Posted by Haja Mohideen
(Hajas) on 10/13/2016 6:27:21 AM
|
|||
எல்லா மானியங்களையும் உறிஞ்ச வருகிறது ஆதார் அட்டை !in இந்திய தரகு முதலாளிகள், தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம், பா.ஜ.க, புதிய ஜனநாயகம் by வினவு,October 13, 2016மானியங்கள், கல்வி, முதியோர் உதவித் தொகைகள் உள்ளிட்ட அரசின் சேவைகளைப் பெறுவதற்கு, ஆதார் எண் வைத்திருக்க வேண்டும்; இல்லையென்றால், இந்த உதவிகள்/சேவைகள் மறுக்கப்படும் என்ற இடியை, மைய, மாநில அரசுகள் அதிரடியாகப் பொதுமக்கள் மீது இறக்கி வருகின்றன. மானிய உதவிகள் பெறுவதற்கு மட்டுமல்ல; வேலையில் சேருவதற்கு, வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு, ஓய்வூதியம் பெறுவதற்கு, புதிய தொலைபேசி இணைப்பிற்கு, ஏன் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்குக்கூட ஆதார் எண் கேட்கப்படுகிறது. சுடுகாட்டில் அடக்கம் செய்ய பிணத்தின் ஆதார் எண் என்ன எனக் கேட்காதிருப்பது மட்டும்தான் பாக்கி. அந்த அளவிற்கு அரசின் அனைத்து மட்டங்களிலும் ஆதார் எண் இந்தியக் குடிமகனின் அடையாளமாகிவிட்டது. அரசின் மானியங்கள் மற்றும் உதவிகளைப் பெறுவதற்கு, ஆதார் எண்ணைக் கட்டாயம் வைத்திருக்கத் தேவையில்லை என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒருபுறம் இருந்தாலும், அது பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் இதுவரை 147 சேவைகளை ஆதார் எண்ணுடன் இணைத்துவிட்டது, அரசு. ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு, மனுசனைக் கடிச்ச கதையாக, தற்போது ரேசன் அட்டைகளை ஆதார் எண்ணோடு இணைக்கும் நடைமுறை தமிழகத்திலும் முடுக்கி விடப்பட்டிருக்கிறது. இதுவரை நாடெங்கும் 69% ரேசன் அட்டைகள் அவற்றுக்கான ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்திருக்கும் மைய அரசு, மீதம் உள்ள அட்டைகளை விரைந்து இணைப்பதற்குக் கெடு தேதிகளையும் நிபந்தனைகளையும் விதித்திருக்கிறது. இதுவரை நடந்த இணைப்பின் மூலம், ”2.33 கோடி போலி ரேசன் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மூலம் 14,000 கோடி ருபாய் அளவிற்கு மானியம் மிச்சமாகியிருப்பதாகவும்” மைய அமைச்சர் பஸ்வான் கூறியிருக்கிறார். அதாவது, போலி ரேசன் கார்டுகளை ஒழித்து, ரேசன் கடை அரிசி கள்ளச் சந்தைக்குக் கடத்தப்படுவதைத் தடுக்கும் உயர்ந்த நோக்கில்தான் இந்த இணைப்பு கட்டாயமாக்கப்படுவதைப் போல நியாயவாதம் கற்பிக்கப்படுகிறது.
ஆதார் எண்ணை ரேசன் அட்டையோடு இணைத்துவிட்டால் போலி ரேசன் கார்டுகள் ஒழிந்துவிடும் என்பது, கள்ளன் பெரிசா, காப்பான் பெரிசா என்ற புதிரைப் போன்றது. சமையல் எரிவாயு பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைத்தபோதும் இதைத்தான் சொன்னார்கள். ஆனால், வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு உருளைகள் டீக்கடைகளிலும், ஓட்டல்களிலும் மடைமாற்றப்படுவது நின்றுபோய்விட்டதா, என்ன? ![]() மதுரை மாவட்டத்தில் ஆதார் அட்டைக்காகப் புகைப்படம் எடக்க அரசு சேவை மையம் முன் காத்திருக்கும் பொதுமக்கள் அரசின் உண்மையான இலக்கு போலி ரேசன் கார்டுகளை ஒழிப்பது அல்ல; மாறாக, உணவு மானியத்தைப் படிப்படியாக வெட்டுவது. இதன் முதல்படியாக, ரேசன் கார்டுகளோடு குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்களையும் குடும்பத் தலைவரின் வங்கிக் கணக்கையும் இணைக்கிறார்கள். அடுத்து, மானிய விலையில் ரேசன் கடை மூலம் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களை விநியோகிப்பதை நிறுத்திவிட்டு, அவற்றை ரேசன் கடையில் சந்தை விலையில் வாங்கிக் கொள்ளுமாறும், அதற்கான மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் உத்தரவு வரும். ஏற்கெனவே புதுச்சேரி, சண்டிகர், தாத்ரா-நாகர் ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த நேரடி மானியத் திட்டம் இனி நாடெங்கும் நடைமுறைப்படுத்தப்படும். இதன் வெள்ளோட்டமாக, 39 மாவட்டங்களில் மண்ணெண்ணெய்க்கான மானியம் இனி வங்கிக் கணக்கில்தான் செலுத்தப்படும் என அறிவித்துவிட்டார், நிதியமைச்சர் அருண் ஜெட்லி.
