Posted by Haja Mohideen
(Hajas) on 10/5/2015 6:14:48 AM
|
|||
Stanley Rajan to வள்ளியூர்
ஏற்றமிகு ஏர்வாடி பஞ்சாயத். இந்திய பஞ்சாயத்து முறை மிக தொன்மையானது, சுற்றுபட்டி கிராமங்களுக்கு ஒரு அமைப்பு இருக்கும், கிராமத்துக்கு 5 பேர் கொண்ட ஒரு சபை இருக்கும், அந்த சபைக்கு பெயர் பஞ்சாயத்து. பன்ஞ் என்றால் ஐந்து, ஆயத் என்றால் சபை அல்லது பேரவை, பன்ஞ் + ஆயத். தமிழகத்தில் குடவோலை முறை என அது இருந்தது, மிக அருமையான மக்களாட்சி முறையினை அது போதித்தது, சுருக்கமாக சொன்னால் அது மக்களாட்சியின் அடிச்சுவடி அல்லது அகராதி. கிராமங்களின் சகல பிரச்சினைகளையும் இதுதான் தீர்மானிக்கும், (சினிமாவில் காட்டபடும் ஆலமரமும், நசுங்கிய செம்பும் மட்டுமல்ல), ஏரி தூர்வாருதல், சாலை, விவசாய சிக்கல் என எல்லாவற்றிற்கும் இதுதான், சுருக்கமாக சொன்னால் இதுதான் உண்மையான "நமக்கு நாமே". அப்படி இருந்த பஞ்சாயத்துக்கள் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியிலும் பெரிதாக பாதிக்கபடவில்லை, ஆனால் 1857ல் கம்பெனியை பிரிட்டிஷ் அரசு எடுத்துகொண்டவுடன் (அதாவது வருமானம் கொட்டும் டாஸ்மாக்கினை தமிழக அரசு, சாராய வியாபாரிகளிடமிருந்து கைபற்றிகொண்டதல்லவா? அதே பாலிசி) சில மாறுதல்களை செய்தது. அதாவது கிழக்கிந்திய கம்பெனி காட்டு கொள்ளைக்கார கம்பெனி ஆட்சேபனை இல்லை, ஆனால் பிரிட்டிஷ் அரசு அப்படி அல்ல, சட்ட திட்டங்கள் எல்லாம் போட்டு , மிக நாகரீகமாக கொள்ளை அடிக்காவிட்டால் உலகம் மதிக்காது அல்லவா?, உடனே இந்தியாவிற்கான சட்டம் எழுதினார்கள். அப்படி இந்திய உள்ளாட்சிகளுக்கு சட்டம் வகுத்தார்கள், 1883ல் புதிய உள்ளாட்சி முறையினை கொண்டுவருவதாக சொல்லி, இந்திய பஞ்சாயத் முறையினை சட்டபூர்வமாக்கினார்கள். சில கிராமங்களை ஒன்றிணைத்து பஞ்சாயத் ஆக்கினார்கள், தேர்தலும் உண்டு. ஆனால் படித்தவர்களும், சொத்து உள்ளவர்களும் மட்டுமே வாக்களிக்கமுடியும். இதில் தான் இன்று பல பஞ்சாயத்துக்கள் தமிழகத்தில் விசித்திரமாக காணப்படும். அதாவது இன்று பேய் கிராமம் அதாவது ஆளில்லா கிராமங்கள் பெயரிலும் பஞ்சாயத்து உண்டு, ஆனால் அடுத்த பெரிய கிராமங்கள் இப்போதும் இப்படி சொல்லும், "அரை ஏக்கர் அளவு கூட இல்லா ஊரெல்லாம் பஞ்சாயத்து, ஒரே ஒரு ஒரு 4 மாடி அடுக்குகுடியிருப்பில் அந்த ஊரையே அடக்கலாம்..", காரணம் இதுதான் அன்றைய காலத்தில் சுற்றுபட்டியில் எந்த