கொள்ளை போகும் தாமிரபரணி தண்ணீர்... குளிர்பான கம்பெனிக்கு எதிராகக் கொதிக்கும் மக்கள்!
Posted Date : 15:17 (07/11/2015)
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியில் உள்ள சிப்காட் வளாகத்தில் பெப்சி குளிர்பான நிறுவனத்துக்கு ஆலை அமைக்க அனுமதி அளித்திருக்கிறது, தமிழக அரசு. அதைத்தொடர்ந்து அந்த ஆலை முதற்கட்ட பணிகளைத் தொடங்கியிருக்கும் நிலையில், ஆலைக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள், சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என பல தரப்பினர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன், பெப்சி குளிர்பான நிறுவனம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சேகரித்துள்ள சில விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
"கங்கை கொண்டான் சிப்காட் வளாகத்தில் 2005-ம் ஆண்டில் இருந்து 'கோகோ கோலா' குளிர்பான கம்பெனி இயங்கி வருகிறது. ஆரம்பத்தில் ஒரு நாளுக்கு 3 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுப்பதாக அனுமதி பெற்று, படிப்படியாக தண்ணீரின் அளவையும், அனுமதியையும் நீட்டித்து தற்போது ஒரு நாளுக்கு 10 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், அதே சிப்காட் வளாகத்தில் அமெரிக்க நிறுவனமான பெப்சி கம்பெனிக்கு 36 ஏக்கர் ஒதுக்கப்பட்டு ஆலைகட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பதினைந்தே நாட்களில் இதற்கு அரசு அனுமதி வழங்கி கட்டுமான வேலைகளும் நடந்து வருகின்றன.
இந்த 36 ஏக்கருக்கு அரசின் வழிகாட்டி மதிப்பு 5 கோடியே 40 லட்சம் ரூபாய். இதன் சந்தை மதிப்பு 15 கோடி ரூபாய். கேரளா போன்ற மற்ற மாநிலங்களில் இந்த கம்பெனியைத் துவங்க பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியதால், தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். இந்த 36 ஏக்கர் நிலத்துக்கு, பெப்சி நிறுவனம் ஒரு ஏக்கருக்கு ஒரு ரூபாய் வீதம், 98 ஆண்டு ஆண்டுகள் வரை செலுத்த வேண்டுமென்றும், 99-ம் ஆண்டு முதல் ஏக்கர் ஒன்றுக்கு 2 ரூபாய் வீதம் செலுத்த வேண்டுமென்றும் அரசு, அந்த கம்பெனியுடன் 'மாபெரும் ஒப்பந்தம்' போட்டுள்ளது. 15 கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள நிலத்துக்கு 100 ஆண்டுகளுக்கு பெப்சி நிறுவனம் செலுத்தவிருக்கும் தொகை வெறும் 3,672 ரூபாய்தான். அதோடு, இங்கிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தாமிரபரணி நதியிலிருந்து தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க அனுமதி கேட்டுள்ளது, பெப்சி நிறுவனம்.
திருநெல்வேலி, பாளையங்கோட்டை மற்றும் மேலப்பாளையம் ஆகிய மாநகராட்சிப் பகுதிகளுக்கு வாரம் இரண்டு நாட்கள் மட்டும்தான் குடிநீரே தற்போது கிடைத்து வருகிறது. இந்த நிறுவனம் தண்ணீர் எடுக்க ஆரம்பித்தால், மாவட்டத்தில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும். வரையறையே இல்லாத தாமிரபரணி நீர்க்கொள்ளையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 86 ஆயிரம் விவசாய நிலங்களும் பாதிக்கப்படும். ஏற்கெனவே கங்கை கொண்டான் சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் பல தொழிற்சாலைகளால் இப்பகுதியைச் சுற்றியுள்ள நீர் நிலைகளும் கடுமையாக மாசுபட்டுள்ளன" என்றார், முகிலன்.
இந்த விவகாரம் குறித்து சிப்காட் மேலாண்மை இயக்குனர் டாக்டர்.செல்வராஜிடம் பேசிய போது, "விவசாயிகளின் எதிர்ப்பு அரசின் கவனத்துக்கு தற்போதுதான் வந்துள்ளது. பெப்சி கம்பெனிக்கு தண்ணீர் எடுப்பதால் குடிநீருக்கும், பாசனத்துக்கும் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படுமா என்பதை ஆராய்ந்து, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இது குறித்து சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலத்திடம் பேசினோம். "சிப்காட் பெப்சி கம்பெனி விவகாரம் என்னோட டிபார்ட்மெண்ட் இல்லை" என நழுவிக் கொண்டார்.
கடந்த 2006-ம் ஆண்டு கேரள மாநிலம் பிளாச்சிவாடா பகுதியில் இயங்கிவந்த கோகோ கோலா கம்பெனியால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்ய, கேரள அரசு ஒரு குழுவை நியமித்தது. பாதிப்புகளை முழுவதும் ஆய்வு செய்த அக்குழு, 'விவசாயிகளுக்கும், மக்களுக்கும் மற்றும் சுற்றுச்சூழலுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால், கோகோ கோலா நிறுவனம், கேரள அரசுக்கு 200 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' எனப் பரிந்துரை செய்துள்ளது. ஆனால், தமிழகத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர், 'என் துறையின் கீழ் வராது' என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.
விவசாயத்துக்கும், மக்கள் குடிப்பதற்கும் தடையற தண்ணீர் வழங்க எந்த திட்டமும் போடாத அரசுகள், கோடிக்கணக்கில் கையூட்டுக்களைப் பெற்றுக் கொண்டு குறைந்த வாடகைக்கு நிலத்தைக் கொடுத்து, லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை எடுக்க அனுமதிப்பது எந்த வகையில் நியாயம் என்பதுதான் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் கேள்வி. அரசு என்ன பதில் சொல்லப்போகிறது?
மக்கள் போராடினால் வெற்றி நிச்சயம்!
"தினமும் 90 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க அனுமதி பெற்று திருச்சி மாவட்டம், சூரியூரில் இயங்கி வந்த பெப்சி நிறுவனம் மக்களின் தொடர் போராட்டத்தால் கடந்த ஜனவரி மாதம் மூடப்பட்டது. பெருந்துறை சிப்காட்டில் 71.35 ஏக்கர் பரப்பில் தினமும் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து இயங்கி வந்த கோகோ கோலா கம்பெனியின் அனுமதியும் கடந்த ஏப்ரல், 21-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. மக்களின் தொடர் போராட்டம் தாங்க முடியாமல், சிவகங்கை மாவட்டத்தில் இயங்கி வந்த கோகோ கோலா கம்பெனியை, தாங்களாகவே மூடிக் கொண்டு விட்டனர். அதனால், விவசாயிகள், மக்களின் கூட்டு முயற்சி, போராட்டத்தால் கங்கை கொண்டானில் அமைய இருக்கும் பெப்சி கம்பெனியையும் நிச்சயம் தடுத்து விடலாம். அனைத்து சமூக அமைப்புகள், விவசாய சங்கங்கள், அனைத்துக்கட்சிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து விரைவில் பெரிய அளவில் கூட்டுப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்" என்றார், முகிலன்.
"கம்பெனிகளின் கைக்கூலியா காவல்துறை?"
போராட்டங்களின் ஒரு பகுதியாக, கடந்த அக்டோபர் 27-ம் தேதி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சிப்காட் வளாக முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, போலீசார் தடியடி நடத்தியதில், அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ காவேரி உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். 3 பேரின் மண்டை உடைந்துள்ளது.
இப்போராட்டம் குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் மற்றும் தென் மண்டலப் பொறுப்பாளர் தமிழ்நேசனிடம் பேசினோம். "சிப்காட் அருகே உள்ள நால்வழிச்சாலையில் எங்கள் கட்சித்தலைவர் வேல்முருகன் தலைமையில், நெல்லை, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 500 ஆண், பெண் விவசாயிகள் மற்றும் தொண்டர்கள் பேரணியாக வந்தோம். சிப்காட் வளாக வாசலை நெருங்கும் போது காவல் துறையினர் எங்களைத் தடுத்து நிறுத்தினர். அப்போது, முன்னாள் எம்.எல்.ஏ காவேரி, 'பேரணியாப் போய் முற்றுகையிடத்தானே போறோம். ஏன் அனுமதி தர மாட்டேங்கிறீங்க... எங்களால எந்தப் பிரச்னையும் வராது'னு காவல்துறை அதிகாரிகளிடம் சொன்னார். அப்போதும் அவர்கள் அனுமதிக்கவில்லை. உடனே, 'பெப்சி கம்பெனிக்கு ஆதரவாகச் செயல்படுறீங்களா?'னு திரும்பவும் காவேரி கேட்டதும், அவரை தடியால் அடித்தனர்.
உடனே, சாலை மறியலில் ஈடுபட்டோம். அப்போதும் ஆண், பெண் என்ற பாகுபாடு பார்க்காமல் இரக்கமில்லாமல், தடி கொண்டு அடித்தனர். இதில், முன்னாள் எம்.எல்.ஏ காவேரி உட்பட 3 பேரின் மண்டை உடைக்கப்பட்டது. 10 பேர் படுகாயமடைந்தனர். அமைதியாக நடக்க வேண்டிய போராட்டம் காவல்துறையினரால் இப்படி மாறிவிட்டது. இன்னும் ஒரு மாதத்துக்குள் பெப்சி நிறுவனத்தின் அனுமதியை ரத்து செய்யாவிட்டால், நாங்களே பொக்லைன் கொண்டு கட்டடத்தை இடிப்போம்" என்றார்.
-இ.கார்த்திகேயன்
படங்கள்: எல்.ராஜேந்திரன்
http://www.vikatan.com/news/article.php?aid=54811
|