இந்திய கிராமப்புறங்களில், குறிப்பாக வட இந்திய கிராமப்புறங்களில் ரேசன் கடைகள் தினந்தோறும் திறக்கப்படுவதில்லை. ரேஷன் கடை திறக்கப்படும் நாளன்று கையில் பணம் இருக்க வேண்டும். மானிய விலையில் விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களை வாங்குவதற்கே பணத்தைப் புரட்ட முடியாமல் திண்டாடும் ஏழைகள் – பழங்குடியின மக்களை, சந்தை விலையில் பொருட்களை வாங்குமாறு தள்ளுவதென்பது, அவர்களைப் பட்டினிக்குள் தள்ளுவதற்கு ஒப்பானது. நேரடி உணவு மானியத் திட்டத்தின்படி, ஒரு ரேஷன் அட்டைதாரர் பொருள் வாங்காவிட்டால், மானியம் வங்கிக் கணக்கில் சேராது. இதன் விளைவு என்னவென்றால், சந்தை விலையில் பொருளை வாங்குவதற்குரிய பணத்தைப் புரட்ட முடியாத ஏழைகள் பொது விநியோகத்திலிருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள். வறுமைக் கோட்டுக்கான வரையறையை மாற்றி அமைத்து ஏழைகளை ஒழித்துக் கட்டியதுபோல, ஏழைகளைப் பொது விநியோகத்திலிருந்து அப்புறப்படுத்துவதன் மூலம் மானியத்தைச் சேமிக்கப் போகிறது அரசு. ரேஷன் கடைகளுக்கு மூடுவிழா நடத்தாமலேயே, நைச்சியமான வழியில் அவற்றை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களாக மாற்றும் ரசவாதம்தான் நேரடி உணவு மானியத் திட்டம். பொதுமக்களைச் சந்தை விலைக்கு பொருட்களை வாங்குவதற்குப் பழக்கப்படுத்துவதன் மூலம், உணவுப் பொருட்களுக்கு வழங்கப்படும் மானியத்தை, அவர்கள் அறியாமலேயே வெட்டுவது அரசுக்கு மிகவும் எளிதாகவிடும். வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல, ரேஷன் கடையில் விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களுக்கும் அவற்றின் சந்தை விலைக்கும் இடையிலான வித்தியாசம் மெல்லமெல்ல வெட்டப்படும். சமையல் எரிவாயு உருளைக்கான மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தும் நடைமுறை வந்த பிறகு, மிகச் சமீபமாக எரிவாயு உருளையின் விலையை மாதந்தோறும் இரண்டிரண்டு ரூபாயாக அரசு ஏற்றி வருவதை யாராலும் அறியமுடிகிறதா? பொது விநியோகத் திட்டத்தின் மூலம் மானிய விலையில் உணவுப் பொருட்களை விநியோகிக்கும் கொள்கையும் நடைமுறையும் இருப்பதால்தான், திறந்த சந்தையில் உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துவிடாமல் ஓரளவிற்காவது கடிவாளம் போட முடிகிறது. இந்தக் கொள்கையைக் கைவிடுவதென்பது, உணவுப் பொருட்களின் விலையை இனி வர்த்தகச் சூதாடிகள் தீர்மானிப்பதற்குத் தரப்படும் சுதந்திரமாகும். சில்லறை வியாபாரத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் இறங்குவதற்குக் காத்திருக்கும் சூழலில் பொது விநியோக முறையில் வரவுள்ள நேரடி உணவு மானியத் திட்டம், மக்களுக்கு இதுவரை கிடைத்து வந்த உணவுப் பாதுகாப்பைக்கூட இல்லாது ஒழித்துவிடும். அப்படிபட்ட அபாயகரமான நிலை வந்த பிறகு எதிர்ப்பதைவிட, மானியத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும் அரசின் நயவஞ்சகத் திட்டத்தை இன்றே எதிர்த்துப் போராட பொதுமக்கள் தயாராக வேண்டும். வருமுன்னர் காவாதான் வாழ்க்கை என்னவாகும் என்பதைப் பட்டுத்தான் தெரிந்துகொள்ள வேண்டுமா? – அழகு http://www.vinavu.com/2016/10/13/aadhar-card-to-suck-dry-all-subsidies/ |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |