========================================
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது. விடுதலைப் போரில் முஸ்லிம்கள் என்ற இந்தப் பக்கத்தில் நாம் முஸ்லிம்கள் இந்த மண்ணின் சுதந்திரத்திற்காக செய்த தியாகங்களையெல்லாம் கண்டு வந்தோம். இந்த வரிசையில் திருநெல்வேலி மாவட்டத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளை இந்த பதிவில் காண்போம்
பேட்டை வீ.கே. அப்துல் ஹமீத்
********************************************
திருநெல்வேலி பேட்டை முஹம்மது நயினார் பள்ளிவாசல் தெருவில் 1909-ல் பிறந்த வி. கே. அப்துல்ஹமீது 1929 போராட்டத்திலும் மதுரையில் கள்ளுக்கடை மறியலில் 1931 லும் கலந்து கொண்டு சிறை சென்றவர். திருநெல்வேலி நகர்மன்ற துணைத் தலைவராக இருந்தவர். 1-6-1959-ல் காலமானார்.
அப்துல் ஹமீத் முஹம்மத்
*************************************
காதர்முகைதீன் நயினார் இராவுத்தர் புதல்வராக 1904-ல் பிறந்த அப்துல் ஹமீத் முஹ்ம்மத் ஒத்துழையாமைப் போரில் கலந்து கொண்டு திருச்சி சிறையில் வாடியவர்.
செங்கோட்டை அப்துல் மஜித்
******************************************
செங்கோட்டை மேலுரைச் சேர்ந்த சாகுல் ஹமீதுவின் மகனாக 1907-ல் பிறந்த அப்துல்மஜித் 1927 போராட்டங்களிலும் சட்ட மறுப்பு இயக்கப் போராட்டங்களிலும் கலந்து கொண்டவர்.
தென்காசி அப்துஸ்ஸலாம்
****************************************
முகம்மது இஸ்மாயில் புதல்வராக 3-7-1904-ல் 175 நடுப்பேட்டைத் தெரு தென்காசியில் பிறந்த அப்துஸ்ஸலாம் 1922-ல் அந்நியத்துணி எதிர்ப்பு போரிலும் நாக்புர் கொடிப்போரிலும் கலந்துக் கொண்டு ஒரு வருடத்திற்கு மேல் நாக்புர் சிறையில் வாடியவர்.
பேட்டை முஹம்மது இப்ராஹீம்
***********************************************
திருநெல்வேலி பேட்டை ரகுமானியா பள்ளிவாசல் சன்னதி தெருவில் வாழ்ந்த அப்துல் ஹமீதுவின் புதல்வராக 1900-ல் பிறந்த முகம்மது இப்ராகிம் 1922 போராட்டத்தில் கலந்துக்கொண்டு கடலூர் சிறையில் வாடியவர்.
பேட்டை முஹம்மது இஸ்மாயில்
************************************************
திருநெல்வேலி பேட்டை ரகுமானியா பள்ளிவாசல் மேலத்தெருவைச் சேர்ந்த முகம்மது இஸ்மாயில் 1897-ல் பிறந்தவர். 1921 போராட்டத்திலும்; நாக்புர் கொடிப்போரிலும் கலந்துக் கொண்டு நாக்புர் சிறையில் வாடியவர்.
கடையநல்லூர் எஸ்.எம் அப்துல்மஜித்
*******************************************************
கடையநல்லூர் எஸ்.எம் அப்துல்மஜித் சுதந்திர தமிழகத்தில் மந்திரியாக இருந்தவர். இவரது குடும்பம் நாட்டு விடுதலைக்காக நல்ல தொண்டாற்றியிருக்கிறது.
தென்காசி எஸ்.எல்.எஸ் முஹம்மது முஹையத்தீன்
**********************************************************************
தென்காசி எஸ்.எல்.எஸ் முஹம்மது முஹையத்தீன் 1941ல் போர் எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு சிறைத்தண்டனை பெற்றவர்.
திருநெல்வேலி எம். முஹையத்தீன் இப்ராஹீம் மரைக்காயர்
**********************************************************************
இவர் 1894-ல் பிறந்தவர். கற்றறிந்தவர். 1921 ஒத்துழையாமைப் போரிலும் 1922-23-ல் கள்ளுக்கடை மறியலிலும் கலந்துக் கொண்டு திருச்சி சிறையில் வாடியவர்.
தூத்துக்குடி முஹையத்தன் ஆரீப்
**********************************************
25-11-1923ல் பிறந்த தூத்துக்குடி 47 ஜெயலானி தெருவைச் சேர்ந்த முகையதீன் ஆரீப் கற்றறிந்தவர் 1942 ஆகஸ்ட் புரட்சியில் பங்கேற்றவர்.
