, கிண்டல், ஏளனம், பரிகாசம், வசை, திட்டு, சாபம், தூற்று, ஆபாசம், வேடிக்கை, வெட்டிப்பேச்சு. நோன்பிருக்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள். இறைநம் பிக்கையின் அடையாளத்தை தொலைத்து விடாதீர்கள்.
2. தாழ்மை, பணிவு ***************************** நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளதன் காரணம் என்ன வெனில், செல்வந்தர்கள், ஏழை-எளியோரின் வயிற்றுப் பசியை அறிந்து கொள்வதற்காகவும் தான் என பொதுவாக சொல்வார் கள். அதற்காகத்தான் கடமையாக்கப் பட்டது என சொல்வதற் கில்லை. ஆயினும், நோன்பின் மூலமாக முஃமின்கள் அவ்வு ணர்வையும் பெற்றுக் கொள்ளத்தான் செய்கிறார்கள்.
இருப்பதைக் கொடுத்து வேண்டியதைப் பெற்றுக் கொள்வது தான் 'வணிகம்' எனப்படுகின்றது. இத்திறமை சிறப்பாக அமையப் பெற்றவர்கள் தலைசிறந்த வியாபாரிகளாக விளங்கு கிறார்கள். 'என்னிடம் இருக்கின்றது' என்னும் உணர்வுதான் அகம்பாவ மாக, கர்வமாக, ஆணவமாக தலையெடுக்கின்றது.
என்னிடம் இருப்பது இறைவனால் கொடுக்கப்பட்ட மூலப் பொருட்கள். இவற்றைக் கொண்டு எனக்குத் தேவையான பொருட்களை நான் பெற்றுக் கொண்டாக வேண்டும் என உண்மையான இறைநம்பிக்கையாளன் எண்ணுகிறான். அவனி டம் இருப்பது அறிவாக இருக்கலாம், கல்வியாக இருக்கலாம், செல்வமாக இருக்கலாம், வீரமாக இருக்கலாம், உடல்பலமாக இருக்கலாம். இருப்பது எதுவோ அதைக் கொண்டு மறுமை வாழ்க்கைக் குரிய பொருட்களை இங்கிருந்தவாறே ஈட்டிக் கொள்ளவேண் டும்.
அதுவே அறிவுடைமை. 'மறுமை வாழ்க்கைக்காக யார் உழைக்கிறாரோ அவரே அறிவாளி' என அண்ணலார் இத னைக் குறிப்பிடுகிறார்கள்.
ஆக, எது தேவையோ அது உங்களிடம் இல்லை. அதை நீங்கள் கண்டிப்பாக பெற்றுக் கொள்வீர்கள் என்பதற்கு யாதொரு உத்தரவாதமும் கிடையாது. கிடைக்கலாம், கொடுக்கப்பட லாம், மறுக்கவும் படலாம். எங்கிருந்து வரும் உங்கள் உள்ளத்தில் ஆணவம்? பெருமித உணர்வு? இல்லையல்லவா? சாத்தியமில்லை அல்லவா? இவ்வுணர்வைத் தோற்றுவிப்பதில் நோன்பு முதலிடம் வகிக்கின்றது.
ஆகையினாற்தான் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழான் மாதத்தில் சூறாவளிக் காற்றைப் போல சுழன்று சுழன்று செலவளித்துள்ளார்கள். வாரி வாரி வழங்கி உள்ளார்கள். அதாவது, காற்றுள்ளபோதே தூற்றிக் கொண்டுள்ளார்கள். மறுமை வெற்றிக்கான உத்தரவாதம் யாருக்கு சந்தேகமில்லா மல் கொடுக்கப் பட்டதோ அத்தகையவர்கள் மட்டும்தான் 'உண்மையான சந்தோஷத்'துடன் திகழ முடியும். வரலாற்றில் பார்த்தோமென்றால் அத்தகைய உத்தரவாதம் வழங்கப்பட் டோர் நிம்மதியின்றி வாழ்ந்துள்ளார்கள். பயந்து நடுங்கியுள் ளார்கள். நற்செய்தி அளிக்கப்பட்ட பத்து நபித்தோழர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்துப் பாருங்களேன்.
ஒருவேளை நாம் மகிழ்ச்சி அடைய வேண்டுமென்றால் அந்த உத்தரவாத சான்றிதழை கையில் பெற்றுக்கொண்ட பிறகு, மகிழ்ச்சி அடையலாம். அது தகும். ஆனால், கொஞ்சம் உலகப் பணத்தை சம்பாதித்துக் கொண்டு, வீடுவாசல் கட்டிக் கொண்டு, வெட்டியாகச் செலவளிக்க சில சில்லறை நாணயங் களை கையில் வைத்துக்கொண்டு 'பணக்காரன்' என்னும் மிதப்பில் நடைபயின்றால் என்னவாகும்?
ஏதோ கொஞ்சம் கல்வியைப் பெற்றுக்கொண்டு 'அறிஞன்' என்னும் இறுமாப்பில் சுற்றிவந்தால் என்னவாகும்? இறைநம்பிக்கையாளர் கல்விமானாக, செல்வச்சீமானாக, மற வீரனாக எல்லாமாக இருப்பார். ஆனால், செருக்கு, அகம் பாவம், ஆணவம், கர்வம், தெனாவெட்டு, மிதப்பு போன்ற 'அரும்பெருங்'குணங்கள் எதுவும் அவரிடம் காணப்படாது. ரம ழான் மாதத்தில் தன்னுடைய பண்புகளை அவர் பட்டை தீட் டிக்கொள்வார்.
3. அர்ப்பணிப்பும் தியாகமும் *************************************** வேண்டியதைப் பெற வேண்டும் என்னும் ஆவல் இறை நம்பிக்கை யாளரிடம் மிகைத்திருக்கும் எனக் கண்டோம். அடை அடைவதற்கு அவர் எத்தகைய அர்ப்பணிப்பையும் செய்ய ஆயத்தமாக இருப்பார்.
செல்வந்தர்கள்தாம் செலவளிக்க வேண்டும் என ஏதேனும் நியதி இருக்கின்றதா? யார் வேண்டுமானாலும் செலவளிக்க லாம். உங்களிடம் இருப்பதை, இருப்பது எதுவோ அதை செல வளிக்கப் போகிறீர்கள்.
உங்களுக்குத் தேவை மறுமைக்கான பொருட்கள். இப்போது உங்களிடம் உள்ளதோ உலகத்தின் ஒருசில சில்லறை நாணயங் கள் பரவாயில்லை.
அதைக்கொண்டும் எதையாவது வாங்கலாம் கிடைப்பது கிடைக்கட்டும். கிடைத்தவரை லாபம் தானே? இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களிடம் ஒரு யாசகர் வந்தார். கொடுப்பதற்கு இங்கு ஒன்றுமில்லை. ஸஹ்ரு செய்வ தற்காக இரண்டு திர்ஹம்கள் மட்டும் உள்ளன. இமாமவர்கள் அவற்றை அவருக்குக் கொடுத்து விட்டார்கள். ஏதும் உண்ணா மல் அன்றைய நோன்பை பட்டினியோடு வைத்தார்கள்.
ஜிஹாதிற்கான அறிவிப்பு செய்யப்படுகின்றது. எல்லோரும் எல்லாவற்றையும் கொண்டுவந்து குவிக்க வேண்டும் என அறி விப்பு. அவரோ ஏழை ஸஹாபி. கையிலும் பையிலும் எதுவு மில்லை. கொடுக்கத்தான் ஆசை. ஆசைப்பட்டு என்ன செய்ய? வேண்டுமல்லவா? உழைக்கலாம் என்றால் காலும் ஊனம். என்ன செய்வது? ஒரு யூதனிடம் போய் வேலை கேட்கிறார்
. இவருடைய பரிதாப நிலையைப் பார்த்து அவனும் வேலை கொடுக்கிறான். வயலில் உள்ள கிணற்றில் இருந்து இறைகூடையில் நீரை இறைத்து ஊற்ற வேண்டும். அதுதான் வேலை. இரைவெல் லாம் வேலை பார்க்கிறார். விடிந்ததும் ஒரு மரக்கால் பேரீச்சம் பழங்கள் ஊதியமாகக் கிடைக்கின்றது. அதனை எடுத்துக் கொண்டு அண்ணலாரிடம் கொண்டுவந்து கொடுக்கிறார். குவியலாகச் சேர்ந்துள்ள பொருட்கள் அனைத்திற்கும் மேலாக அண்ணலார் அதனை வைக்கிறார்கள். 'இவை யாவற் றையும் விட இதுதான் மிகச்சிறந்தது' என முழங்குகிறார்கள்.
மனமிருந்தால் மார்க்கமுண்டு, கொடுக்கும் எண்ணம் இருந் தால் எத்தனையோ வழியுண்டு. இங்கே என்ன செலவளிக்கி றோம் என்பதைப் பார்க்கவே கூடாது. அங்கே என்ன கிடைக்க உள்ளது என்பதை மட்டும்தான் பார்க்க வேண்டும்.
4. பொறுமையும் நிலைகுலையாமையும் *********************************************************** “பொறுமையாளர்களுக்கு அவர்களின் கூலி அளவின்றி வழங்கப்படும்” (அல்குர்ஆன் 39-10) பொறுமை மூன்று வகைப்படும். (அ) இறைவனுக்கு கீழ்ப் படிவதில் நிலைகுலையாது இருத்தல். (ஆ) இறைவன் தடை செய்துள்ள செயல்களின் பக்கம் நெருங்காது பொறுமை காத் தல். (இ) இறைவனிடமிருந்து வருகின்ற சோதனைகளையும் இன்னல்களையும் எதிர்கொண்டு பொறுமை காத்தல் இம்மூன்று பண்புகளும் நோன்புக் காலத்தில் சங்கமிக்கின் றன, இல்லையா? “அல்லாஹ்வின் பாதையில் பசி, தாகம் மற்றும் உடற்களைப் பின் எந்த ஒரு துன்பத்தை அவர்கள் சகித்துக் கொண்டாலும் மேலும் சத்தியத்தை நிராகரிப்பவர்களுக்கு வெறுப்பாக இருக் கும் பாதையில் எந்த ஓர் அடியை அவர்கள் எடுத்து வைத்தா லும் மேலும் எந்த ஒரு பகைவனிடமும் (சத்திய விரோதப் போக்கிற்காக) எந்தப் பழியை அவர்கள் வாங்கினாலும் அவை ஒவ்வொன்றுக்கும் பகரமாக அவர்களின் பெயரில் ஒரு நன்மை எழுதப்படாமல் விடப்பட மாட்டாது” (அல்குர்ஆன் 9-120) இதன் காரணமாகத்தான் அண்ணலார் நோன்பு மாதத்தை 'பொறுமையின் மாதம்' (ஷஹ்ருஸ் சபுறு) எனக் குறிப்பிட்டுள் ளார்கள். (அபுதாவுது, அஹ்மத்)
5. மன்னிப்பும் பொறுத்தருள்தலும் **************************************************** “எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங் களுக்கு முந்திக் கொண்ட எங்கள் சகோதரர்களுக்கும் மன் னிப்பு அருள்வாயாக, அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பா யாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடைய வன், கிருபை மிக்கவன்” என்பார்கள். (அல்குர்ஆன் 59-10)
ஸுனன் இப்னு மாஜாவிலுள்ள ஒரு நபிமொழி. அப்துல் லாஹ் இப்னு உமர் (ரழி) அறிவிக்கிறார். 'மக்களில் சிறந்தவர் யார்?' என அண்ணலாரிடம் வினவப்பட்டது. 'துடைக்கப்பட்ட உள்ளமும் வாய்மை கொண்ட நாவும் உடையவர்' என்றார்கள் அண்ணலார். 'அதென்ன துடைக்கப்பட்ட உள்ளம்?' 'குற்றமோ இறைமாறுபாடோ ஆற்றாமையோ மனஸ்தா பமோ பொறாமையோ அற்ற தூய்மையானவர், இறையச்ச முடையவர்' என்றார்கள் அண்ணலார். (இறைமாறு என்றால், இறைவனுடைய கட்டளைகளுக்கு மாறு செய்வது. இறைவனுடைய கட்டளைகளை உதாசீனப் படுத்துவது எனப்பொருள்) ரமழானின் கடைசிப் பத்து நாட்களில் 'அல்லாஹும்ம இன்னக்க அஃப்வுன் துஹிப்புல் அஃப்வ்வ வஃப்பு அன்னீ' (இறைவா, நீ மன்னிப்பாளன், மன்னிப்பை விரும்புகிறாய், என்னை மன்னிப்பாயாக) என்னும் துஆவை ஓதுமாறு அண்ண லார் கற்றுக் கொடுத்துள்ளார்கள். என்ன ஆச்சரியம் பார்த்தீர் களா? நாம் யாரையும் மன்னிக்கத் தயாரில்லை. ஆனால், நம்மை மன்னிக்குமாறு இறைவனிடம் மன்றாடுகிறோம்.
6. இறையில்லத்தோடு தொடர்பு *************************************************** “யார் அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்புகிறார் களோ, மேலும் தொழுகையை நிலைநாட்டி ஜகாத் கொடுக்கி றார்களோ, மேலும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அஞ்சாமல் இருக்கிறார்களோ, அவர்கள்தாம் இறையில்லங் களை பராமரிப்பவர்களாய் (அவற்றை வளப்படுத்துபவர் களாய்) இருக்க முடியும்” (அல்குர்ஆன் 9-18) ரமழான் மாதத்தில் இறையில்லத்தோடு கீழ்க்கண்ட முறைகளில் தொடர்பு கொள்ள முடியும். அ. இஷ்ராக் அமர்வு ஆ. குர்ஆன் திலாவத், குர்ஆன் கூட்டாய்வு இ. ஐவேளைத் தொழுகை, பாங்கின் போதே சென்றுவிடுதல் ஈ. நோன்பு திறப்பு, இஃப்தார் உ. இரவுத் தொழுகை ஊ. ஸஹ்ரு செய்தவுடன் பள்ளிக்கு சென்றுவிடல் எ. இஃதிகாஃப்
-அஷ்ஷெய்க் அப்துர் ரஹ்மான் உமரி,இந்தியா.
https://www.facebook.com/groups/emandubai/permalink/939187616145173/
|