ஊர்காரனுக்கு அதிக நிலம் இருக்கின்றதோ? அவன் அதிக வரி கட்டுவான், அவனுக்கே பஞ்சாயத்து அந்தஸ்து. இல்லானை இல்லாளும் மதியாள் என்பதல்ல இல்லாஊரை பிர்ட்டிசாரும் மதியார். இப்படி பின் வெள்ளையரால் உருவாக்கபட்ட பஞ்சாயத்திற்கு தேர்தல்களும் நடந்தது, தலைவர்களும் வந்தார்கள். சுதந்திரம் வாங்கிய புதிதில் மகாத்மா காந்தி இந்த பஞ்சாயத்துக்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என முழங்கினார். 1988களில் இந்த பஞ்சாயத்து அமைப்புக்களுக்கு புத்துயிர் கொடுத்தார் ராஜிவ்காந்தி, பஞ்சாயத்துராஜ் என்ற மறுமலர்ச்சிகள் தொடங்கின. அதாவது சில கூடுதல் சலுகைகள் வழங்கபட்டன. இதுபோதாதா? கட்சிகளில் பெரும் பொறுப்பு வாங்கி சென்னைக்கு செல்ல முடியாதோர், அல்லது மாவட்ட செயலாளர் எனும் செல்வாக்கான பதவிக்கு, சுப்பிரமணியபுரம் பாணியில் முயற்சித்தும் முடியாதோர் என சகலரும் முட்டிகொளும் இடம் பஞ்சாயத்து தேர்தல் ஆயிற்று. பல உடனடி கொலைகள், சில ஆறபோட்டு செய்யும் கொலைகள் , சில வகை கலவரங்கள், பற்றி எரியும் சாதி, மத பிரச்சினைகளின் மூலம் என இன்று பெரும் பிரச்சினைகளின் மூலம் இந்த பஞ்சாயத்து தேர்தல், வோட்டு, பிரிவினை என சொல்லும்படி அது போயிற்று. அப்படி என்ன இருக்கின்றது பஞ்சாயத்து மன்றங்களில் என்றால்? அது மக்களாட்சி, இந்தியாவில் மக்களாட்சி என்றால் அதன் மறுபெயர் ஊழல். கிராம சாலைகள், குடிநீர், ஏரிகள் பாதுகாப்பு, என பல மக்கள்நல திட்டங்களை நடத்தும் பொறுப்பு அதற்கு உண்டு, திட்டங்கள் என்றால் அதற்கு ஒரு தொகை அரசால் ஒதுக்கபடும், அந்த தொகையினை உரிய நிறுவணங்களுக்கு செலுத்தி மக்களுக்கு தேவையான தரமான திட்டங்களை நிறைவேற்றி தரவேண்டும். இங்குதான் பஞ்சாயத்துக்காரர்கள் இந்தியா முழுக்க புகுந்து ஆடுவார்கள், நிச்சயமாக சொல்லி கொடுப்பது கட்சிகளின் அரசுகள். "இந்த உரிமம் உனக்கு வேண்டுமா? இத்தனை சதவீதம் எனக்கு கொடுத்துவிடு", இது பஞ்சாயத் முறைகளிலும் எதிரொலிக்கின்றது. உதாரணம் குடிநீர் அமைக்கும் பணி என்றால், போர்வெல்காரரிடம் ஒரு கமிஷன், ஹார்டுவேர் கடைக்காரரிடம் ஒரு கமிஷன், தண்ணீர் தொட்டிக்காரரிடம் ஒரு கமிஷன் என கறந்துவிட்டால் எவ்வளவு வரும்? அவர்கள் என்ன செய்வார்கள்? கமிஷன் கொடுத்தது போக மீதிக்கு பணிசெய்வார்கள், விளைவு மிக விரைவில் தொட்டி இடியும், பைப் உடையும், மக்கள் அரசு ஒழிக என போராடுவார்கள். பஞ்சாயத்துக்காரர்களை