தென்காசி நாகூரப்பா இராவுத்தர்
*************************************************
தென்காசி தாலுகா விசுவநாதபுரத்தைச் சேர்ந்த முகம்மது உசைன் புதல்வராக 1915ல் பிறந்த நாகூரப்பா இராவுத்தர் கல்வி பயின்றவர். 1936ல் கள்ளுக்கடை மறியலிலும், அந்நியத்துணி எதிர்ப்பு போரிலும் கலந்துக்கொண்டவர்.
தென்காசி சாஹித்
****************************
வெள்ளை இராவுத்தரின் மகனாக 1906-ல் தென்காசியில் பிறந்த சாஹித் 1942 ஆகஸ்ட் புரட்சியில் பங்கேற்று வேலூரிலும், தஞ்சாவூர் சிறப்பு ஜெயிலிலும் வாடியவர்.
பணகுடி செய்யத் அஹமத் கபீர்
***********************************************
செய்யது மீராசாகிப் புதல்வராக 1918ல் பிறந்த பணகுடி செய்யது அகமது கபீர் 1942 ஆகஸ்ட் போரில் கலந்துக்கொண்டு அலிப்பூர் ஜெயிலில் வாடியவர்.
நெல்லை செய்யது ஜலால்
***************************************
திருநெல்வேலியில் 11-7-1914ல் பிறந்த செய்யது ஜலால் 1932ல் கள்ளுக்கடை மறியலிலும், மேலும் அந்நியத் துணி எதிர்ப்பு, தனி நபர் சத்தியாக்கிரகம் ஆகியவற்றில் பங்கேற்றுப் பாளையங்கோட்டை ஜெயிலில் வாடியவர்
மேலப்பாளையம் வி. எஸ். டி முகம்மது இப்ராகீம்
************************************************************************
1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்; காங்கிரஸ் கமிட்டி சார்பில் தன் பங்களாவில் இரகசியமாக கே.பி.மருவாலா வெளியிட்ட கிராம சுதந்திர பிரகடனத்தை சைக்ளோஸ்டைல் செய்து விநியோகம் செய்தார். ரிசர்வ் போலீசின் தடியடியால் மயக்கமடைந்த எம்.ஆர். உலகநாதனுக்குத் துணிந்து சிகிச்சை அளித்தவர். நகர காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், ஜில்லா காங்கிரஸ் கமிட்டி உதவித் தலைவராகவும், திருநெல்வேலி ஜில்லா போர்டு மெம்பராகவும், மேலப்பாளையம் நகர் மன்றத் தலைவராகவும் பணியாற்றிய இவரது தேசியச் சேவை நிலைத்து நிற்கக் கூடியது
பணகுடி அம்ஜியான் சாஹிப் மற்றும் கள்ளிகுளம் முகைதீன்
***************
1926-ல் நெல்லை மாவட்டத்தில் சுதந்திரப் போரில் தீவிரப் பங்கெடுத்துக் கொண்டவர்களில் இராதாபுரம் தாலுகா பணகுடி அம்ஜியான் சாஹிப், கள்ளிகுளம் முகைதீன் ஆகியோர் முன்னணியில் நின்றவர்கள். நாங்குநேரி தாலுகா காங்கிரஸ் கமிட்டியில் தீவிர பணியாற்றி ஆற்றியவர்கள். அரசின் அடக்கு முறையை எதிர்த்து தேசியப் பிரச்சாரம் வெற்றிகரமாக நடைபெற கள்ளிகுளம் முகைதீன் துணிச்சலான செயல்களில் இறங்கியவர்.
நம் கண்ணறையின் ஒளிபடாமல் கல்லறையில் துயிலும் இந்தத் தியாகிகள், கால காலங்களுக்கும் முஸ்லீம்கள் இந்த மண்ணில் யாருக்கும் தாழாமல் தன்மானத்தோடு, நிமிர்ந்த தலையோடு வாழவும், ஜனநாயகத்தால் ஆளவும், நாளும் நாளும் உத்வேகம் தந்து கொண்டே இருப்பார்கள். அது உண்மைத் தியாகிகளை மீண்டும் உருவாக்கி புதிய வரலாறுகளைப் படைக்கும்.
தகவல்: ஹாலித் உதுமான் முஹைதீன்
https://www.facebook.com/viduthalaiporilindianmuslims/photos/a.348345445350054.1073741827.348328472018418/591247011059895/?type=3