தடைகளைத் தாண்டி.....
"நம்பிமலையின் வியக்க வைக்கும் #வளவு_அருவி."
L.V சகோதரர்களின் ஓர் சாதனைப் பயணம்!
September 20 at 6:05pm
உலக்கருவி, விழுதருவி என நம்பிமலையின் உயரத்தில் இருக்கும் அருவியைத் தொட்டவர்கள் ஏர்வாடியில் மிகக் குறைவானவர்களே!
இவற்றைத் தாண்டி இருக்கும் வளவு அருவியை அடைந்தவர்கள் அரிதிலும் அரிதே!
மனித நடமாட்டம் அறவே இல்லாத அடர்ந்த காடும், கொஞ்சம் பிசகினாலும் உயிரையே வாங்கத் துடிக்கும் ஆபத்தான பாதையும் அந்த அருவிக்குச் செல்வதை தடுக்கும் தடைகள். அந்தத் தடைகளை உடைத்து முன்னேறினால்..... அடையும் ஆனந்தம் அளவில்லாதது. அருவியின் பிரம்மாண்டமும், அழகும் அப்படியே பிரம்மிக்க வைக்கும்.
கடந்த ஆண்டு நண்பர்களோடு புறப்பட்டோம். விழுதருவி விழும் மலையில் ஏறி நீண்ட தூரம் பயணித்தோம் கடுமையான களைப்பு, நேரமின்மை. அதற்கு மேல் பயணிக்க முடியவில்லை. ஒரு இடத்தில் அமர்ந்து களைப்பு நீங்க சுமார் ஒன்றரை மணி நேரம் ஓய்வெடுத்தோம். ஆற்றில் குளித்தோம். அந்த நேரத்தில் நண்பன் அசனும், ஓ.கே நகர் தம்பி தெளஃபீக்கும் விடா முயற்ச்சியோடு தனியாகவே சென்று அருவியைக் கண்டு வந்தனர்.
அருவியைப் பற்றி அவர்கள் விவரித்த விதம், அடுத்த முறை எப்படியும் அதை அடைந்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்திற்கு வித்திட்டது.
இந்த ஆண்டு அந்த வித்து விருட்சமானது. ஆம்! 17/09/2016 சனிக்கிழமை அன்று ஒன்பது நபர்கள் கொண்ட ஒரு குழுவாக மலையேறினோம்.
ஊரிலிருந்து காலை 8 மணிக்குப் புறப்பட்டு திருக்குறுங்குடி வரை பைக்கில் சென்று, அங்கிருந்து மலைக் கோவில் வரை ஜீப்பில் பயணித்து, அதன் பின்னர் ஆற்றுப் பாதை வழியே ஏறி, உலக்கருவியில் காலை உணவை பத்தே நிமிடத்தில் முடித்துவிட்டு அங்கிருந்து உடனே மலையேறி விழுதருவியைத் தொட்ட போது நேரம் சரியாக காலை 11:20.
விழுதருவியில் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே ஓய்வெடுத்து, அதன் வலது புறம் இருக்கும் சருகுகள் நிறைந்த செங்குத்தான, ஆபத்தான மலையில் அடியெடுத்து வைத்து ஏறத் துவங்கினோம்.
அதன் வழியில் இருக்கும் சுமார் 30 மீட்டருக்கும் அதிகமான ஆளம் கொண்ட, இருள் கவ்விய, கடந்தைகள் நிறைந்த தரைக் குகையை கொஞ்சம் பயத்தோடு சப்தமின்றி அமைதியாகக் கடந்தோம். கடந்த முறை அதன் ஆபத்தை உணராமல் சென்றதால் நண்பர்கள் இருவரைக் கடந்தைகள் பதம் பார்த்தது. உயிர் போகும் அந்த வலியின் பாதிப்பு ஒரு மாதம் வரை இருந்ததாக நண்பர் ஆசிக் அஹ்மது சொன்னது மறக்க முடியாதது.
மலையேறி மேலுள்ள ஆற்றை அடைந்ததும் ஆற்றின் குறுக்கே சுமார் 22 அடி உயரம் கொண்ட, சரியான பிடிமானம் இல்லாத பெரும் பாறை. அதைத் தாண்டாமல் அடுத்து ஒரு அடிகூட முன்னேற முடியாது. அனைவராலும் அதில் வெறுமனே ஏறுவது என்பது அசாத்தியமானது. மட்டுமல்ல மிக மிக ஆபத்தானதும் கூட.
ஆனாலும்... தம்பி சாமு பத்தே வினாடிகளில் அதில் அசராமல் ஏறி, நாங்கள் கொண்டு சென்ற கயிறை மேலிருந்த ஒரு மரத்தில் கட்டி கீழே தொங்கவிட்டார். கயிற்றைப் பற்றிக் கொண்டு அனைவரும் கவனத்தோடு அதை ஏறிக் கடந்தோம்.
தரையிலும், பெரும் பெரும் பாறைகளிலும், சில இடங்களில் முட்டளவு மற்றும் இடுப்பளவு நீரிலும் என நடந்து, ஆங்காங்கே 3 நிமிடங்கள் 5 நிமிடங்கள் என்ற குறுகிய ஓய்வெடுப்புகளுக்குப் பின் தொடர்ந்து பயணித்தோம்.
வழியில் ஏற்பட்ட இளைப்பும், களைப்பும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.
முற்றிலும் ஓய்வடைந்து, நாவு வரண்டு தண்ணீர் குடிக்கும் போதெல்லாம்... "பாய் நோன்பு நோற்று களைத்து, தொண்டை வரண்டு, அசந்து போய் நோன்பு திறந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கு பாய் என்றார் தம்பி ரியாஸ் அஹ்மத். மலையேறிய அந்த நடைப் பயணத்தில் இவ்வாறு 7 முறைக் கூறிவிட... இறுதியாக...... இன்று ஒரே நாளில் மொத்தம் 7 நோன்புகள் நோற்று திறந்தது போல இருக்கிறது என்று, தம்பி ரியாஸ் அஹ்மத் சொன்ன வார்த்தைகள்... அனைவருக்கும் நகைச்சுவையாக இருந்தது. ஆனாலும்... அதுவே உண்மை.
விழுதருவி மலையை ஏறிக் கடந்ததும் பயணம் முழுவதும் ஆற்றுப் பாதையில் தான் என்றாலும்.... பயணம் அவ்வளவு எளிதானதல்ல.....
அடர்ந்த காடும், ஆங்காங்கே கிடக்கும் சில மிருகக் கழிவுகளும், அச்சுறுத்தும் பெரும் பாறைகளின் பிரம்மாண்டமும் நம் உறுதியைக் குலைத்து திரும்பிவிடலாமா? என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். சில இடங்களில் சிலருக்கு அந்த எண்ணம் ஏற்பட்டாலும்.... திரும்பிச் செல்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற உறுதியான வைராக்கியத்தோடு சென்றோம்! வென்றோம்!
நிர்ணயித்துச் சென்ற நேரத்தை விட அதிகமாகவே நேரம் பிடித்தது.... ஆம்! வளவு அருவி என்ற அந்த இலக்கை அடைந்த போது நேரம் சரியாக 01:30.
மழை இல்லாததாலும், கடும் வெயிலின் தாக்கத்தாலும் அருவியின் நீர் வரத்து வெறும் 15% மட்டுமே இருந்தது. என்றாலும் அதுவே மிகப் பிரம்மாண்டமாக, கம்பீரமாக காட்சி அளித்தது.
மிக உயரமான, செங்குத்தான, கரடு முரடான பாறைகளின் வழியே பால் போன்ற வெண்மையில் பாய்ந்து வந்த தண்ணீர் மனம் கவர்ந்து களைப்புகளைக் களைந்தது.
உலக்கருவி மற்றும் விழுதருவியைப் போலவே வளவு அருவியின் தண்ணீரும் கசத்தில் தான் விழுகிறது. இதைவிட அகலத்தில் மிகப்பெரிய கசத்தை நம்பிமலையில் நாம் கண்டதே இல்லை. கசம் அகலமாக இருந்தாலும் ஆழம் மிகவும் குறைவே. தண்ணீர் மிகக் குறைவாக அன்றைய தினம் சுமார் ஒரு 5 அடி மட்டுமே ஆழம் இருந்தது.
அருவியை ஒட்டிய பாறைகளில் சாதாரணமாக நின்றவாரும், அமர்ந்தவாரும் குளிக்க முடியும். இது நம்பிமலை அருவிகளில் வளவு அருவியின் தனிச்சிறப்பு.
அழகோடு எப்போதும் ஒரு ஆபத்தும் இருக்கும் என்பது போல... தண்ணீர் வடியும் பாறைகளில் ஆங்காங்கே இரத்தம் உரிஞ்சும் அட்டைப் பூச்சிகளை அதிகமாக காண முடிகிறது. கவத்தோடு குளித்தால் கொண்டு சென்ற இரத்தம் குறையாமல் திரும்பலாம்.
அல்லாஹ்வுடைய படைப்பின் வல்லமையை பறைச் சாற்றும் அற்புதக் காட்சிகளை ஏராளம் எராளம் காணலாம். விதவிதமான மரங்கள், வியக்க வைக்கும் பூச்சிகள், பாறைகள் அவற்றின் மாறுபட்ட கோணங்கள், அவைகள் ஒன்றை ஒன்று தாங்கி நிற்க்கும் தோரணைகள், அவைகளின் இடுக்குகளிலிருந்து வெளிவரும் கீச் பூச் சப்தங்கள், உயரமான இடத்தில் பாறையில் முளைத்திருந்த வாழை மரம், தண்ணீரின் தன்மைகள், ஐந்து நிமிடத்திற்கு ஒரு தடவை சூரியனை மறைத்து, மறைத்து கடந்து செல்லும் மேகக் கூட்டங்கள், அப்போது ஏற்படும் மாற்றங்கள் இப்படி ஏராளமான அனுபவங்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கும்.
வளவு அருவியில் குளித்து விட்டு அங்குள்ள பாறைகளிலும், மரங்களிலும் L.V என்ற வாசகத்தைப் பதித்து விட்டு, சுமார் 2 மணிக்கு விடை கொடுத்துத் திரும்பி நடந்தோம்.
இறங்கு பாதை என்பதால் களைப்பு தெரியவில்லை. அதனால் இடையில் எங்கும் ஓய்வும் தேவைப்படவில்லை.
தம்பி சாமும், ரியாசும் விழுதருவி மலையின் மேலிருந்து விழுதுகளைப் பிடித்து ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு கீழே இறங்கி பின்னர் அங்கிருந்து கசத்தில் குதித்து வந்தனர். மற்றவர்கள் சருகுகள் நிறைந்த செங்குத்தான மலையில் மரங்களில் கயிறு கட்டி இறங்கினோம்.
அடுத்துவந்த உலக்கருவி மலையில் நண்பன் ஊனாப்பா முகைதீன், தம்பி செய்யதப்பா, பெஸ்ட் தெள்ஃபீக் ஆகியோர் மலைப் பாறை வழியே இறங்கினோம்.
மச்சான் சித்தீக், தம்பி சாமு, ஆலிம், ஏஜாஸ், ரியாஸ் ஆகியோர் உலக்கருவியின் உச்சியிலிருந்து அதன் கசத்தில் குதித்து இறங்கினார்கள்.
எந்த முன் அனுபவமும் அறவே இல்லாமல், சரியாக நீச்சலே தெரியாத நிலையில் தம்பி ஏஜாஸ் அருவியின் உச்சியிலிருந்து ஆழமான கசத்தில் தைரியமாக குதித்த் விழுந்து இறங்கியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அவன் தைரியத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
உலக்கருவிக்கு வந்து சேர்ந்த போது நேரம் மாலை 4:50. அங்கே 30 நிமிடங்கள் குளித்துவிட்டு, பசியோடு இருந்த வயிறை நிரப்பிவிட்டு, மிச்சமான நம்ம பாய் கடை புரோட்டாவை கும்மாளமடித்து வந்த குரங்குக் கூட்டத்திற்கு தானமாகத் தாரை வார்த்துவிட்டு, தரையை நோக்கி இறங்கினோம்.
மீண்டும் கோவில்... திருக்குறுங்குடி ஜீப் பயணம்... காலை முதல் மாலைவரை அங்கு சாலை ஓரத்தில் நின்றதால் பைக்குகளில் படிந்திருந்த தூசிகளைத் தட்டிவிட்டு, அப்படியே சூடான சுக்கு காப்பியோடு சுவையான பஜ்ஜியையும் உள்ளே தள்ளிவிட்டு கிளம்பினோம்.
வீட்டுக்குள் நுழைந்த போது நேரம் சரியாக 7:10.
இயற்கையின் மடியில் ஓர் இனிய நிறைவான பயணம். களைப்புகள் இருந்தாலும்.... காலத்தால் மறையாத பல நினைவுகளை மனதில் பதித்துவிட்டது.
ஆருயிர் நண்பர்கள் வெல்டிங் ஷரீஃப், Mohamed Sharif, மலைகளின் அரசர்களான குவைத் சரிப் Asan Anis ஆகியோர் உடன் இல்லாதது பெரும் குறையே!
எங்கள் அடுத்த இலக்கும்,திட்டமும் ரெடி. நண்பன் அசனின் வருகைக்காகா காத்திருக்கிறோம்.
07/09/2016 அன்று வளவு அருவி சென்றவர்கள்: 1) சித்தீக், 2) ரிஃபாய், 3) முகைதீன் (ஊனாப்பா), 4) சாமு, 5) தவ்ஃபீக் (பெஸ்ட்), 6) ரியாஸ், 7) ஏஜாஸ், 8) செய்யதப்பா, 9) ஆலிம்
வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் சென்று வாருங்கள்! கவனத்தோடு....
(குறிப்பு: பெயர் இல்லாத அல்லது அறியப்படாத அந்த அருவிக்கு #வளவு_அருவி என்று பெயர் சூட்டியது நம் சகோதரர்கள் தான்)
-அபூ அஹ்மத்- L.V.
.
https://www.facebook.com/groups/427861373951231/permalink/1180476232023071/
|