உருவாக்குவதும் மக்கள் தான், எமது சாதி, எமது மதம் என்பார்கள், வாங்கும் பணத்திற்கு வாக்களிப்பார்கள், பின் அரசு சரியில்லை, அரசியல் சரி இல்லை மொத்தத்தில் இந்தியா இப்படித்தான் என டீக்கடை வாசலில் தீர்ப்புசொல்லிவிட்டு கிளம்புவார்கள். இப்படிபட்ட திட்டத்துடன் அமைக்கும் சாலை எப்படி இருக்கும்? அதில் செல்லும் அரசு வாகனங்கள் எப்படி இருக்கும்?, நாம் பார்த்துகொண்டிருப்பது போல்தான் இருக்கும். சாலைக்கும், குடிநீருக்குமே இவ்வளவு கமிஷன் என்றால் பின் எல்லாமும் எப்படி இருக்கும்? அலுவலக மிதியடி விரிப்பிலும், கழிவறை பினாயிலிலும் கூட கமிஷன் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை என்றாகிவிட்டது என்கின்றார்கள். ஊழலுக்கு அன்று கட்சிகள் கொடுத்த மறைமுக பெயர் கட்சி நிவாரண நிதி, இன்று உள்ளாட்சிமன்றங்களில் பகிரங்க பெயர் கமிஷன். அதாவது பொதுநலத்திற்கு வருபவர்கள் எல்லோரும் கமிஷன்நலம் என்ற ஒரு நலத்தில் மட்டுமே வீட்டைவிட்டு தெருவில் கால்வைக்கும் காலம் இது. வெறும் சேவை மட்டும் என சொல்லிபாருங்கள், பன்ஞாயத்து அலுவகத்தில் காந்தியின் படம் மட்டுமே இருக்கும். இப்படியாக நோயாளிகள் மிகுந்து, அது பழக்கமாகவும் ஆகிவிட்ட ஒரு மக்கள் கூட்டத்தில் ஒரே ஒருவன் ஆரோக்கியமாக இருந்தால் அது ஆச்சரிமல்லவா? அவனை விநோதமாக பார்க்கமாட்டார்களா?, கொடூர ஐ.எஸ் இயக்கத்தில் ஒரு குழு சர்வசமய பிரார்த்தனை கூடம் நடத்தினால் உலகம் எப்படி பார்க்கும்? இலங்கை புத்த சாமியார் கூட்டத்தில் ஒரு மொட்டை குழு, தமிழீழமே சரி என சொன்னால் எப்படி இருக்கும்? அப்படித்தான் மொத்த இந்தியாவும் ஏர்வாடியினை பார்க்கின்றது, ஊழல் இல்லா பஞ்சாயத்து எப்படி சாத்தியம்? உண்மையில் முடிகின்றதா? அவர்கள் என்ன சாதித்துவிட்டார்கள்? என கூர்ந்துகவனிக்கின்றது. ஊழல் இல்லை என்பதால் சில திட்டங்களை மிக தரமான முறையில் அவர்களால் செய்யமுடிகின்றது, மற்ற பஞ்சாயத்துக்களில் குற்றுயிராக கடமைக்கு செய்ய்யபடும் திட்டங்கள், இங்கு கோயில் சிலையாக மின்னுகின்றது, ஊழல் இல்லாமல் இது சாத்தியமே இல்லை. கடந்த வருடமே, மலேசிய தமிழ்பத்திரிகைகள் அதனை வெளியிட்டிருந்தன, காரணம் மலேசிய நடைபாதைகள் போலவே சில தெருக்களின் படம் அச்சிடபட்டிருந்தன. மலேசிய தமிழ்பத்திரிகைகள் தமிழக செய்திகளை அதிகம் வெளியிடும்தான். ஆனால் ஒரு பஞ்சாயத்து மன்றத்தின் சாதனையினை அன்றுதான் முதன் முதலாக அச்சிட்டார்கள். நேற்று நியூஸ்7 அலைவரிசையில் பேசி இருக்கின்றார்கள், அந்த சேனல் முதலாளிபற்றி தெரியாதா? என சிலகுரல்கள் கேட்கலாம். ஆனால் போற்றடும் பஞ்சாயத்தாக அது மாறியிருக்கின்றது என்பது முற்றிலும் உண்மை. எத்தனை லட்சம் பஞ்சாயத்து அமைப்புக்கள் உள்ள நாடு இந்தியா, ஊழலற்ற பஞ்சாயத்து என இதனை சொல்கின்றார்கள் என்றால் நிச்சயம் ஏதோ சாதித்துகொண்டிருக்கின்றது என்பதுதான் பொருள். மாறாக ஒரு குற்றசாட்டும் , ஒரு உறுப்பினர்கள் மீதும் ஒரு திட்டத்தின் மீதும் சொல்ல முடியவில்லை அல்லவா? விரைவில் அகில இந்திய அளவில் அதுவிவாதிக்கபடலாம், இந்திய அரசின் கவுரவங்களை அது பெறலாம். அரசு தயங்கிகொண்டிருந்தால் பிரச்சினையே இல்லை, ஒரு சர்வதேச மீடியா வெளியிட்டதென்றால் அதன்பின் அரசு நிச்சயம் ஓடிவரும். மிக பெரும் கவனத்தை பெற்றிருக்கும் இந்த பஞ்சாயத்து உண்மையில் செய்தது என்ன? அது மிக எளிது. கடமையினை செய்தார்கள், சேவையினை செய்தார்கள், நம்பி பொறுப்பினை கொடுத்த மக்களுக்கு துளியும் ஏமாற்றம் கொடுக்காமல் சேவை செய்தார்கள். பெரும் தொன்மை வாய்ந்த இந்திய பஞ்சாயத்து அமைப்புக்களுக்கு இன்று முன்னோடியாக விளங்கும், சோழர்களின் குடவோலை முறை நிர்வாகத்தை ஓரளவு கண்முன் காட்டும் பழந்தமிழரின் தொடர்ச்சியாக ஏர்வாடி பஞ்சாயத்து ஏற்றம் கண்டு நிற்கின்றது. அந்த பஞ்சாயத்து தலைவர் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார், மறுமுறை பதவிக்கு வரும் திட்டமில்லை என்றிருந்தார். அதனை நிச்சயம் அவர் மறுபரீசீலனை செய்ய வேண்டிய காலமிது. இது என்ன பஞ்சாயத்து தலைவர் பதவி?, எம் எல் ஏ ஆகுங்கள், எம்பி ஆகுங்கள், கெஜ்ரிவால் ஆகுங்கள் என பலர் சொல்லலாம். ஆனால் பஞ்சாயத்துக்களுக்கு வழிகாட்டுவதுதான் பணிகளில் எல்லாம் பெரும்பணி. ஏர்வாடி சமூகபணிகள், முதியோர் இல்லத்திற்கு சாலை வசதி, நம்பியாறு பராமரிப்பு , நீர் உறிஞ்சும் கம்பெனிக்கு எதிராக தீர்மானம், என பல பணிகளில் தனி முத்திரை பதித்து வழிகாட்டும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கலாம். வல்ல இறைவன் இவர்களுக்கு இன்னும் வளமும்,வாய்ப்பும் அருளட்டும், அது இந்தியா முழுக்க பரவட்டும். அதாவது அவர்கள் தங்களின் தாரக மந்திரமாக சொல்லும் "நேர்மையான ஊழலற்ற சமுதாயம் அமைப்போம்" எனும் அந்த சொல் இந்தியா முழுக்க ஒலிக்கட்டும். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |